அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது தமிழ் மூதுரை. மாதா பிதா குரு தெய்வம் என்பது சம்ஸ்கிருத ஸ்லோகம். நம்மை வழிநடத்தும் ஆசார்யர், அவர் மூலமாக அறியப்படும் தெய்வம் ஆகிய இரண்டையும்விட முதலாவதாக அறிந்து தொழப்படும் தெய்வம், நம்மைப் படைத்த அன்னையும் தந்தையும் என்பது இவை இரண்டின் பொருள். அன்னையும் பிதாவும் உருவத்தில் இரண்டாக இருந்தாலும், நம்மைப் படைப்பதிலும், வளர்ப்பதிலும் ஒன்றிணைந்தவர்கள். அதுபோல்தான், பாரதீய மெய்ஞான மரபில் ஒன்றுக்கொன்று உறுதுணையாகவும் ஆதரவாகவும் விளங்குகின்ற இணைவு இரட்டைகள் உண்டு.
தெய்வத் தமிழும், தெய்வீக சம்ஸ்கிருதமும் மொழி வடிவங்களில் வேறு வேறு போல இருந்தாலும், அடிப்படையில் உருவான விதத்திலும் அடித்தளமாகக் கொண்டுள்ள கருத்திலும் இணையானவை, ஒன்றுக்கொன்று உறுதுணையானவை. இதுபோல்தான், வேதம் சார்ந்த வைதீக வழிபாட்டு முறைகளும், வேதத்துக்கு வேறுபட்டதாகத் தோன்றும் தாந்திரீக வழிபாட்டு முறைகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையானவையே, இணைந்து செல்பவையே. வேதம், தந்தை வழி சமுதாயத்தினருடயது என்றும்; தந்திரம், தாய் வழி சமுதாயத்தினருடையது என்றும் சிலர் பேதம் பேசுகின்றனர். ஒரு வாதத்துக்கு அவ்வாறு வேறு வேறு என்று எடுத்துக்கொண்டாலும், அந்தத் தந்தை, தாயின் இணைவுதான் இன்றைய ஹிந்து மதம், பாரதீய தத்துவ மரபு. மேலும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை வழி சமுதாயம் என்று கூறப்படும் வேத மார்க்கத்திலும் காயத்ரி, சாவித்ரி, வாக்தேவி, துர்கா, ஸ்ரீ என்று அன்னைத் தெய்வங்களாக இறை உருவகப்படுத்தப்பட்டு துதிக்கப்படுகிறது. இதேபோல, தாய் வழி சமுதாயம் என்று கூறப்படும் தாந்திரீக மார்க்கத்திலும் சிவனாகவும், விஷ்ணுவாகவும் இறை வர்ணிக்கப்படுகிறது.
ஆக, வைதீகத்துக்கும் தாந்திரீகத்துக்கும் வெளிப்புறக் கண்ணோட்டத்தில் வேறுபாடுகள் இருக்கின்றபோதிலும், உள்ளார்ந்த நோக்கில் ஒத்திசைவுகளே உள்ளன. சிவனின் இணைபிரியாத ஆற்றலே சக்தி. அந்தச் சக்தியை பெண் உருவாக உருவகப்படுத்தி வணங்குவதே வழிபாட்டு முறையில் சாக்தமாகவும், தத்துவ நோக்கில் தந்திரமாகவும் விளங்கும் தாந்திரீகத்தின் தன்மை. அந்த ஒற்றைப் பரம்பொருளை சிவனுக்குப் பதில் விஷ்ணுவாகக் கருதுபவர்கள், அதன் இணையான சக்தியை ஸ்ரீ என்று அழைக்கிறார்கள்.
ரிக் வேதத்தில் ஏக இறைவனாகிய சிவன் (மங்களகரமானவன்) நேரடியாகச் சொல்லப்படாமல், அக்னி (நெருப்பு), சோமன் (நீர்), வாயு (பிராண சக்தி), இந்திரன் (இடியாகிய வஜ்ராயுதம் தரித்தவன், அதாவது தண்டிக்கும் சக்தி) ஆகிய வடிவங்களில் போற்றப்படுகிறான். உலகின் வாழ்வாதாரமாகிய சூரியனாகவும் கருதப்படுகிறான். இவை அனைத்தும் ஒரே இறையின் வெவ்வேறு ஆற்றல் நிலைகள். அந்த ஆற்றல் நிலைகளை தனித் தனி தேவ ரூபங்களாகவும், அவற்றின் ஆற்றலை தனித் தனி சக்தி ரூபங்களாகவும் வேதம் உருவகப்படுத்துகிறது. இந்த உருவகங்களை உட்பொருளாகக் கொண்ட உருவங்கள் பிற்காலத்தில் வேத வழிபட்ட வைதீக மார்க்கத்தில் வழிபடு தெய்வங்களாக ஏற்பட்டன. இதேபோல், வேதத்துக்கு வெளியே நாட்டுப்புற வழிபாட்டு முறைகளிலும் இதேபோன்ற கருத்தியல்கள் சார்ந்த உருவ வழிபாடுகள் தோன்றி வளர்ந்தன. அதாவது பண்டிதர், பாமரர் ஆகிய இரு நிலைகளில் கோட்பாட்டு ரீதியிலும், சடங்கு ரீதியிலுமான தத்துவங்களும், சமயங்களும் மலர்ந்தன. இவை ஒன்றுக்கு ஒன்று இணக்கமாகவும், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டும் என இருவகை பரிணாமங்களை அடைந்தன. அதுபோல்தான், தாந்திரீகமும் வைதீகம், அவைதீகம் என இரண்டு விதங்களிலும் பல்வேறு தத்துவ, வழிபாட்டு முறைகளைத் தழுவி வளர்ந்தது.
தாந்திரீகத்தின் மையம் சக்தி (ஆற்றல்) குறித்த அறிவும், வழிபாடும். ஆகையால், இது பொதுவாக சாக்த மதமாக உள்ளது. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் தாந்திரீகத்தையே தாங்கிப் பிடிப்பதாகக் கருதப்படுகிறது. வேதத்தில் இருந்து கிளைத்த பல்வேறு சைவ ஆகமங்களிலும், வைணவ ஆகமங்களிலும் தாந்திரீக வழிபாட்டு முறைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சைவத்தின் காளாமுகம், கௌலம், திரிகம் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த ஆகமங்களிலும் வைணவத்தின் பாஞ்சராத்ர ஆகம வழிபாட்டு முறைகளிலும் தாந்திரீகம் இடம்பெற்றுள்ளது. இதுபோக, சாக்த தந்திரங்களும் உள்ளன. அவைதீக மார்க்கமாகிய காபாலிகமும் தந்திரம் சார்ந்ததே. பிற்காலத்தில் பௌத்தத்தின் வஜ்ராயனப் பிரிவு எனப்படும் திபெத் லாமா பௌத்தம் முழுக்க முழுக்க தாந்திரீகம் சார்ந்தே உருவானது.
வரலாற்று ரீதியில், தாய்த் தெய்வ வழிபாடு மிகப் பழைமையானது. உத்தரப் பிரதேச மாநிலம் மீர்ஸாபூர் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தாய்த் தெய்வ வடிவச் சிலை, பழைய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பொருள்களின் காலத்தைக் கண்டறிய உதவும் கார்பன் ஆய்வு மூலம், இதன் காலம் கி.மு. 23 ஆயிரமாவது ஆண்டுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு காணப்படும் முக்கோண வடிவிலான வண்ணமயக் கற்களை, சக்தியின் வடிவங்களாகவே அப்பகுதி பழங்குடி மக்கள் இன்றளவிலும் வணங்கி வருகின்றனர். தாந்திரீக யந்திர வழிபாட்டில், முக்கோணச் சின்னம் மிக முக்கியமானதாகும். ஸ்ரீசக்கரத்தில் பல முக்கோணங்கள் இடம் பெற்றுள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்திலும் தாந்திரீகத்துக்கான ஆதாரங்கள் உள்ளன. சிந்துச் சமவெளிப் பகுதி அகழ்வாய்வுகளில், சிவனை ஒத்த பசுபதி முத்திரை கிடைத்தைப்போலவே, சக்தி என்று மதிக்கப்படும் பெண் வடிவ (யோனி பீடத்தில் அமர்ந்ததைப்போல) தெய்வச் சிலை கிடைத்துள்ளது. பொதுவாக சிவலிங்கம், சிவனும் சக்தியும் இணைந்த நிலையாகப் போற்றப்படுகிறது. கீழே உள்ள யோனி பாகம் (பெண்குறி போன்ற வடிவம்) சக்தி ஆகவும், மேலே உள்ள பாண பாகம் (ஆண்குறி போன்ற வடிவம்) சிவன் ஆகவும் கருதப்படுகிறது. இரண்டும் சேர்ந்ததே லிங்கம். லிங்கம் என்பதன் பொருள், குறியீடு. அதாவது, ஒன்றை உணர்த்தும் உருவக நிலை. இங்கே பெண்குறி, ஆண்குறி என்று கொச்சையாகவும், அருவருப்பாகவும் சமயத்தில் குறிக்கப்படுகிறதே என்று கருத வேண்டாம். இதுதான் இயற்கை. இயற்கை தன்னை, ஆண் - பெண் என இரட்டையாகத்தான் வெளிப்படுத்திக்கொண்டுள்ளது. உயிரினங்களின் தோற்றமும் வளர்ச்சியும் இந்த மாறுபட்ட இரண்டு அம்சங்களின் இணைவில்தான் அடங்கியுள்ளது. அதனால்தான் அது புனிதம்.
அதேநேரத்தில், தத்துவ ரீதியில் சிவலிங்கத்தின் குறியீட்டைக் கவனிப்போம். சிவலிங்கத்தின் மேல் பாகத்தில் மேல்நோக்கி இருக்கும் பாண பாகமானது நிலை ஆற்றலைக் குறிக்கிறது. கீழ்பாகத்தில் விரிந்து பரந்திருக்கும் யோனி பாகமானது இயங்கு ஆற்றலைக் குறிக்கிறது. நிலையாற்றல் இயக்கம் பெறும்போதுதான் பிரபஞ்சம் தோன்றி, செயல்படுகிறது. பிறகு குறித்த காலத்துக்குப் பின் அந்த இயங்கு ஆற்றல் நிலையாற்றலில் ஒடுங்கி நின்று, பிறகு மீண்டும் செயல்படுகிறது. இவ்வாறாக இயக்கம் முடிவின்றி நீள்கிறது. இந்த நிலையாற்றலும், இயங்கு ஆற்றலும் சேர்ந்ததுதான் சிவம். சிவம் என்பதற்கு நிறைவு, முழுமை என்று பொருள். அதேநேரத்தில், இந்த நிலையாற்றல் சிவன் என்ற ஆண் தெய்வமாகவும், இயங்கு ஆற்றல் சக்தி என்ற பெண் தெய்வமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.
சிவன் அறிவுமயமானது (புருஷன்), சலனமற்றது. சக்தி பொருள்மயமானது பிரகிருதி), இயக்கமுடையது. அறிவுதான் தனது ஆற்றலான பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைத்துள்ளது, அல்லது உலகமாக விரிந்துள்ளது. அந்த அறிவை முழுமையாக அறிந்துகொண்டு (ஞானம் பெற்று) நிறைவடைய, பொருளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பொருள்மயமாகிய இந்த உலகம் மயக்கும் இயல்புடையது. அதேநேரத்தில் பொருள்மயமான இந்த உடலுக்குள் அறிவு சூக்குமமாக உள்ளது. அந்த அறிவின் துணை கொண்டு நாம் உடலுக்கு உள்ளேயும் வெளியுலகிலும் இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி தெளிவுபெறும் ஆன்மிக முறையே தந்திரம்.
