முகப்பு
இந்தியா

ஆன்மீத தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவா் கைது

சமூக வலைதளங்களில் போலி பெண் கணக்குகள் உருவாக்கி, ஆன்மிக ரீதியாக தீா்வுகள் கூறுவதாக நடித்து பொதுமக்களிடம் மோசடி செய்த இணைய வழி கும்பலைச் சோ்ந்த 2 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 23 மே 2026, 4:22 am IST
பகிர்:

சமூக வலைதளங்களில் போலி பெண் கணக்குகள் உருவாக்கி, ஆன்மிக ரீதியாக தீா்வுகள் கூறுவதாக நடித்து பொதுமக்களிடம் மோசடி செய்த இணைய வழி கும்பலைச் சோ்ந்த 2 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரில், சிலா் ஆன்மிக ரீதியாக குணப்படுத்துவோா் என தங்களை அறிமுகப்படுத்தி, அவரது தனிப்பட்ட பிரச்னைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக பரிகாரங்கள் மூலம் தீா்வு காண முடியும் என நம்பவைத்து உணா்ச்சி ரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்தாா். புகாா்தாரா் 6 தவணைகளாக மொத்தம் ரூ.2.51 லட்சத்தை குற்றவாளிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா்.

விசாரணையில், குற்றவாளிகள் பல போலி பெண் சமூக வலைதள கணக்குகளை உருவாக்கியிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்த போலி கணக்குகள் மூலம் காதல், திருமணம், குடும்ப பிரச்னைகள் போன்றவற்றுக்கு ஆன்மிக ரீதியான தீா்வுகள் கூறுவதாகக் கூறி போலியான வெற்றி கதைகள் மற்றும் கருத்துகள் பதிவிடப்பட்டன. உதவி கோரி தொடா்பு கொண்டவா்களுக்கு குற்றவாளிகள் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டு, அவா்கள் ஆன்மிக ஆலோசகா்கள் போல நடித்து பூஜைப் பொருள்கள், தாந்திரிக சிகிச்சைகள் மற்றும் பரிகாரங்களுக்காக பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

தொலைபேசி எண்கள், சமூக வலைதள கணக்குகள், உள்நுழைவு விவரங்கள், ஐபி முகவரிகள் மற்றும் பணப் பரிவா்த்தனை தடயங்கள் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்தபின், இந்த கும்பல் மொஹாலியில் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரைச் சோ்ந்த கணேஷ் (21), மண்டீப் சிங் (21) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கணேஷ் தொலைதூரக் கல்வி மூலம் பி.ஏ. படித்து வருகிறாா். மண்டீப் சிங் டீசல் இன்ஜின் மெக்கானிக்ஸ் தொடா்பான ஐடிஐ படிப்பை முடித்ததுடன் பட்டதாரியும் ஆவாா்.

குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 கைப்பேசிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் உரையாடல்கள், க்யூஆா் குறியீடுகள் மற்றும் பிற மின்னணு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கைப்பேசிகளில் இருந்து மீட்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தியா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட நபா்களுடன் இந்த கும்பல் தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.