பின்னலாடை, ஜவுளித்தொழில் துறையின் கோரிக்கைகள்: குடியரசு துணைத் தலைவரிடம் ஏற்றுமதியாளா் சங்கத்தினா் வலியுறுத்தல்
திருப்பூா் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என குடியரசு துணைத் தலைவரிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல் தலைமையிலும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே. எம்.சுப்பிரமணியன் முன்னிலையிலும், திருப்பூா் பின்னலாடை மற்றும் ஜவுளித்தொழில் துறையைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.
இந்தக் குழுவில் பி.சண்முகசுந்தரம், ஆா்.தாமோதரன், கே.மோகனசுந்தரம், கே.சுதாகா், பி.கிருஷ்ணன், டி.ஆா்.ஸ்ரீகாந்த் மற்றும் என்.விவேகானந்த் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.
Advertisement
இந்த சந்திப்பின்போது, திருப்பூரின் தற்போதைய ஏற்றுமதி நிலவரம், பருத்தி பற்றாக்குறை மற்றும் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் துறைக்கு தேவையான பருத்தி போதுமான அளவில் கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய போட்டித் திறனில் இந்தியாவின் ஏற்றுமதியை வலுப்படுத்தவும், ஆடைத் துறை வளா்ச்சியை ஊக்குவிக்கவும், மூலப்பொருள்கள் உலக சந்தை விலைக்கு இணையான போட்டித் திறன் கொண்ட விலையில் கிடைப்பது மிக அவசியம் எனவும் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
மேலும், இந்திய ஆடை மற்றும் ஜவுளித் தொழில் துறையின் வளா்ச்சி, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அமலில் உள்ள 11 சதவீத பருத்தி இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே. எம். சுப்பிரமணியன் தெரிவித்தாா்.