தத்துவ தரிசனம்

42. துதியே கதி

தான் என்ற அகந்தையைக் கடந்து அனைத்துமாகி இருக்கும் இரண்டற்ற ஒருமையான பிரும்மத்தில் திளைப்பதை அத்வைதம் வலியுறுத்தி, அதனையே முக்தி என்கிறது.

பத்மன்

தான் என்ற அகந்தையைக் கடந்து அனைத்துமாகி இருக்கும் இரண்டற்ற ஒருமையான பிரும்மத்தில் திளைப்பதை அத்வைதம் வலியுறுத்தி, அதனையே முக்தி என்கிறது. தான் என்ற அகந்தை முற்றிலுமாக ஒடுங்கினால்தான் அந்தப் பேதமற்ற ஒருமை சாத்தியமாகும். இங்கே அகந்தை என்பது வெறும் ஆணவம் அல்ல, அகம் அதாவது தான் என்கின்ற நினைப்பைக் குறிக்கிறது. நுணுகி நுணுகிப் பார்த்தால், கடைசியில் ஏதுமற்ற வெறுமை இருப்பதாக பௌத்தம் கூறியதை, எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமை இருப்பதாக சங்கர அத்வைதம் கூறியது.

ஆனால், இந்த பேதமற்ற முழுமையை அப்படியே ஏற்பதில், தான் என்ற எண்ணம் சற்றே இடித்திட்ட காரணத்தால், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் எழுந்தது. அதாவது, எல்லையற்ற பரிபூரணமான அந்த ஒற்றை ஆற்றல் (அதாவது பரமாத்மாவாகிய பிரும்மம்) எங்கும் வியாபித்திருந்தாலும், அத்தகு உயர்ந்த ஆற்றலோடு அதன் சின்னஞ்சிறு அங்கங்களாக விளங்கும் தான் என்ற நினைப்புள்ள ஜீவாத்மாக்கள் எப்படி சரிசமமாக முடியும் என்ற கேள்வி ராமானுஜருக்குத் தோன்றியது. ஆகையால் ஜீவாத்மாக்கள், பரமாத்மாவின் அங்கம் என்றவகையில் ஒன்றுதான் என்றபோதிலும், பரமாத்மா மேம்பட்டவர் என்ற விசேஷ ஒருமை ஜனித்தது. ஆகையால், தாமும் பரமாத்மாவின் அங்கம் என்பதை உணர்ந்து, அவரிடமே சரண் புகுவதன் மூலம் விடுதலை (முக்தி) சாத்தியமாகும் என்ற போதனை பிறந்தது. இங்கே அனைத்தும் ஒன்றே என்ற ஞானம் ஏற்கப்பட்டாலும், விசேஷத் தன்மை வாய்ந்த ஈஸ்வரனிடம் சரணாகதி அடையும் பக்திக்கு முன்னிலை தரப்பட்டது.

இத்தகு விசிஷ்டாத்வைதத்தில்கூட ஒருவகையில் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைப்போக்கால், பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் வேறு வேறு, இரண்டும் எந்தவகையிலும் ஒன்றிணைய முடியாது என்ற இருமை தத்துவம் பிறந்தது. அதுவே துவைதம். இங்கே பக்தி மாத்திரமே பிரதானம். பரமாத்மாவை துதிக்கும் பக்தியால் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வீழாத முக்தியைப் பெறுகின்றபோதிலும், ஜீவாத்மாக்கள் தனித்தே இருக்கும் என்று பேதம் பேசுகிறது துவைதம். அந்தவகையில், பேதமற்ற ஒருமையில் தொடங்கி, சற்றே வித்தியாசப்படுத்திப் பார்த்து, பின்னர் பேதத்திலேயே வந்து நிற்கிறது வேதாந்த தரிசனத்தின் இந்த மாற்றம். இதற்கு அந்தந்த காலத்தின் சூழல் முக்கியக் காரணமாக அமைகிறது.