தந்திரம் என்ற சொல், தத்வம், மந்திரம் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு என்பார்கள். தத்வம் என்பது அதன் தன்மை, அதாவது பேரண்டவியல் குறித்த கோட்பாடு. மந்திரம் என்பது ஆற்றலை வெளிப்படுத்தும் சொற்களின், சப்தங்களின் பிரயோகம். ஆக, மந்திர உச்சாடனங்களின் மூலம் பேராற்றலை வழிபட்டு, பயன்பெறும் முறையே தந்திரம். தூய தமிழில் மனத்தின் திறம், அதாவது மன ஆற்றலை முறையாக வெளிப்படுத்துவதன் மூலம் மனதின் திறத்தை, அதாவது சுயமாக விளங்கும் ஆத்மாவின் ஆற்றலை அறிவதே தந்திரம் எனலாம். தந்திரத்தில் மந்திரம் தவிர, யந்திரமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. குறிப்பிட்ட வகை உலோகங்களால், குறிப்பிட்ட வடிவங்களில் உருவாக்கப்படும் இயந்திரங்கள், குறிப்பிட்ட ஆற்றலின் நிலைக்களன்களாக விளங்குகின்றன என்றும், அவை மந்திரத்தின் மூலம் செயல்படுத்த வைக்கப்படுகின்றன என்றும் தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.
வேதாந்தம் எவ்வாறு ஞானம், யோகம், கர்மம், பக்தி என்று நான்கு மார்க்கங்களைக் கொண்டுள்ளதோ, அதைப்போலவே தாந்திரீகமும் இதே நான்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஞானம் என்பது ஆற்றலை அறிதல், அதன் அடிபணிதல். அதாவது சக்தியை உணர்ந்து, வணங்குதல். சக்தி என்பது நாம் காணும் பிரபஞ்சமாகவும், பொருள்மயமாகவுமே உள்ளது. ஆக, சக்தியை வணங்குதல் என்பது லௌகீகத்தை (உலகவியல் இன்பங்களை, நடைமுறைகளை) ஏற்று அதில் முழு நிறைவடைதல் என்பதைக் குறிக்கிறது. இந்தவகையில், பாரதீய தத்துவ மரபுகளில் தந்திரம் வேறுபட்டு தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. மற்ற பல தத்துவங்கள், ஆசைகளைத் துற, பற்றுகளை விட்டொழி, உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாதே என்றுதான் உபதேசிக்கின்றன. ஆனால் தந்திரமோ, உலகியல் இன்பங்களை அனுபவிப்பது இயற்கை; ஆகையால் அதனைத் தவிர்ப்பதாக நினைத்துத் தடுமாறாதே, முறையாக அனுபவித்து நிறைவு பெறு என்கிறது.
தந்திரம் என்ற சொல்லுக்கு விரிபடு, பரவு, நெசவு செய் என்று வேறு பொருள்களும் உண்டு. அந்தவகையில், குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருங்காதே, விரிவுபட்டு, வாழ்க்கை என்னும் துணியை முழுமையாக நெய்து முடி என்கிறது தந்திரம். இயற்கை நமக்கு அமைத்துக்கொடுத்த வழிமுறையில் அனைத்து வகைகளிலும் திருப்தி (முழு நிறைவு) ஏற்பட்டால்தான், நாம் நமக்குத் தரப்பட்ட வாழ்வை உண்மையாகவும் முழுமையாகவும் வாழ்ந்திருக்கிறோம் என்று பொருள். இந்த முழுமையும் உண்மையும் இருந்தால்தான் முக்தி (விடுதலை) கிடைக்கும் என்கிறது தந்திர ஞானம்.
