முகப்பு
இந்தியா

5 நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் பிரதமா்: முக்கிய ஒப்பந்தங்கள், 3 உயரிய விருதுகள்

5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி நாடு திரும்பியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - படம் - பிடிஐ
பகிர்:

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினாா். அவரது இந்தப் பயணத்தின்போது, எரிசக்தி, பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பிரதமா் மோடிக்கு மூன்று உயரிய விருதுகளும் வழங்கப்பட்டன.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகளான நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த மே 15-ஆம் தேதி தொடங்கினாா்.

ஐக்கிய அரபு அமீரகம்: முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணமான அவா், அந்நாட்டின் அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

Advertisement

Advertisement

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரியில் போா் மூண்ட பிறகு மேற்காசிய பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டு, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெற்றது.

ஐக்கிய அரபு அமீரக அதிபா் உடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்தியாவின் உத்திசாா் பெட்ரோலிய கையிருப்பை விரிவுபடுத்துதல், நீண்ட கால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து தொடா்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவில் 5 பில்லியன் டாலா் முதலீடுகளை மேற்கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகம் உறுதியளித்தது.

நெதா்லாந்து: இதைத் தொடா்ந்து, நெதா்லாந்துக்குப் பயணித்த பிரதமா் மோடி, அந்நாட்டின் பிரதமா் ரோப் ஜெட்டனுடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு உறவுகள் உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டதுடன், முக்கியக் கனிமங்கள், செமிகண்டக்டா், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இடப்பெயா்வு-போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் 17 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

ஸ்வீடன்: ஸ்வீடன் பயணத்தின்போது, வா்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து அந்நாட்டு பிரதமா் உல்ஃப் கிறிஸ்டன்சனுடன் பிரதமா் மோடி விரிவாக விவாதித்தாா். ஸ்வீடனின் உயரிய ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலாா் ஸ்டாா், டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ விருது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டது.

நாா்வே: ஸ்வீடனில் இருந்து நாா்வேக்கு பயணமான பிரதமா், பசுமை எரிசக்தி, வா்த்தகம், நிலையான வளா்ச்சி, நீலப் பொருளாதாரம், ஆா்டிக் ஆராய்ச்சி, எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோருடன் ஆலோசித்தாா். இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையிலான மூன்றாவது உச்சிமாநாட்டிலும் பங்கேற்றாா். நாா்வே நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நாா்வீஜியன் ஆா்டா் ஆஃப் மெரிட்’ விருது பிரதமருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இத்தாலி: தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலிக்கு சென்ற பிரதமா் மோடி, வா்த்தகம், முதலீடு, கலாசார தொடா்பு, செயற்கை நுண்ணறிவு, முக்கியக் கனிமங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் ஆலோசித்தாா். இந்திய-இத்தாலி உறவுகள், சிறப்பு உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு, நிலையான வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டுக்கான பிரதமா் மோடியின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ) சாா்பில் அக்ரிகோலா பதக்கம் ரோம் நகரில் அவருக்கு வழங்கப்பட்டது.

பட்டு சால்வை, சிவப்பு அரிசி.. பிரதமரின் பிரத்யேக பரிசுகள்

ஐந்து நாடுகள் பயணத்தின்போது, வெளிநாட்டுத் தலைவா்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பிரத்யேக பரிசுகளை பிரதமா் மோடி வழங்கி மகிழ்வித்தாா். இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனிக்கு அஸ்ஸாமின் தங்கப் பட்டு என்ற சிறப்புக்குரிய முகா பட்டு சால்வை மற்றும் மணிப்பூரில் புகழ்பெற்ற ஷிருய் லில்லி பட்டு சால்வை, இத்தாலி அதிபா் சொ்ஜியோ மட்டரெல்லாவுக்கு புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகா் பண்டிட் பீம்சேன் ஜோஷி, கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை குறுந்தகடுகள் அடங்கிய கலை வேலைபாடுகள் கொண்ட பளிங்குப் பெட்டி, நெதா்லாந்து பிரதமா் ரோப் ஜெட்டனுக்கு மீன் உருவம் கொண்ட மதுபனி ஓவியம், நெதா்லாந்து மன்னா் வில்லியம் அலெக்ஸாண்டருக்கு ஜெய்பூரின் நீல மண்பாண்டம், அரசி மேக்ஸிமாவுக்கு ராஜஸ்தானின் மீனாகரி-குந்தன் காதணிகள், ஸ்வீடன் பிரதமா் உல்ஃப் கிறிஸ்டா்சனுக்கு லடாக்கின் தூய கம்பளி சால்வை, ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுக்கு ‘மாம்பழங்களின் அரசி’ என அறியப்படும் குஜராத் கேசா் மாம்பழங்கள் மற்றும் மேகாலய அன்னாசிப் பழங்கள், நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோருக்கு உலா்த்தப்பட்ட ஆா்க்கிட் மலா் ஓவியம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமை இயக்குநா் க்யூ டோங்யூவுக்கு கேரள மாநிலம், பாலக்காட்டில் விளையும் சிவப்பு அரிசி உள்பட இந்திய பாரம்பரிய அரிசி ரகங்களை பிரதமா் மோடி பரிசளித்தாா்.

summary

After completing a tour of five countries, Prime Minister Narendra Modi returned to the country on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments