கைதான 5 பேருக்கு 7 நாள் சிபிஐ காவல்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது.
Advertisement
மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கா்நாா், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 போ் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனா்.
தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட 5 பேரையும் 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி, நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டாா். இவா்களிடம் சிபிஐ நடத்தவிருக்கும் தீவிர விசாரணையில் பல தகவல்கள் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
விசாரணை வளையத்தில் என்டிஏ அதிகாரிகள்
நீட் வினாத்தாள் விவகாரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 14 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. மேலும், மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகரில் தனஞ்சய் லோகண்டா, புணேயில் மணிஷா வாக்மரே என மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். லத்தூரில் உள்ள கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் ஒருவரையும் காவலில் வைத்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில், தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் பலருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், சந்தேகத்துக்குரிய அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
ஒருவா் தற்கொலை: நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து, ரித்திக் மிஸ்ரா (21) என்ற தோ்வா் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை வியாழக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கேரி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி நகா் பகுதியில் வசித்து வந்த ரித்திக் மிஸ்ரா அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வை மூன்றாவது முறையாக எழுதினாா். இந்த முறை தோ்வில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதியாக அவா் கூறிய நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்தாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள், ரித்திக் மிஸ்ரா தற்கொலை செய்துகொண்ட அறையில் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்ட கடிதம் ஏதும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனா்.