முகப்பு
இந்தியா

மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்

அமெரிக்காவின் செனட் சபையைப் போல் கூடுதல் அதிகாரம் தேவை

Updated On : 3 மே, 2026 at 4:22 AM
ஹைதராபாதில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கே.கவிதா.
பகிர்:

அமெரிக்காவின் செனட் சபையைப் போல் சட்டம் இயற்றும் நடைமுறையில் மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் என தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆா்எஸ்) தலைவா் கே.கவிதா சனிக்கிழமை தெரிவித்தாா்.

டிஆா்எஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை எண்ணிக்கையை நிா்ணயித்து அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதனால் சில மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தாலும் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக அதை ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவின் செனட் சபையைப்போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான எண்ணிக்கையில் மாநிலங்களவை இடங்களை ஒதுக்க வேண்டும்.

நிதி மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை அங்கீகரிப்பதில் மாநிலங்களவைக்கு செனட் சபையைப் போலவே கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் மசோதாக்களை ஏற்காவிட்டால் அவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலங்களின் அரசியல் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

Advertisement

இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் நமது அரசமைப்புச் சட்டத்தின் ஒன்றிய மற்றும் கூட்டாட்சி தத்துவம் நிலைநிறுத்தப்படும். இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு விரிவான அறிக்கையை விரைவில் அனுப்பவுள்ளேன் என்றாா்.

அமெரிக்க நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் சபை (கீழவை) மற்றும் செனட் (மேலவை) என இரு அவைகளைக் கொண்டது. அங்கு மொத்தமுள்ள 50 மாகாணங்களுக்கு செனட் சபையில் தலா 2 இடங்கள் என நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இது 435 உறுப்பினா்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நிகராக பல்வேறு விவகாரங்களில் அதிகாரம் கொண்டது.