யோக மார்க்கத்தை தாந்திரீகம் மிக அற்புதமாக விளக்குகிறது. மனித உடலுக்குள் குண்டலினி என்னும் சக்தி, பாம்பைப்போல் சுருண்டுள்ளது. அதனை உடலுக்குள் உள்ள ஆற்றல் மையங்களுக்குள் ஒவ்வொரு கட்டமாக மேலெழுப்பி, இறுதியில் தலையின் மூளைப்பகுதியில் (அறிவாற்றல் உறைவிடம்) சேர்ப்பிப்பதன் மூலம் மனிதன் அபார ஆற்றல் படைத்தவனாக மாறுகிறான் என்கிறது. இந்த ஆற்றல் மையங்கள் சக்கரங்கள் எனப்படுகின்றன. முதுகுத்தண்டின் கீழ்ப்புறத்தில் உள்ள மூலாதார சக்கரத்தில் இந்தக் குண்டலினி சக்தி சிறிதாகத் தொடங்குகிறது. அதனை, அடிவயிற்றில் உள்ள ஸ்வாதிஸ்டானம், பின்னர் தொப்பூளில் உள்ள மணிபூரகம், இதயப் பகுதிக்குள் உள்ள அனாகதம், தொண்டைப் பகுதிக்குள் உள்ள விசுத்தி, இரு கண் புருவங்களின் மத்தியில் உள்ள ஆக்ஞை ஆகிய சக்கரங்களில் படிப்படியாக ஏற்றி, இறுதியில் மூளைப் பகுதிக்குள் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன்போல் விரிந்திருக்கும் சஹஸ்ரார சக்கரத்தில் சேர்ப்பிக்க வேண்டும். இதற்குக் கடுமையான பயிற்சி அவசியம். இந்த ஏழாவது சக்கரம்தான் மனிதனின் உயர்நிலை. குண்டலினி என்பது பிரகிருதி, அதாவது பொருள்மயமான சக்தி என்ற பெண் ஆற்றல் என்றால், சஹஸ்ராரத்தில்தான் ஒவ்வொரு ஜீவனின் சிவனாகிய புருஷன், அதாவது அறிவுமயமான ஆண் ஆற்றல் உறைகிறது. மூலாதாரத்தில் தோன்றும் சக்தி, சஹஸ்ராரத்தில் சிவனோடு இணைந்து சிவசக்தி ரூபமாகிறது. இந்த நிலையை எட்டுபவர்களுக்கு அட்டமா சித்தி கிடைக்கும் என்கிறது தந்திரம். இதனைத் தாண்டி துரியம் எனப்படும் எட்டாவது சக்கரத்தை எட்டுவது பேரிறையோடு ஒன்றுவதைக் குறிக்கிறது. இந்தக் குண்டலினி சக்தியை மேலெழுப்பும் யோகாசனப் பயிற்சிகளின்போது, ஓம் தவிர ஹ்ரீம், க்லீம் போன்ற சிறப்பு மந்திர சப்தங்களுக்கும் தந்திரம் முக்கியத்துவம் தருகிறது.
தாந்திரீக கர்ம மார்க்கம், பலிச் சடங்குகளை உள்ளடக்கியது. இது தக்ஷிணாசாரம், வாமாசாரம், மத்யாசாரம் என்று மூவகைப்படுகிறது. இவை முறைய சத்வ, தமோ மற்றும் ரஜோ குணங்களை அடிப்படையாகக் கொண்டது. தக்ஷிண ஆசாரத்தில், அதாவது வலது வழிமுறையில் சத்வம் மேலோங்கியிருக்கும். ஆகையால் இது சாத்வீக பலிச் சடங்குகளைக் கொண்டுள்ளது. ஆனால், வாம ஆசாரம் எனப்படும் இடது வழிமுறையில் தாமஸமே, அதாவது அறியாமையே மேலோங்கியிருக்கும். ஆகையால், மிகக் கடுமையான உயிர்ப்பலி ஏன் சிலரால் நரபலி கொடுக்கும் சடங்குகள்கூட இதில் அடங்கியிருக்கிறது. இந்த வாமாசாரம் இப்போது ஒடுக்கப்பட்டுள்ளது. எனினும், அக்காலத்தில் சாதி வேறுபாடின்றி, தனது ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என்று கருதும் சுயநலமிகள், இந்த வாமசாரத்தைக் கைக்கொண்டுள்ளனர். மத்ய ஆசாரம் என்பதில் ரஜஸ் மேலோங்கியிருக்கும். அதாவது, ஓரளவு சத்வமும், ஓரளவு தாமஸமும் கலந்த இடைவழி இது.
தாந்தீரிக பக்தி என்பது தாய்த் தெய்வம், பெண் தெய்வம் எனப்படும் சக்தியை வழிபடுகின்ற முறைகள்தான். இந்த வழிபாட்டு முறையில் பூஜைகள், வீ்ட்டுச் சடங்குகள், விரதங்கள், பக்திப் பாடல்கள் என அனைத்தும் அடங்கும். சாக்த ஆகமங்களில் இதுகுறித்த உபாசனைகளும், விரதங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, லலிதாம்பிகை வழிபாடு, ஸ்ரீவித்யா உபாசனை உள்ளிட்டவை தந்திர பக்தி மார்க்கம் சார்ந்தவையே. பழந்தமிழ்நாட்டின் கொற்றவை, பழையோள், நீலி வழிபாட்டு முறைகளும் இத்தகையவையே.
சிலப்பதிகாரத்தில் சாலினி என்ற பெயருடைய பழங்குடி இளம்பெண் மீது சாலினி என்ற பெண் தெய்வம் ஆவேசித்துக் குறி கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. தாந்திரீக வழிபாட்டின் முக்கிய அம்சமான சாமியாடுதல், குறிசொல்லுதல் ஆகியவற்றை இது உணர்த்துகிறது. (சாலினி என்பது அருந்ததி என்ற ரிஷி பத்தினியின் பெயராகும்). மகாபாரதத்தில் ஸ்கந்தப் பெருமான் (முருகன்), அன்னைத் தெய்வங்கள் புடைசூழ குழந்தைக் கடவுளாக வீற்றிருப்பது சிறப்புற வர்ணிக்கப்படுகிறது. தமிழிலும் அவன் சேய்க் கடவுள் அல்லவா? சப்த கன்னியர்கள் அல்லது சப்த மாதர்கள் (சில இடங்களில் அஷ்ட, அதாவது 8 மாதர்கள்) என்ற பெயரிலான 7 அன்னையரின் வழிபாடு, தொன்றுதொட்டே பாரதம் முழுவதும் பரந்துபட்டு காணப்படுகிறது. இதனை மாத்ருகா வழிபாடு, அதாவது தாய்த் தெய்வ வழிபாடு என்றே அழைக்கிறார்கள். பொதுவாக, பிராஹ்மணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா ஆகியோரே சப்த மாதர்களாக் கருதி வழிபடப்படுகின்றனர். சிலர், நாரசிம்ஹி என்ற தெய்வத்தையும் சேர்த்து 8 மாதர்கள் (மாதாக்கள்) என்று கூறுவர்.
மானுடர்களின் ஆதி மூதாதையர்களான சப்த ரிஷிகளின் பத்தினிகளை சப்த மாதர்கள் என்று கூறுவாரும் உண்டு. தாந்திரீக யோகத்தில் சக்தி, மஹாயோகினியாகவும் வழிபடப்படுகிறார். மொத்தம் 64 யோகினிகள் கூறப்படுகின்றனர். இவர்களுக்கு சௌசடீ யோகினி என்று பெயர். சில புராணக் கதைகளின்படி, தக்ஷனின் மகளும் சிவபெருமானின் மனைவியுமான சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாகக் கருதி போற்றப்படுகின்றன. அந்தவகையில், மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம், கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம், திருச்சி திருவானைக்கா (ஜம்புகேஸ்வரர்) அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம், காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், காசி விசாலாட்சி அம்மன் ஆலயம் உள்ளிட்டவை சக்தி பீடங்களாகும்.
சாக்த தந்திர வழிபாட்டின் தலைமையகமாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயில் கருதப்படுகிறது. இதுதவிர மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலும் சாக்த வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்தான் சாக்த வழிபாடு மிகுந்த உச்ச நிலையை அடைந்தது. சக்தியின் உயர் நிலையாகிய துர்க்கைக்கு சண்டீ என்றும் பெயர் உண்டு. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் என்பவர் சண்டீ சதகம் என்ற நூறு பாடல்களைக் கொண்ட நூலை இயற்றியுள்ளார்.
8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞரும் தத்துவ ஞானியுமான பவபூதி, தாந்திரீக வழிபாட்டு முறைகளை விளக்கும் மாலதீ மாதவம் என்ற இலக்கியத்தைப் படைத்தார். அம்பிகை மீது ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரி பாடியிருப்பதோடு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீசக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்தவராகவும் கருதப்படுகிறார். வைதீகத்துக்குப் புறம்பான வாமாசார தாந்திரீக சடங்குகள் குறித்த குலார்ணவ தந்திரம், தாந்திரீக சடங்குகள் குறித்து விவாதிக்கும் குலசூடாமணி ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்கள். தாந்திரீகத்தால் கிடைக்கும் மாய மந்திர ஆற்றல் குறித்து 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லக்ஷ்மண தேசிகர் எழுதிய சாரதாதிலக என்ற நூல் விவரிக்கிறது. மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவீ மகாத்மியம் எனப்படும் தேவீ பாகவதம், சக்தியே எல்லாம் வல்ல இறை என்று பறைசாற்றுகிறது. சிவன், விஷ்ணு, பிரும்மா ஆகிய மூவரையும் இதர தேவர்களையும் சக்தியே படைத்தாள் என்கிறது தேவீ பாகவதம்.
தண்ணீரில் நடத்தல், அந்தரத்தில் மிதத்தல் போன்ற அபார சித்திகளைப் பெற உதவும் கடுமையான யோகாசனங்களைக் கூறும் ஹடயோகம், தாந்திரீக மார்க்கத்தைச் சேர்ந்ததே. லயயோகம், சஹஜயோகம் ஆகியவையும் தந்திரத்தில் இருந்து கிளைத்தவையே. ஜைன மதத்திலும் யக்ஷிகள், யக்ஷிணிகள் என்ற பெயரில் பெண் காவல் தெய்வங்கள் உபாசனைத் தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.
பௌத்த மதத்தில் தாந்திரீகத்தின் தாக்கம் நிறையவே உண்டு. மைத்ரேய புத்தரின் இணையான சக்தி தாரா தேவி எனப்படுகிறார். இதுதவிர, முழுக்க முழுக்க தாந்திரீகத்தை உள்வாங்கிக்கொண்டு திபெத்தில் லாமா பௌத்தம் எனப்படும் வஜ்ரயானம் உருவானது. இதற்கு தந்திரயானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வஜ்ரம் என்பது இந்திரனின் ஆயுதம். யோக வல்லமை பொருந்திய ததீசி என்ற முனிவரின் கடினமான முதுகுத் தண்டே இந்திரனின் வஜ்ரம் ஆனது. இதனை இடி ஆயுதம் என்றும் அழைப்பர். அத்தகு உறுதி வாய்ந்த ஆற்றலை தந்திரங்கள் மூலம் தரும் வழிமுறை என்பதால், இது வஜ்ரயானம் என்று பெயர் பெற்றது. காலசக்ரயானம், சஹஜயானம் ஆகியவை பிற்காலத்தில் பௌத்தத்தில் தோன்றின. தாந்திரீக வழிசார்ந்த வஜ்ராயனத்தின் மிகச் சிறந்த நூலாக மஞ்சுஸ்ரீ மூலகல்பம் மதிக்கப்படுகிறது.
பிரகிருதி – புருஷ வாதம் பேசும் சாங்கியமும், பிரும்மத்தைப் பற்றி விவாதிக்கும் வேதாந்தமும் இணைந்து அவற்றோடு பழைமையான தாய்த் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளும் கலந்து உருவானதே தாந்திரீகம். இன்றைய கோவில் வழிபாடுகளுக்கும், இதர பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்கும் தந்திரமும், அதனைச் சார்ந்து எழுந்த ஆகமங்களுமே ஆதாரங்களாக உள்ளன.
அதேநேரத்தில், வாமாசார வழிபாட்டு முறையில் தந்திரத்தின் உட்பொருளுக்குத் தவறாக பொருள் கொள்ளப்பட்டு, பஞ்சமகாரங்கள் என்ற பெயரில் அருவருப்பான வழிபாட்டு முறையும் இடைக்காலத்தில் ஏற்பட்டது. மது, மத்ஸ்யம் எனப்படும் மீன், மாமிசம், முத்ரா (முத்திரை), மைதுனம் ஆகியவையே அந்த 5 மகாரங்கள். வாமாசார முறைப்படி, மது என்பது சாராயமாகவும், மாமிசம் என்பது இறைச்சியாகவும், மத்ஸ்யம் என்பது மீன் என்றும், முத்ரா என்பது மயக்கம் தரும் ஒருவகை உணவுப்பொருளாகவும், மைதுனம் என்பது ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவு என்றும் பொருள் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப அருவருப்பான சடங்குகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்தப் பஞ்சமகாரங்களின் உட்பொருள் – மது என்றால் தேன், அமிர்தம். குண்டலினி சக்தியை மேலேற்றுபவர்கள், தலையின் உச்சியில் உள்ள சஹஸ்ராரத்தில் இந்தத் தேனின் சுவையை ருசிக்கலாம். இதனைத்தான் சித்தர்கள் உச்சியில் சுரக்கும் தேனைக் குடி என்றார்கள். மாமிசம் என்பது நாவை அடக்குதல். ருசிக்காக உணவு உண்ணாமை, கடுமையான வார்த்தைகளைச் சொல்லாமை ஆகிய கட்டுப்பாடுகள் இதில் அடங்கும். அதேநேரத்தில், நாக்கைப் பிடித்துக்கொண்டிருக்கும் நாளத்தை யோகத் திறமையால் அகற்றி, நாவை உட்புறமாக மடித்து தொண்டைக் குழிக்குள் திருப்பிச் செலுத்தும் யோகத் திறனையும் குறிக்கிறது. மத்ஸ்யம் என்பது இடை, பிங்களை என்று மாறி மாறிச் செல்லும் மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றான வாசியைக் கட்டுப்படுத்தும் யோகத் திறனே மத்ஸ்யம். முத்ரா என்பது முத்திரை. கரங்களையும் உடலின் உறுப்புகளையும் குறிப்பிட்ட நிலைகளில், அதாவது முத்திரைகளில் இருத்தி மேற்கொள்ளப்படும் யோகக் கலை. நல்லோர்களின் குழாத்தில், அதாவது சத் சங்கத்தையும் முத்ரா என்பார்கள். மைதுனம் என்பதற்கு இணைவு என்று பொருள். இது ஜீவாத்மாவாகிய தலைவி, அதாவது குண்டலினி சக்தி பரமேஸ்வரனாகிய தலைவன், அதாவது பேரறிவுடன் இணைவதைக் குறிக்கிறது.
ஆசைகளை முறையாக அனுபவித்து திருப்தியடைந்து, அதன்மூலம் அதுசார்ந்த பற்றுகளில் இருந்து விடுபடுவதை தந்திரம் போதிக்கிறது. ஆனால், அந்த ஆசைகளை விதவிதமாக அனுபவித்து அவற்றிலேயே ஊறிக்கிடக்கும் ஒருவித மயக்க நிலையையே ஏற்படுத்துவதால், வாமாசாரம் கீழானதாக, அறியாமை வடிவான தமோ குணம் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆன்மா இல்லை என்று கூறும் நாத்திகர்களான லோகாயதவாதிகளும், உலகியல் இன்பங்களையே வலியுறுத்துவதால் ஒருகாலகட்டத்தில் இவர்களும், ஆன்மிக நாட்டம் இருந்தாலும் ஆசைகளாலேயே உந்தப்பட்டு உலகியல் இன்பங்களை நாடும் வாமாசாரர்களும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒன்றாக இணைந்திருந்த நிலை ஏற்பட்டது.
இவ்விதமாக, வாமாசாரம் தவிர்த்து, தந்திரம் என்பது உலகியல் இன்பங்களை முறையோடு அனுபவிக்கவும், அதில் நிறைவுற்று பிரகிருதி ரூபமான குண்டலினி ஆற்றலின் மூலம் அதற்கு மேம்பட்ட இறைவனோடு ஒன்றும் அனுபவத்தையுமே போதிக்கிறது. யோக மார்க்கத்திலான சித்தி எனப்படும் ஆற்றல்களை வலியுறுத்தினாலும் தந்திரத்தில் சடங்குகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதேநேரத்தில், சடங்கு சம்பிரதாயங்களைப் புறக்கணித்தும் அவற்றைக் கடுமையாகக் கண்டித்தும் எழுந்த ஞான மார்க்கமே சித்தர் நெறி.
அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.