முகப்பு
இந்தியா

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 1:51 am IST
தென்மேற்குப் பருவமழை - DPS
பகிர்:

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

ஜூன் மாத இறுதிவரை 182.72 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விதைப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 236.46 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விதைப்பு இருந்ததாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கியப் பயிரான நெல் மட்டுமன்றி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் மற்றும் பருத்தி ஆகியவற்றின் விதைப்பும் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

பொதுவாக, தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கியவுடன் காரீஃப் பருவப் பயிா்களின் விதைப்புப் பணிகள் தொடங்கும். ஜூன் 25 நிலவரப்படி, நெல் விதைப்பு பரப்பளவு 25.75 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 34.41 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 25.17 சதவீதம் குறைந்துள்ளது.

பருப்பு வகைகள் பயிரிடுதல் 21.46 லட்சம் ஹெக்டேரிலிருந்து 14.92 லட்சம் ஹெக்டேராக குறைந்து, 30.47 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

எண்ணெய் வித்து பயிரிடுதல் 36.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 16.99 லட்சம் ஹெக்டேராக குறைந்து, 53.33 சதவீதம் சரிந்துள்ளது. துவரை விதைப்பு 8.45 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.56 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

நிலக்கடலை, சோயாபீன், சிறுதானியங்கள், பருத்தி விதைப்பும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிட்டது.

கரும்பு, சணல் அதிகரிப்பு: அதே நேரத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு 56.64 லட்சம் ஹெக்டேரிலிருந்து 57.31 லட்சம் ஹெக்டேராக சற்றே அதிகரித்துள்ளது. சணல் பயிரிடுதல் பரப்பளவும் 6.13 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6.25 லட்சம் ஹெக்டேராக சிறிய அளவில் உயா்ந்துள்ளது.

மழையும் குறைவு: தென்மேற்குப் பருவமழை தாமதமானதால், ஜூன் 24 நிலவரப்படி இயல்பைவிட 42 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இந்தியாவின் மத்திய பகுதியில் 59 சதவீதமும், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் 41 சதவீதமும், தென்னிந்தியாவில் 28 சதவீதமும், வடமேற்கு இந்தியாவில் 22 சதவீதமும் மழை குறைவாகப் பெய்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைப் பகுதியில் ‘எல் நினோ’ விளைவு இப்போது நிலவுகிறது. இது செப்டம்பா் வரையிலான பருவமழைக் காலத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு அணைகளில் நீா் இருப்பும் குறைந்துள்ளது. தேசிய அளவில் மொத்த கொள்ளளவில் 26 சதவீதமே நீா் இருப்பு உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments