தென்மேற்குப் பருவமழை: கேரளம் விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழு கேரளம் செல்வது பற்றி..
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
அடுத்த வாரம் தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழையால் கேரளத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழு பணியமர்த்தப்படும் எனக் கூறியுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 30 மீட்புப் பணியாளர்கள் இடம்பெறுவர், அவசரக் காலங்களில் திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான தேடுதல் மற்றும் மீட்புக் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் அக்குழுக்கள் முழுமையாகத் தயாராக இருக்கும்.
சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணிப்பதற்காக, தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் அமைந்துள்ள என்டிஆர்எஃப் தளத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை ஒன்று செயல்படும்.
அதுமட்டுமின்றி, வானிலை நிலவரங்களைக் கண்காணிப்பதற்கும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகப் பதிலளிப்பதை உறுதி செய்வதற்கும், கேரள மாநில அவசரக்காலச் செயல்பாட்டு மையத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் என்டிஆர்எஃப் அனைத்துத் தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி கேரளத்தில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பருவமழையின் மே 26-க்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ என நான்கு நாள்கள் வரை மாறுபடக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தது.