பாரதத்தில் அமைதியான சூழல் நிலவிய காலத்தில், இயற்கையோடு இயைந்த சடங்குகள் சார்ந்த தத்துவங்களும், அக்காலத்திலேயே உருவான அண்டவியல், அணுவியல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் உளவியல் ஆய்வுகளின் அடிப்படையிலான தத்துவங்களும் தோன்றின. ஆகையால், வேள்விச் சடங்குகள் நிறைந்த மீமாம்சை, அணுவியல் பேசும் வைசேஷிகம், பொருள் வாதத்தையும் கருத்து வாதத்தையும் இணைத்து உருவான சாங்கியம், மனிதனின் மன ஆற்றலை மேம்படுத்தி உயர் நிலைக்கு அழைத்துச்செல்லும் யோகம், காரண காரியங்களை விவாதிக்கும் நியாயம் என வேதத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு வேறு வேறு தளங்களில் பயணப்பட்ட தத்துவங்கள் எழுந்தன. மாற்றுக் கருத்துகளோடு சமரசமாக இணைந்திருக்கும் பரிபக்குவம் அப்போது இருந்தது. ஆனால், காலப்போக்கில் தத்துவத்தின் பிடி தளர்ந்து, வேதத்தை ஆதாரமாகக் காட்டி வறட்டுத்தனமான சடங்கு, சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற போக்கு ஏற்பட்டது. அப்போது அதனைச் சீர்படுத்த, வேள்விச் சடங்குகளை கடுமையாகக் கண்டித்து சிந்தனையைக் கிளறிவிடும் சமணம், பௌத்தம் ஆகியவை தோன்றின.

காலப்போக்கில் சமண, பௌத்த மடலாயங்களிலும் ஊழல் மலிந்த சூழல் ஏற்பட்டபோது, ஆரம்பத்தில் அவை எழுப்பிய கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியான புதிய தத்துவச் சிந்தனையாக, அதேநேரத்தில் வேத உபநிஷதக் கருத்துகள் மீதான மீள்பார்வையுடன் சங்கரரின் அத்வைதம் புறப்பட்டது. அக் காலகட்டத்திலும் பாரதீய மெய்ஞான பாரம்பரியப்படியே வீண் மோதலற்ற தத்துவ விவாதங்களுக்கும், வழிபாடுகளைவிட ஞான, யோக மார்க்கங்களுக்கும் முக்கியத்துவம் நீடித்தது. பின்னர், அந்நியப் படையெடுப்புகளால் சீர்குலைவு தொடங்கியபோது, புரிந்துகொள்ள கடினமான ஞான மார்க்கத்தைவிட, எளிமையான பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அந்தச் சூழலில்தான் விசிஷ்டாத்வைதம் தோன்றியது. பின்னர் அந்நியர்களின் படையெடுப்புகளும் மதமாற்றங்களும் அதிகரித்த சூழ்நிலையில், பாரதீய தத்துவ மரபுகளைப் பேண வெகுஜன இயக்கமான பக்தி மார்க்கமே மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. எனது மதத்தை ஏற்கிறாயா அல்லது உயிரை விடுகிறாயா என்று வெளியில் இருந்து வந்த எதிரி வினா எழுப்பும்போது, அறிவுப்பூர்வமான விவாதங்கள் எடுபடாது; உணர்வுப்பூர்வமான பக்தியால் மாத்திரமே அதற்குப் பதில் சொல்ல முடியும் என்பதால், கி.பி. 13, 14-ம் நூற்றாண்டுகளில் அத்தகைய பக்தி சார்ந்த தத்துவங்களே வேதாந்தப் பிரிவுகளாக மலர்ந்தன.

அத்தகைய பக்தி வேதாந்தப் பிரிவுகளில் முக்கியமானது துவைதம். இந்தத் தத்துவத்தை உபதேசித்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீமத்வர். இவரது காலம், கி.பி. 1238 முதல் 1327 வரை. ராமானுஜரைப் போலவே இவரும் விஷ்ணு எனப்படும் நாராயணரே பிரும்மம், சர்வேஸ்வரன் என்றார். பிரும்மாவையோ, ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சிவனையோ இவரும் பிரும்மமாகவோ ஈஸ்வரனாகவோ கருதவில்லை. இதற்கு ஒரு காரணம் கருதலாம்.

