நூற்றுக்கு நூறு

32. ஆசைப்படு! ஆசை அவசியம்!

சந்திரமௌலீஸ்வரன்

இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் ஒரு கேள்வி கேட்டார். ‘நீங்கள் எழுதுவது எல்லாம் வழிமுறைகளாக இருக்கின்றன. அதை எல்லாம் கடைப்பிடித்தால் நூற்றுக்கு நூறு வரும் என்பதும் புரிகிறது. ஆனால் அதைப் படித்தால் நாம் ஆசைப்படுவதே கூடாதோ என்பதுபோல ஒருவிதமான கண்டிப்பு தெரிகிறதே..’

அவர் வீட்டில் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மகளும், கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கருத்தைத்தான் முன் வைக்கிறார் என்பதையும் பேச்சினூடே சொன்னார். அந்தக் கேள்விக்கு இன்றைய பதிவில் விடை கிடைக்கும்.

ஆசைகளைத் தெரிந்துகொள்வதும், அதை சீரமைப்பதும் மிகவும் அவசியமான பழக்கம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசைகளை பொதுவாக மூன்றாக வகைப்படுத்தலாம். உடல் சார்ந்த ஆசைகள், மனம் சார்ந்த ஆசைகள், உதவி சார்ந்த ஆசைகள். இது இல்லாது உலகில் எதுவுமில்லை. புகழ் பெற்ற கபீர் சொல்லுவார். ‘மனிதகுலத்தில் செல்வமும் இன்பமும் சேர்வதன் மூலமே ஆசைதான்’. ஆகவே, ஆசை தவறு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு நாம் மேலே சிந்திக்கலாம்.

அது வேண்டும் இது வேண்டும்; அதைச் செய்து முடிக்க வேண்டும்; இதை அடைய வேண்டும் என்பதெல்லாமே ஒரு வகையான ஆசைதான். ஆனால், இவையெல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து அடங்கி மீண்டும் எழுந்து அடங்கும் மனம் கொண்டவர்களுக்கு மிகவும் குழப்பமான வாழ்க்கை, அதிலும் உணர்ச்சி சார்ந்து முடிவு எடுப்பதில் சிக்கல் கொண்ட வாழ்க்கையாக அமையும் என்பதால் ஆசைகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமானதுதானே!

மனிதருக்கு ஆசைகள், எப்போதும் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிக்கொண்டேதான் இருக்கும். ஆசைகள் மறைவதில்லை; ஆனால் மாறுகின்றன. ஒரு ஆசையை இன்னொரு ஆசையின் மூலம் வெல்லமுடியும் என்பதே ஆசையை சீரமைப்பதன் முதல் படிப்பினை. இதைத் தெரிந்துகொண்டால்தான், அவசியமில்லாத ஆசையைக் கைவிடவும், அவசியமான ஆசையைத் தொடர்ந்து அது தூண்டும் இலக்கை அடையவும் முடியும்.

மூன்றுவிதமான ஆசைகள் என வகைப்படுத்தியிருந்தாலும், உளவியலாளர்கள் அதனை மேலும் ஆராய்ந்து ஒரு பட்டியல் தந்துள்ளனர். அவற்றையெல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்வதே நூற்றுக்கு நூறு.

