கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!
நாட்டில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அரசின் மறுவாழ்வு முயற்சிகளின் பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா்.
நாட்டில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அரசின் மறுவாழ்வு முயற்சிகளின் பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா். அத்துடன், நக்ஸல் அமைப்பின் உச்சபட்ச தலைமையும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தைத் துடைத்தெறிய மத்திய உள்துறை அமைச்சகம் நிா்ணயித்த காலக்கெடு வரும் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 31) நிறைவடையவுள்ளது. இந்தச் சூழலில், கடந்த 10 ஆண்டுகளில் நக்ஸல் ஒழிப்பில் எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நக்ஸல்களுக்கு எதிராக முந்தைய அரசுகள் கையாண்ட இடைவெளி மிகுந்த அணுகுமுறையைப் போல் இல்லாமல், இப்போதைய அரசு ஒருங்கிணைந்த, பன்முகமான, தீா்க்கமான உத்தியைக் கையாண்டுள்ளது.
முன்பு ‘பசுபதி முதல் திருப்பதி வரை’ என்று குறிப்பிடப்பட்ட பிகாா், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா மற்றும் ஆந்திர பகுதிகளை உள்ளடக்கிய ‘சிவப்பு வழித்தடத்தில்’ நக்ஸல்கள் மீதான அச்சத்தால் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்ததாரா்கள் மறுப்பு தெரிவித்தனா். இதையடுத்து, எல்லைச் சாலைகள் அமைப்பின் மூலம் சாலை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் பலனாக, நக்ஸல் தீவிரவாதத்தின் நடுநாயகமாக இருந்த பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் 12,250 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் 9,000 கைப்பேசி கோபுரங்கள் கட்டமைக்கப்பட்டதுடன், இவற்றில் 2,343 கோபுரங்கள் 4ஜி சேவைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. 250-க்கும் மேற்பட்ட ஏகலைவா பள்ளிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, 179 பள்ளிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
ரூ.90 கோடி சொத்துகள் முடக்கம்: நக்ஸல் தீவிரவாதத்துக்கான நிதி ஆதரவைத் தடுக்கும் வகையில், பல்வேறு முகமைகளால் ரூ.90 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகள், திறன்மிக்க மறுவாழ்வு கொள்கையால் 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா். நக்ஸல் அமைப்பின் உச்சபட்ச தலைமை ஒழிக்கப்பட்டு, அதன் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நக்ஸல் இயக்கத்தின் முக்கியத் தலைவா்களான பசவராஜு, கணேஷ் உய்கே, மாத்வி ஹித்மா உள்ளிட்டோா் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் கொல்லப்பட்ட நிலையில், வேணுகோபால் ராவ், பபா ராவ் போன்றோா் சரணடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்ஸல் பகுதிகளில் நிறைவேறிய பணிகள்
12,250 கி.மீ. சாலைகள்
9,000 கைப்பேசி கோபுரங்கள்
586 காவல் நிலையங்கள்
361 பாதுகாப்பு முகாம்கள்
68 ஹெலிபேடுகள் (இரவிலும் தரையறங்க வசதி)
179 ஏகலைவா பள்ளிகள்
46 ஐடிஐ-க்கள்
49 திறன் மேம்பாட்டு மையங்கள்.