ஒற்றைப் பரம்பொருளின் வெவ்வேறு பெயர்களே பிரும்மா, விஷ்ணு, சிவன் என்பது பாரதீய மெய்ஞானத்தில் அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்தான். இதில் கோவில் இல்லாத பிரும்மா என்பதன் மூலம், அவர் முழுக்க முழுக்க நிர்குணர் என்பதும், வழிபாடு செய்யப்படாதவர் என்பதையும் அறிந்துகொள்ளலாம். ஆகையால், வெகுஜன இயக்கமான பக்தி மார்க்கத்துக்கு அவர் பயனற்றுப்போனார். அடுத்ததாக, தவ முனியாகவும், யோகியாகவும் மதிக்கப்பெறுபவர் சிவன். சாங்கிய யோகம், நியாயம், அத்வைதம் ஆகிய அறிவுசார்ந்த தத்துவங்கள் வளர்ந்த காலத்தில் சிவன் ஆதர்சமாகத் திகழ்ந்தார். ஆனால், அவரிடமுள்ள (அந்த ரூபத்தில் உள்ள) ஒரு சங்கடம், தோலாடை தரித்துக்கொண்டு, பாம்பை அணிகலனாக அணிந்துகொண்டு, உடலில் சாம்பலைப் பூசிக்கொண்டு மிகவும் எளிய கோலத்திலேயே சற்று பயமுறுத்தும்படியும் இருக்கிறார். ஆகையால், எளிமையாக இருக்கும் அவரைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், விஷ்ணுவோ சர்வ அலங்காரங்களுடன் கவர்ச்சிகரமாக இருக்கிறார். கல்யாண குணங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாச் சொல்ல ஏற்ற உருவம். மேலும், மனிதர்களாகத் தோற்றமெடுத்த ராமரும், கிருஷ்ணரும் விஷ்ணுவின் அவதாரங்களாகவே கொண்டாடப்படுகின்றனர். ஆகையால், பக்தி இயக்கங்களுக்கு வெகு ஜனங்களை ஈர்த்து, ஒன்றிணைக்க ஏற்ற நாயகனாக விஷ்ணு ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனினும், சிவபெருமானை வழிபடு கடவுளாகக் கொண்டு வளர்ந்த பக்தி இயக்கங்களும் உண்டு.

இனி மத்வரின் துவைதத்தைப் பார்ப்போம். பிரும்மமாகிய விஷ்ணுவே மேலான உண்மை (உத்தம சத்தியம்). அதேபோல் பொருள்களின் கூட்டுச் சேர்க்கையான பிரகிருதியும், அணுக்களால் ஆன அனேகர்களான ஜீவாத்மாக்களும் உண்மையே. பரமாத்மாவான விஷ்ணு சுதந்தரமானவர். ஆனால், பிரகிருதியும் ஜீவாத்மாக்களும் சுதந்தரமற்றவை. விஷ்ணுவின் கட்டுப்பாட்டின்கீழ் அவை இயங்குகின்றன. வேதத்தில் கூறப்படும் பிரும்மம் விஷ்ணு மாத்திரமே (பிரும்மசப்தஸ்ச விஷ்ணவேவ). அவர் வேதத்தில் குறிப்பிடப்படும் இதர தேவர்களைப்போல ஒரு தேவர் அல்லர், அவரே பரமாத்மா. விஷ்ணுவானவர், அறிவாகவும் ஆனந்தமாகவும் திகழ்கிறார். அவரது குணவிசேஷங்கள் நமது கருத்து ஓட்டங்களுக்கு அப்பாற்பட்டவை. இருப்பினும், ஜீவர்களாகிய நமது மேல் உள்ள கருணையினால், அவர் நமக்காகப் பல ரூபங்களில் காட்சி தருகிறார்.

பிரும்மம், ஜீவாத்மா, பிரகிருதி ஆகியவற்றுக்கு இடையே ஐந்துவித வேறுபாடுகள் இருக்கின்றன என்கிறார் மத்வர். இதற்கு பஞ்ச பேதங்கள் என்று பெயர். அவை –

1. பிரும்மம் எனப்படும் பரமாத்மாவான விஷ்ணுவுக்கும் தனிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கும் இடையேயான வேறுபாடு.
2. பிரும்மத்துக்கும் பிரகிருதிக்கும் இடையே உள்ள வேறுபாடு.
3. பிரகிருதிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் இடையேயான வேறுபாடு.
4. ஜீவாத்மாக்களுக்கு உள்ளேயே இருக்கும் வேறுபாடு.
5. பிரகிருதியின் பல்வேறு வகைகள்.

ஜீவாத்மாக்களுக்கு உள்ளேயே பேதங்கள் இருப்பதாக துவைதம் கூறுகிறது. மத்வரின் இந்தத் தரிசனத்தின்படி, ஜீவன்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்தியோக்யர், நித்யசம்சாரி, தமோயோக்யர். முக்தி எனப்படும் விடுதலை அடைய தகுதிபடைத்த ஜீவன்களே முக்தியோக்யர்கள். உலகில் உள்ள இன்பங்களில் நாட்டம் கொண்டு, ஆன்மிக மேன்மை அடைய வேண்டும், முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள், மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் அகப்படுகின்ற இரண்டாவது வகையான நித்யசம்சாரிகள். பலவகையான பாவங்களைச் செய்து இழிபிறவிகளை எடுத்து இறுதியில் நரகத்தில் துயரப்படப்போகின்ற மூன்றாவது வகையினர் தமோயோக்யர்கள். இவர்களுக்கு முக்தியே கிடைக்காது.

