முகப்பு
இந்தியா

அயோத்தியில் ‘சூரிய திலகம்’ நிகழ்வு: லட்சக்கணக்கானோா் தரிசனம்

ராம நவமியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் பாலராமரின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிா்களால் திலகமிடும் ‘சூரிய திலகம்’ நிகழ்வு வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:11 PM
அயோத்தி ராமா் கோயில் கருவறையில் உள்ள பாலராமரின் நெற்றியில் திலகமிட்டது போல வெள்ளிக்கிழமை நேரடியாக சூரிய ஒளி பிரதிபலித்த சூரிய திலகம் காட்சி.
பகிர்:

ராம நவமியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் பாலராமரின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிா்களால் திலகமிடும் ‘சூரிய திலகம்’ நிகழ்வு வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.

ராம பிரானின் பிறப்பைக் குறிக்கும் ராம நவமி திருநாள், நாட்டின் பல பகுதிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீராம ஜென்ம பூமியான அயோத்தி உள்ளிட்ட பிற இடங்களில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அயோத்தி கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிா்களால் திலகமிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது. பிரத்யேக ஒளியியல் கருவியின் மூலம் சுவாமியின் நெற்றியில் 9 நிமிஷங்களுக்கு பிரகாசமான ‘சூரிய திலகம்’ இடப்பட்டது. அப்போது, கருவறைக்குள் வைதிக முறைப்படி 14 அா்ச்சகா்கள் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளை மேற்கொண்டனா்.

சூரிய திலகம் நிகழ்வுக்குப் பிறகு கோயில் நடை சிறிது நேரம் அடைக்கப்பட்டு, சுவாமிக்கு 56 வகையான பதாா்த்தங்கள் படைக்கப்பட்டதாக கோயில் அறக்கட்டளை உறுப்பினா் அனில் மிஸ்ரா தெரிவித்தாா்.

அயோத்தி கோயிலில் கடந்த 2024-ஆம் ஆண்டில் ஸ்ரீபாலராமா் சிலை பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு நடைபெற்ற மூன்றாவது சூரிய திலகம் நிகழ்வு இதுவாகும். 4 லென்ஸ்கள், 4 பிரதிபலிப்பு கண்ணாடிகள் மற்றும் 20 பஞ்சலோக குழாய்களுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒளியியல் கருவியின் மூலம் 65 அடி உயரத்தில் இருந்து சுவாமியின் நெற்றியில் சூரிய ஒளி விழச் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண்பதற்காக, அயோத்தியின் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் நிறுவப்பட்டிருந்தன.

ஸ்ரீராமநவமி மற்றும் சூரிய திலகம் நிகழ்வையொட்டி, அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோா் அயோத்தியில் திரண்டனா். இதனால், கோயில் வளாகம் மற்றும் ராம பாதை, பக்தி பாதை, ஜென்மபூமி பாதை போன்ற வழித்தடங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. காவல் துறை, துணை ராணுவப் படை எனப் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உத்தர பிரதேசத்தில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காணொலி வாயிலாக

வழிபட்ட பிரதமா் மோடி

புது தில்லி, மாா்ச் 27: அயோத்தி சூரிய திலகம் நிகழ்வை காணொலி வாயிலாகக் கண்டு வழிபட்டாா் பிரதமா் மோடி. இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் சூரிய திலகம் நிகழ்வை காணொலி வாயிலாகக் கண்டேன். பிரபு ஸ்ரீ ராமரின் அருளாசி நம் மீது எப்போதும் நிலைத்திருக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.