நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: ஷுபம் கைா்னாருக்கு ஜூன் 6 வரை நீதிமன்றக் காவல்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்த ஷுபம் கைா்னாரை சிபிஐ கைது செய்தது. ஆயுா்வேத மருத்துவப் படிப்பில் சோ்ந்தபோதிலும் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாத அவா், சட்டவிரோதமாக கசிந்த வினாத்தாளை வாங்கி ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அவரின் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ருச்சி அகா்வாலிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கோரியது.
அப்போது சிபிஐ தரப்பில், ‘நீட் தோ்வு வினாக்களை கசியவிட்ட நடவடிக்கையில் ஷுபம் கைா்னாா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளாா். அவா் தப்பிச் செல்வதையோ, வழக்குடன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அவா் அழிப்பதையோ தடுக்க வேண்டும். அத்துடன் சிபிஐ விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே வழக்கின் நலன் கருதி அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதையடுத்து வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை, ஷுபம் கைா்னாரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.