வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவுக்கு 16 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்துக்கு 16 பேர் பலியாகியுள்ளது குறித்து...
புது தில்லி: வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று 16 பேர் பலியாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர்.
அடுத்த 6-7 நாள்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்றும், அதே சமயம் மேற்கு-மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப இந்தியாவில் அடுத்த 7 நாள்களுக்கு மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 11 போ் உயிரிழந்தனா் மற்றும் பலர் மாயமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல அமைப்புகள் இணைந்து அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
Advertisement
Advertisement
பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட்டே தாலுகாவில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு கிராமத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்ததில் 2 வயது குழந்தை உள்பட அதில் வசித்த 8 பேரும் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் உடல்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனா்.
தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் சேதமடைந்த சாலைகளுக்கு மத்தியிலும், காணாமல் போனவர்களைக் கண்டறிய மீட்புக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு திரும்பினாா் முதல்வர் உமர் அப்துல்லா
மாநில அந்தஸ்து கோரி திங்கள்கிழமை (ஜூலை 20) நடைபெறவிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்த முதல்வர் உமர் அப்துல்லா, பலத்த மழை காரணமாக, தலைநகரில் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு திரும்பினாா்.
உடனடி நிவாரணம் மற்றும் உதவிகள்: துணைநிலை ஆளுநா் உத்தரவு
மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலவும் சூழல் குறித்து மாவட்ட மூத்த அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
மேலும், அடுத்த சில நாள்களில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பஹல்காம் மற்றும் பல்தால் வழித்தடங்களில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள பல்தால் மற்றும் நுன்வான், சந்தன்வாரி முகாம்கள் மற்றும் ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸ் ஆகியவற்றிலிருந்து யாத்ரீகர்கள் தொடர்ந்து செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 19 முதல் 23 வரை மிதமானது முதல் பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரித்வார் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்ததில் இருவர் பலியாகினர். 10 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' மற்றும் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த சில நாள்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டேராடூன், டெஹ்ரி, பௌரி, உத்தரகாசி, ருத்ரபிரயாக், ஹரித்வார் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், சமோலி, அல்மோரா மற்றும் பித்தோராகர் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
At least 16 people were killed on Sunday in rain-related incidents as southwest monsoon remained active in northern and eastern India, triggering landslides and flash floods.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.