முகப்பு
இந்தியா

இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவோம் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது குறித்து...

செய்தியாளர் சந்திப்பில் சுவேந்து அதிகாரி - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவோம் என பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி இன்று (மே 3) தெரிவித்தார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படவுள்ளன. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. வாக்குச் சாவடியிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.

Advertisement

அதாவது, மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் ஃபால்டா தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வாக்கு எண்ணும்போது வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையையொட்டி, கொல்கத்தாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோயிலில் சுவேந்து அதிகாரி இன்று (மே 3) சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய சுவேந்து அதிகாரி, ''மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவோம்'' எனக் குறிப்பிட்டார்.

ஃபால்டா தொகுதியில் பாஜக வெற்றி பெற 10 ஆயுள்காலம் போதாது, அதற்கு மேல் ஆகும் என திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி தெரிவித்த கருத்து குறித்து பதில் அளித்த அவர்,

'' வாக்குப் பதிவு முடிந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை எந்தவொரு பொறுப்புள்ள அரசியல் தலைவரும் பேசமாட்டார்கள்.

போராடி அரசியலில் அவர்கள் நுழையாததால், அதிகாரத்தின் பலன்களை மட்டுமே அனுபவித்து வளர்ந்ததால், அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு மேடு, பள்ளங்களையும் சந்திக்காததால் அவர்களால் இப்படி பேச முடிகிறது. இடதுசாரிகளை கண்டோம். அவர்களுக்கு எதிராக போராடினோம். அவர்களை வீழ்த்தினோம். இப்போது திரிணமூல் காங்கிரஸையும் வீழ்த்துவோம். கடந்த 6 ஆண்டுகளாக அதற்காக உழைத்து வருகிறோம். இதற்கான பலனை அடைவோம்'' எனக் குறிப்பிட்டார்.

summary

We defeated the Left We have also seen the Trinamool era BJP leader Suvendu Adhikari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.