  1. அங்கீகாரம் பெறுவதென்பது இயல்பான ஆசை. இந்த அங்கீகாரம் என்பது பிறரால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பதைக் குறிக்கிறது. பிறர் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முதல் ஆசையாக அமைகிறது. குழந்தை தொடங்கி, முதியவர் வரை ஒவ்வொரு வயதிலும் தனது தேவைகள், திறமைகள், பண்புகள் அறிந்து அதற்கேற்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுதல்..
  2. ஆர்வம் என்பதே ஆசை. நமது தொடரில் தொடக்கத்தில் இது குறித்து சற்று விரிவாகவே பேசியிருக்கிறோம். கற்றுக்கொள்வதற்கும், பிறரைப் புரிந்துகொள்வதற்கும், முன்னேற்றத்துக்கும் காரணமான முனைப்பான ஆர்வம். இதனை ஆங்கிலத்தில் curiosity என்று சொல்வார்கள். இதுவே கண்டுபிடிப்புகளுக்கும், எந்தச் சிக்கலில் இருந்தும் முனைந்து வெளிவருவதற்கும் காரணமான ஆசை. இது அவசியம் வேண்டும்..
  3. உணவின் மீது ஆசை என்பது தவறில்லை. ஆனால் உணவு என்பது ஆரோக்கியம் தொடர்பானது. நம் உடல் நலம் தொடர்பானது என்பதால், அதன் மீது கவனம் கொண்ட ஆசை மிக அவசியம். இந்த ஆசையை நாம் நடைமுறைப்படுத்தும்போது பிறர் செய்வதை நாமும் செய்து பார்க்கலாம் எனும் எண்ணம் வருவது இயல்பு. ஆனால் அதன் மீது தனி கவனம் கொண்டு செயல்படுத்துவது அவசியம். இது ஆசை மட்டுமல்ல; நம் நிரந்தரத் தேவையும் ஆகும்..
  4. குடும்பம் சார்ந்த பாதுகாப்புகள். இது பொறுப்பு கலந்த ஆசை. நம் குடும்பத்தில் நமக்கான கடமைகளை நிறைவேற்ற பிறரைப் பாதுகாக்க, அவரது தேவைகளை நிறைவு செய்ய ஆசைப்படுதல்; அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல். இந்த ஆசைக்கு முக்கியத்துவம் தரும்போது, பொறுமையும் நிதானமும் கைக்கொள்ள வேண்டும்..
  5. மரியாதையும் மதிப்பும் ஒவ்வொரு மனிதரும் ஆசைப்படும் விஷயம். அங்கீகாரத்தில் அடுத்த நிலை. இதனை நம் பண்புகளின் மூலம் அடைவதே சிறந்த வழி. நற்பண்புகளைக் கடைப்பிடித்தால், அதனால் மரியாதையும் மதிப்பும்தானே நிறைவேறும். இந்த ஆசை நியாயமானதும் அவசியமானதும் ஆகும்..
  6. சமூக அங்கீகாரம். பொதுவில் கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் சமூக அங்கீகாரத்துக்கும் அதிக வேறுபாடு உண்டு. நம்மைச் சுற்றி இருப்பவரில் நம்மைத் தெரிந்தவர் நம்மை அங்கீகரிப்பதும் புகழ்வதும் இயல்பானது. ஆனால் அதனினும் மேம்பட்ட நிலையாக சமூக அங்கீகாரம் கருதப்படும். இது புகழ் எனும் நிலை இல்லை. ஆனால், நமக்கான சமூக நீதி எனக் கருத வேண்டும். தகுதி அடிப்படையில் மனிதர்கள் அடையாளமிடப்படும்போது கிடைக்கும் அங்கீகாரம்..
  7. தனிமனித சுதந்திரம் என்பது அனைவரும் விரும்பும் ஆசை என நிச்சயம் சொல்லலாம். தனிமனித சுதந்திரம் என்பது கருத்து அளவிலும் செயல் அளவிலும் கிடைக்கும் மிகப்பெரிய அடையாளம். இதனை ஒவ்வொருவரும் தன்னளவிலும், தன்னைச் சார்ந்த சமூக அளவிலும், நட்பு வட்டத்திலும், குடும்பத்திலும், பணியிடத்திலும் எதிர்பார்ப்பது நியாயமான ஆசை. அடையத் தகுந்த ஆசை..
  8. பொறுப்பு வேண்டுதல். இந்த ஆசையைப் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பதவி ஆசை என இது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பொறுப்பை நிறைவேற்ற, அல்லது கடமையை நிறைவேற்ற தேவைப்படும் அதிகாரமும் அங்கீகாரமும் பதவி என அறியப்படுகிறது. பதவியின் மூலம் கிடைக்கும் அதிகாரம் எப்போதும் பொறுப்புணர்ச்சியுடன் இணைந்தே அடையப்பட வேண்டும். எந்த ஒரு அதிகாரத்தையும் அதன் பொறுப்புணர்ச்சியுடன் புரிந்துகொள்ள ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்படுதல் பொறுப்பு வேண்டுதல் என கருதப்படும். இல்லையேல், அது பதவி வேண்டுதல் என்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்படும்..

ஆசைகளே நம்மை வடிவமைக்கின்றன. ஆசைகளே பலமுறை நம் அடையாளமாகின்றன. ஆசைகளே நம்மை ஊக்குவிக்கின்றன. ஆசைகளே நம்மை முந்தித் தள்ளுகின்றன. ஆசைகளே நம்மை உயர்த்துகின்றன. ஆசைகளே நம்மை வீழ்த்தவும் செய்கின்றன. ஆசைகளே நம் தேவைகளை நிர்ணயிக்கின்றன. அதனின் நம் தேவைகளே ஆசையாகின்றன.

ஆசை அவசியம். அது மிகவும் அவசியம். அதனைச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவதே நூற்றுக்கு நூறு பெறும் வழி.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT