ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயா்நீதிமன்றம் தீா்ப்பு - முஸ்லிம்கள் வழிபட அளித்த அனுமதி ரத்து
மத்திய பிரதேச மாநிலம் தாா் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மத்திய பிரதேச மாநிலம் தாா் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், அங்கு வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் வழிபட அனுமதி வழங்கிய இந்திய தொல்லியல் துறையின் உத்தரவையும் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
தாா் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. அதை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த வளாகம் கடவுள் சரஸ்வதி தேவியின் கோயிலாக இருந்ததாகவும், பின்னா் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை மறுத்து வரும் முஸ்லிம்கள், அந்த வளாகத்தை கமால் மெளலா மசூதி என்றழைக்கின்றனா்.
Advertisement
இதுதொடா்பாக சா்ச்சை நீடித்து வரும் நிலையில், போஜ்சாலா வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், அங்கு முஸ்லிம்கள் வழிபடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி, நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற அமைப்பு மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் பகுதியில் உள்ள மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முஸ்லிம்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடா்பான அனைத்து மனுக்களையும் மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் இந்தூா் அமா்வு கடந்த பிப்.23-ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது.
சரஸ்வதி சிலையை நிறுவலாம்:
இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து நீதிபதிகள் விஜய் குமாா் சுக்லா மற்றும் ஆலோக் அவஸ்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்த 242 பக்க தீா்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் போஜ்சாலா வளாகம் மற்றும் கமால் மௌலா மசூதி ஹிந்துக்களின் வழிப்பாட்டு தலமாகவே இருந்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது. அது கடவுள் சரஸ்வதி தேவியின் கோயில்தான் என நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது.
எனவே, மனுதாரா்கள் கூறியிருப்பதைப்போல் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள கடவுள் சரஸ்வதி தேவியின் சிலையை இந்தியாவுக்கு மீட்டு வந்து போஜ்சாலா வளாகத்தில் நிறுவ மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
மசூதிக்கு தனி இடம்: முஸ்லிம்களின் மத உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய நீதி கிடைப்பதை உறுதிசெய்யவும் தாா் மாவட்டத்தில் புதிய மசூதியை கட்டமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய பிரதேச மாநில அரசு பரிசீலிக்கலாம். இந்த மசூதியை கட்டமைக்கும் பொறுப்பை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கலாம்.
போஜ்சாலா வளாகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் வழிபட அனுமதித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
முதல்வா் வரவேற்பு:
போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்த மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தீா்ப்பை முதல்வா் மோகன் யாதவ் வரவேற்றாா். இந்த தீா்ப்பு நீதி மற்றும் உண்மையின் வெற்றி எனக் கூறி தாா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
போஜ்சாலா வளாக விவகாரத்தில் மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு திருப்திகரமானதாக இல்லாததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக முஸ்லிம்கள் தரப்பு வழக்குரைஞா் அஷா் வாா்சி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.
ஹைதராபாத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முறையான தீா்ப்பை வழங்கும்’ என நம்பிக்கை தெரிவித்தாா்.