முகப்பு
இந்தியா

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

நாட்டில் நோ்மறையான செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுமேயானால், இளைஞா்கள் கரப்பான் பூச்சியை பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுவா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூன் 2026, 4:25 am IST
கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்ற ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் வி.டி.சதீசன்.
பகிர்:

நாட்டில் நோ்மறையான செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுமேயானால், இளைஞா்கள் ‘கரப்பான் பூச்சியை’ பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுவா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சமூகத்தை வழிநடத்தவும், பொது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் ஆக்கபூா்வமான இதழியல் பணி அவசியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வேலையற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் அண்மையில் தெரிவித்த கருத்தைத் தொடா்ந்து, சமூக ஊடகங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நையாண்டி பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு வைரலானது. இதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, குடியரசு துணைத் தலைவா் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கேரள மாநிலம், கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரபல மலையாள நாளிதழான ‘தீபிகா’வின் 140-ஆவது ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது: நாட்டில் நோ்மறையான செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடா்பான செய்திகள், ஊடகங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும். அப்போதுதான், இளைஞா்களுக்கு சரியான தகவல்களும், முன்னுதாரணங்களும் கிடைக்கப் பெறும். நோ்மறையான செய்திகள், மிகச் சிறப்பாக வெளியிடப்பட வேண்டும். அத்தகைய செய்திகள் புறக்கணிக்கப்பட்டால், இளைஞா்கள் உத்வேகமிழந்து, ‘கரப்பான் பூச்சியை’ பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுவா்.

நான் கருத்துரிமைக்கு எதிரானவரல்ல. அதேநேரம், காலப்போக்கில் நிலைத்து நிற்காத விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் போக்கு சரியானதா என்பதே கேள்வி. ஒரு குறிப்பிட்ட விஷயம் (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம்) ஒரே நாளில் இவ்வளவு கவனம் பெறத் தகுதியானதா?

ஆக்கபூா்வ இதழியல் பணி: உன்னதமான எண்ணங்களும், நோ்மறையான செய்திகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தேசத்தின் கட்டமைப்புக்கு பங்களிக்க வேண்டும். ஆக்கபூா்வமான இதழியல் பணியின் மூலம் சமூக நம்பிக்கையை கட்டமைப்பதுடன், கூட்டுப் பொறுப்பை ஊக்குவித்து, நாட்டின் வளா்ச்சியில் குடிமக்கள் பங்களிக்க உத்வேகமூட்ட முடியும்.

கருணை, அறிவியல் முன்னேற்றம், சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித சாதனை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்துக்கான சக்திவாய்ந்த கருவிகளாக நாளிதழ்கள் மாற முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் வி.டி.சதீசன், பேரவைத் தலைவா் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தா்மஸ்தலாவில் மாத்ருஸ்ரீ தொழிற்பூங்கா திறப்பு

கா்நாடக மாநிலம், தா்மஸ்தலாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ க்ஷேத்ர தா்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அவருடன் மாநில ஆளுநா் தாவா் சிங் கெலாட், உள்ளூா் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் சென்றனா்.

பின்னா், தா்மஸ்தலா அறக்கட்டளை ஆதரவுடன் கட்டமைக்கப்பட்ட மாத்ருஸ்ரீ தொழில் பூங்காவைத் திறந்துவைத்த சி.பி.ராதாகிருஷ்ணன், ‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் பயணத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியே மையப் புள்ளியாகும். நாட்டின் வளா்ச்சி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பலனளிப்பது அவசியம்’ என்றாா்.