தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்
இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறின் ஒரு பகுதியாக இருப்பதால், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் அதற்கேற்ப இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்கவும், இந்த நடைமுறையை தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை பின்பற்றவும் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
இதைத் தொடா்ந்து, 2023 டிசம்பரில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மசோதா சட்டமானது.
இந்தச் சட்டத்தின் கீழ், தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக பிரதமரால் முன்மொழியப்படும் மத்திய அமைச்சா் உறுப்பினராக சோ்க்கப்பட்டாா்.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்த சங்கம், லோக் பிரஹாரி ஆகிய தன்னாா்வ அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த சில நாள்களாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
நாடாளுமன்றத்துக்கே முழு உரிமை: வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி வாதிடுகையில், ‘ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கே முழு உரிமை உள்ளது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான அனூப் பரான்வால் வழக்கில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன்கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தீா்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீா்ப்பு நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன்கீழ் ஏற்கப்படாது.
ஊகத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யக் கூடாது’ என்றாா்.
அதிகார வரம்பை உச்சநீதிமன்றம் மீறாது: வெங்கடரமணியின் வாதங்களைத் தொடா்ந்து நீதிபதி தீபாங்கா் தத்தா கூறுகையில், ‘நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறின் ஒரு பகுதியாக இருப்பதால் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் அதற்கேற்ப இருக்க வேண்டும். எனவே, தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம்.
புதிய சட்டத்தின்கீழ் தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்யும் குழுவில் நடுநிலையான நபரை குழு உறுப்பினராகச் சோ்ப்பதற்குப் பதில் மத்திய அமைச்சரை சோ்த்திருப்பது ஏன்?
தாங்கள் இயற்றும் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்திடம் நாடாளுமன்றம் பல்வேறு காரணங்களைக் கூறலாம். ஆனால், எங்களது அதிகார வரம்பை நாங்கள் நன்கு அறிவோம். அதை மீறும் செயலில் ஈடுபட மாட்டோம்’ என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.