இந்த விஷயத்தில், வேதாந்தம் உள்ளிட்ட வைதீக தரிசனங்களை மட்டுமின்றி இதர பாரதீய மெய்ஞான தத்துவங்களில் இருந்தும் மத்வர் வேறுபடுகிறார். மற்ற தத்துவங்கள், அனைவருக்கும் முக்தி, கடையனுக்கும் கடைத்தேற்றம் உண்டு என்கின்றன. ஆனால், மத்வரோ வெளிநாட்டு மதங்கள் சிலவற்றின் சிந்தனைக்கு ஒப்ப, சில ஜீவன்கள் நிரந்தரமாக நரகத்தில் உழலும் என்கிறார். மேலும், மத்வரின் தத்துவப்படி முக்தி என்பது எந்தவகையிலும் பரமாத்மாவுடன் ஒன்றிணைவதில்லை. பக்தியின் மூலம் பரமாத்மாவின் கருணையினால் அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நிரந்தர தூய ஆனந்தத்தில் திளைப்பதே முக்தி. இந்தநிலையிலும் ஜீவாத்மாக்களின் தனித்தன்மையும் வேறுபாடுகளும் நீடிக்கும் என்கிறார். ஆனால், முக்தி அடைந்த ஜீவாத்மாக்கள் பிரும்மத்துடன் வேறுபாடின்றி இணைந்திருக்கும் என்கிறார் ராமானுஜர். ஞானத்தின் மூலம் உடல்-மனக் கூட்டிலிருந்து தான் வேறுபட்ட ஒன்று என்பதை அறிந்துகொள்ளும் தூய ஆத்மா, பக்தி மற்றும் பிரபத்தி மூலம் இறுதியில் பிரும்மத்தோடு இணையும் என்பது அவரது கோட்பாடு.

இந்த விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவத்துக்கு மாறாக, முக்தி அடைந்தாலும், பரமாத்மா – ஜீவாத்மாக்கள் இடையேயான பேதமும், ஜீவாத்மாக்களுக்கு இடையே நிலவும் பேதங்களும் நீங்காது என்கிறது துவைதம். சுருக்கமாக துவைத தத்துவத்தை, ஸ்வதந்தர-அஸ்வதந்தரம் ச த்வீவிதம் தத்வமிஷ்யதே என்று கூறுவர். அதாவது சுதந்தரமயமானது, சுதந்தரமற்றது என்ற வேறுபாட்டுடன் கூடிய இருமைக் கோட்பாடு என்று இதற்குப் பொருள். பகவான் மாத்திரமே சுதந்தரமானவர், ஜீவர்களும் பிரகிருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவை, எக்காலத்திலும் இந்த வேறுபாடும் இருமையும் நீடிக்கும் என்பதே இதற்கான சிறு விளக்கம்.

விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 5 கட்டளைகளை ராமானுஜாசார்யர் பிறப்பித்திருந்தார். அவை –

1. தாபம் - இரு தோள்பட்டைகளிலும் விஷ்ணுவின் சங்கு, சக்கர முத்திரைகளைப் பொறித்துக்கொள்ளுதல்.

2. புண்டரம் - நெற்றி, தோள்பட்டைகள், மார்பு, முதுகு உள்ளிட்ட 12 இடங்களில் சமயச் சின்னமாகிய புண்டரம் எனப்படும் பட்டை நாமங்களைத் தரித்தல்.

3. தாஸ்ய நாம – பெயரின் இறுதியில் விஷ்ணுவின் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் தாஸன் என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளுதல்.

4. மந்திர உபதேச – ஓம்நமோநாராயணாய என்ற அஷ்டாக்ஷரம் (எட்டெழுத்து) உள்ளிட்ட 3 புனித மந்திரங்களை குருவிடமிருந்து உபதேசம் பெற்று பாராயணம் செய்தல்.

5. யாக – பகவான் விஷ்ணுவிடம் முழுமையாகச் சரணடைந்து, தினந்தோறும் அவரை பக்தியுடன் வழிபாட்டு தூய வாழ்க்கை வாழுதல்.

இதேபோல், துவைதக் கோட்பாட்டைப் பின்பற்றுவோர் தனது முக்கிய 9 கட்டளைகளை நினைவில் நிறுத்துமாறு மத்வாசார்யர் கூறியுள்ளார். அவை –

1. பகவான் விஷ்ணுவே மேலான உண்மை; அவருக்கு இணை வேறு ஒருவரும் இல்லை.

2. வேதங்களில் கூறப்பட்டுள்ள ஞானத்தின் மூலம் அடையப்படும் இலக்கு அவரே.

3. இந்தப் பிரபஞ்சம் (உலகம்) உண்மையானது.

4. பகவான் (பிரும்மம்), ஜீவாத்மா, பிரகிருதிக்கு இடையேயான வேறுபாடுகள் உண்மையானவை.

5. ஜீவாத்மாக்கள் பகவானின் அடிமைகள்.

6. அனைத்து ஜீவாத்மாக்களும் அவற்றின் நிலையைப் பொருத்தவகையில் வெவ்வேறானவை.

7. முக்தி என்பது பகவானின் பாதாரவிந்தத்தை (திருவடிகளை) அடைவதே.

8. பகவான் குறித்த தூய வழிபாடு (அமல பஜன்) மாத்திரமே முக்திக்கு வழி.

9. பிரத்யக்ஷம் (நேரடியாக அறிதல்), அனுமானம் (ஊகம்), சப்தம் (வேத வசனங்கள்) ஆகியவையே நம்பத்தகுந்த பிரமாணங்கள் (ஆதாரங்கள்).

மத்வரைப் பின்பற்றுவோர் மாத்வர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் இவர்கள் அதிகம் உள்ளனர். கன்னடம், மராட்டி, துளு, கொங்கணி ஆகியவற்றில் ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஓரளவு எண்ணிக்கையில் உள்ளனர். வைஷ்ணவர்களான இவர்கள், ஸ்ரீவைஷ்ணவர்களைப்போல் திரிபுண்டரம் எனப்படும் பட்டை நாமமோ, ஸ்ரீசூர்ணம் என்படும் மெல்லிய ஒற்றைக் கீற்று நாமமோ தரிக்காமல், கோபி சந்தனத்தால் சற்று கனமான ஒற்றை நாமம் இட்டுக்கொள்வது வழக்கம். மத்வரின் வழிவந்த துவைத ஆசார்யர்களில் ஜயதீர்த்தர், வியாஸதீர்த்தர், ராகவேந்திரர் (இவர் தமிழ்நாட்டின் புவனகிரியில் பிறந்து, கர்நாடக எல்லையில் உள்ள ஆந்திரப் பகுதியான மந்திரலாயத்தில் ஜீவசமாதி அடைந்தவர்) ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

மத்வர் தனது துவைத தத்துவம் தொடர்பாக 37 நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தின் தொகுப்புக்கு சர்வமூல என்று பெயர். இதில், பிரும்மசூத்திரத்துக்கு இவர் எழுதியுள்ள விளக்கவுரை மாத்வபாஷ்யம் என்றழைக்கப்படுகிறது. மேலும், அனுபாஷ்ய என்ற பெயரிலான சிறு விளக்கவுரையையும் இவர் எழுதியுள்ளார். அத்வைத தத்துவத்தைக் கண்டித்து மாயாவாத கண்டனம், உபாதி கண்டனம் ஆகிய நூல்களையும் மத்வர் இயற்றியுள்ளார். அதேநேரத்தில் இவரது விமரிசனங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் உரிய மறுப்பு அளிக்கும் வகையில், அத்வைத சித்தி என்ற நூலை பிற்காலத்தில் மதுசூதன சரஸ்வதி என்ற அத்வைத ஆசார்யர் இயற்றினார்.

மத்வரின் துவைத தத்துவத்தின் தாக்கத்தால் கிருஷ்ணரை வழிபடும் வைஷ்ணவ மார்க்கங்களும், தத்துவங்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் செழித்தன. அவற்றில் சைதன்யரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ பக்தி இயக்கம் மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியுள்ள இஸ்கான் எனப்படும் சர்வேதச ஸ்ரீகிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு சைதன்யரின் கருத்துகள் அடித்தளமிட்டன. நிம்பார்கர், வல்லபர் ஆகியோரின் தத்துவங்களிலும் மத்வரின் தாக்கங்கள் உள்ளன.

சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரின் முறையே அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத தத்துவங்களின் தாக்கத்தால் அவற்றை அனுசரித்தும், முரண்பட்டும் வெவ்வேறு வேதாந்தப் பிரிவுகள் தோன்றின. அவை குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT