தத்துவ தரிசனம்

23. இல்லாமைக்குள் இருப்பு

இல்லாமை இல்லை என்பதைத்தான் நாஸதீய சூக்தம் எடுத்துரைக்கிறது. இதன்பொருள் இருப்பு உள்ளது என்பதே.

பத்மன்

இல்லாமை இல்லை என்பதைத்தான் நாஸதீய சூக்தம் எடுத்துரைக்கிறது. இதன்பொருள் இருப்பு உள்ளது என்பதே. நேரடியாகவே இருக்கிறது என்பதைச் சொல்லாமல், அது ஏன் இரண்டு எதிர்மறைகளைப் போட்டு இல்லாமை இல்லை என்று கூற வேண்டும்... ஏனெனில் இருளையும், ஒளியையும்போல இல்லாமையும் இருப்பும் இணைந்தே இருக்கின்றன. இருள் என்பது என்ன... ஒளியில்லை என்பதல்ல; குறைந்த அளவிலான ஒளியே இருள். அதுபோல ஒளி என்பது என்ன... இருள் இல்லை என்பதல்ல; குறைந்த அளவிலான இருளே ஒளி. ஆக, ஒளியற்றதாகக் கருதப்படும் இருளிலும் ஓரளவு ஒளி இருக்கிறது, இருளற்றதாகக் கருதப்படும் ஒளியிலும் ஓரளவு இருள்  இருக்கிறது. இரண்டு விஷயங்களிலுமே இல்லாமைக்குள் இருப்பு இருக்கிறதல்லவா...

அதுபோல்தான் தோன்றி மறையும் தொடர் நிகழ்வான இந்தப் பேரண்டச் சுழற்சியிலும் இல்லாமைக்குள் இருப்பு இருக்கிறது. ஓர் அகண்ட பரிபூரணத்துக்குள் இருப்பு, இல்லாமை என்ற பேதமே இல்லாமல் இரண்டும் இணைந்தே இருக்கின்றன. அது எல்லாமாகவே இருப்பதால், தனித்தனியாக இது, அது என்ற பேதமில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் உலகின் தொடக்க கணமும் அப்படிப்பட்டதே. இதனை, த்ருஷ்டுப் என்ற பாவகையில் அமைந்த நாஸதீய சூக்தத்தின் இரண்டாவது ஸ்லோகம் மிக அழகாகச் சொல்கிறது.

ந ம்ருத்யுர் ஆஸீத் அம்ருதம் ந தர்ஹி
ந ராத்ர்யா அஹ்ன ஆஸீத் ப்ரகேதஹ்
ஆனீதவாதம் ஸ்வத்யா ததேகம்
தஸ்மாத்தான்யன் ந பரஹ் கிஞ்சநாஸ

(இறப்பு இல்லை இறவாமை இல்லை
இரவும் இல்லை பகலுமே இல்லை
அவ்வொன்று தானாய் மூச்சின்றி சுவாசித்தது
அதுவன்றி வேறொன்றும் இல்லை சிறிதுமில்லை)

உலகின் தொடக்க கணத்தில் இறப்பு (மிருத்யு) இல்லை, ஆகையால் எதற்கு எதிர்ப்பதமான இறவாமையும் (அம்ருதம்) இல்லை. அப்போது இரவு ஏற்படவில்லை. ஆகையால் இரவுக்கு எதிர்ப்பதமான பகலும் இல்லை. இறப்பும், இறவாமையும் எப்போது ஏற்படும்... உயிரினங்கள் தோன்றிய பிறகுதானே... தொடக்கத்தில் உயிரினங்கள் தோன்றாததால் இரண்டும் இல்லை. ஆயினும் இறப்பு, இறவாமைக்கான அடிப்படைக் கூறுகள் வெளிப்படாமல் மறைந்தே இருந்தன. இதுபோல், பெருமோதலுக்குப் பின் ஒளிப்பிழம்பு வெடித்துச் சிதறி, சூரியன், பூமியும் தோன்றிய பிறகுதான் இரவும், பகலும் வருகின்றன. ஆயினும் இரவும், பகலும் தொடக்கத்தினுள் மறைமுகமாக இருந்தன. இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய அந்த ஒன்று, தான் மட்டுமே இருந்துகொண்டு, சுயஉந்துதலால் தானாகவே சுவாசமின்றி சுவாசித்தது.

எவ்வித வெளிப்பாடுகளும் தோன்றாத நிலையில், அந்த ஒற்றை விஷயம் - ஒற்றைப் பரம்பொருள் மாத்திரமே இருந்தது. அப்போது உயிர்ச் சக்தியான சுவாசம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை. இருப்பினும், அதனுள் உயிர்ப்புக்கான மூலம் இருந்ததால் அது சுவாசமின்றி சுவாசித்தது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லாததால் தூண்டுவதற்கு எதுவுமில்லை. ஆகையால் உயிர்ப்பு என்ற சுவாசத்தை அது சுய உந்துதல் காரணமாகவே சுவாசித்தது. இதனையே நவீன விஞ்ஞானமும் கூறுகிறது - பெரு வெடிப்புக்கு (பிக் பேங்க்) பிறகு, சில நொடிகளிலேயே விரிந்துகொண்டே செல்லும் தன்மை நின்றுவிடுகிறது. இதனால் பேரண்டம் (உலகம்) இலகுவானதாகவும் ஏறத்தாழ ஒற்றைத்தன்மையுடனும் விளங்கியது. அப்போது பொருள் (மேட்டர்), எதிர்ப் பொருள் (ஆன்ட்டி மேட்டர்), ஒளிவீச்சு (ரேடியேஷன்) ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து கோள வடிவிலான தெளிவற்ற கலவையாக இருந்தது – என்கிறார்கள் அண்டவியல் ஆய்வாளர்கள். ராபர்ட் ஜாஸ்ட்ரோ என்ற விஞ்ஞானி, பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு-இறப்பு என எண்ணற்ற படைப்பு (கிரியேஷன்) என்ற கணங்களுக்குள் இந்தப் பேரண்டம் முடிவில்லாமல் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கிறது என்கிறார். இதனைத்தான் உலகின் தோற்றமும் முடிவும் முடிவில்லாதது என்கிறது வேதம்.

இப்போது, மூன்றாவது ஸ்லோகத்தைப் பார்ப்போம் -

தம் ஆஸீத்தமஸா குல்ஹமேக்ரே()ப்ரகேதம்
ஸலிலம் ஸர்வமா இதம்
துச்சயேநாப்வபிஹிதம் யதாஸீத்
தபஸஸ்தன்மஹினா ஜாயதைகம்

(இருளே இருளுள் உறைந்து இருந்தது
இடைவிடாது நீரே எங்கும் இருந்தது
இதுவரை மறைவு இப்போது எழுந்தது
அதனுடை எண்ணம் என்னும் வலியினால்)

உலகின் புதிய தொடக்கம் நிகழும்வரையில் இருளே இருளுக்குள் உறைந்து காணப்பட்டது. அப்போது பிரித்தறிய முடியாத ஒரு கொதி திரவமே எங்கும் இருந்தது. தொடக்கம் என்ற அந்த கணத்திலே, இதுவரை எது இல்லாமைக்குள் ஆழ்ந்து மறைந்து இருந்ததோ, அது வடிவமாக வெளிப்பட்டு எழுந்தது. அதற்கு அதனுடைய எண்ணம் (நோக்கம்) என்ற வலிமையே (ஆற்றலே) காரணம். விருப்பத்துக்கும் எண்ணம் எனப்படும் நோக்கத்துக்கும் வேறுபாடு உள்ளது. விருப்பம், எவ்வித இலக்கும் இல்லாமல் தோன்றும் ஆசை ஆகும். ஆனால், எண்ணம் அல்லது நோக்கம் என்பது ஒரு திட்டத்தை, ஓர் இலக்கை முன்வைத்து ஏற்படுகின்ற நினைப்பு ஆகும்.

இதனை நவீன விஞ்ஞானம் - உலகம் விரிவடையத் தொடங்கியபோது, பொருளும் எதிர்ப் பொருளும் ஒன்றையொன்று பொருதின (எதிர்த்துப் போரிட்டன). எதிர்ப் பொருளைவிட பொருள் அதிகம் இருந்ததால், அதுவே உலகில் உள்ள பல்வேறு அண்டங்களாக எழுந்தது என்கிறது. இதனை எவ்வளவு அழகாக நாஸதீய சூக்தம் சொல்லியிருக்கிறது. இல்லாமையில் இருந்து வெளிப்பட்ட இருப்பான இந்த உலகத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, அதுதான் மீண்டும் மீண்டும் உலகம் தோன்றி மறைவதற்குக் காரணம் என்பதைத்தான் அதனுடைய எண்ணம் என்ற வலிமையினால் என்கிறது நாஸதீய சூக்தம். இந்த நோக்கம்தான் ஆன்மாவின் முக்தி என்கிறது ஆன்மீகம்.

(நமது தமிழும் - ஆன்மிகத்திலும், அறிவியலிலும் ஆழங்கால்பட்டதுதான். பொருள் என்ற பெயரே இதற்குச் சான்று. காணப்படும் பொருள்கள், அணுக்களால் ஆனவை. அந்த அணுவுக்குள் பல்வேறு மூலக்கூறுகள் எப்போதும் ஒன்றோடு ஒன்று பொருதிக்கொண்டே (போரிட்டுக்கொண்டே) இருப்பதால்தான் அவற்றால் ஆனதற்கு பொருள் என்றே பெயர் வந்தது. இதேபோல் உலகம் என்ற சொல், உல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. உல் என்பதற்கு சுற்றுதல், சுழலுதல் என்று பெயர். சுற்றி வருவதற்குப் பெயர் உலா, சுற்றி வர இடிப்பது உலக்கை, அங்கும் இங்கு சுற்றி வருவதற்குப் பெயர் உழலுதல், சுற்றி வர நிலத்தைத் தோண்டுவது உழவு என உல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து எண்ணற்ற சொற்கள் பிறந்தன. உலகு, உலகம் என்பதும் சுற்றி வருவது, சுழற்சி உடையது என்ற பொருளிலே அப் பெயரைப் பெற்றது. அதேநேரத்தில் இது வெறுமனே அண்ட வெளியில் சுற்றி வருவது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் தோன்றி மறைகின்ற சுழற்சி என்ற பொருளையும் உள்ளடக்கியது.)

மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சிகளுக்கு உயிர்கள் ஆட்படுவதற்கு ஆசைதான் காரணம் என்றால், இந்த உலகம் மீண்டும் மீண்டும் தோன்றி மறைகிறதே அதற்கும் ஆசைதான் காரணமா? ஆம் அதற்கும் ஆசைதான், இச்சைதான் காரணம் என்கிறது நாஸதீய சூக்தம். இதற்கு முன்பு உலகின் தோற்றத்துக்கு அதன் திடமான நோக்கம் காரணம் என்று கூறியிருக்கிறதே, அதற்கு இது முரணாக இருக்கிறதே என்ற கேள்வி எழுகிறதா? முரண் இல்லை. இரண்டும் சரியானதே.

தனிப்பட்ட ஆன்மாக்கள் ஆசைகள் நிறைவடையாததால் முக்தி நிலையை அடைய மீண்டும் சம்சார சாகரத்தில் சுழல்கின்றன. இவற்றில் சில ஆன்மாக்கள் நிறைவடைந்து கடைத்தேறினாலும்கூட உலக அழிவின்போது நிறைவடையா ஆசைகளோடு பல ஆன்மாக்களும் பிரகிருதியில் லயமடைகின்றன. அவற்றின் ஆசைகளும் கர்ம பலன்களும் நிறைவடையாததால் அவற்றை நிறைவு செய்ய புதிய உலகம் பிறக்கிறது. அப்படிப்பட்ட ஆன்மாக்களையும் முக்தி அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கம், ஒவ்வொரு முறையும் புதிய உலகத்தைப் பிரசவிக்கும் பிரகிருதிக்கு இருக்கிறது. ஆயினும் ஒவ்வொரு முறையும் நிறைவடையும் (முடிவடையும்) உலகிற்குள் முடிவடையாத ஆசைகள், கர்ம வினைகள் இருப்பதால் மீண்டும் உலகம் தோன்ற நேரிடுகிறது.

ஆக, ஏற்கெனவே முடிந்துபோன, இல்லாமல்போன உலகுக்குள் புதிய உலகுக்கான இருப்பு சூட்சுமமாக இருக்கிறது. அதுவே புதிய உலகின் தொடக்கத்துக்கான விதை. இதனை நாஸதீய சூக்தத்தின் நான்காவது செய்யுள் எடுத்துரைக்கிறது.

காமஸ்ததக்ரே ஸமவர்ததாதி
மனஸோ ரேதஹ் ப்ரதமம் யதாஸீத்
ஸதோ பந்துமஸதி நிரவிந்தன்
ஹ்ருதி ப்ரதீஷ்யா கவயோ மனீஷா

(ஆதி மனதில் ஆசை பிறந்தது
அதுவே முதலாம் விதையாய் எழுந்தது
இருப்புக்கு இல்லாததில் இருக்கின்ற தொடர்பை
இதயத்தில் அறிந்தனர் கவிகளும் ரிஷிகளும்)

பல எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றபோதிலும், புதிய எண்ணங்களின் பிறப்பிடமும் அதுவே. பரம்பரைக் குணங்கள் நம்மிடம் தொடர்வதைப்போல, பழைய உலகின் எண்ணக் குவியல் புதிய உலகின் ஆதி மனதாக அமைகிறது. உலகின் தொடக்கத்தில், அவ்வாறாக அமையப்பெற்ற ஆதி மனத்தில் ஆசை பிறக்கிறது. அதுவே புதிய உலகின் படைப்புகளுக்கான முதலாவது விதையாகத் தோற்றம் கொள்கிறது. இவ்வாறாக புதிய படைப்பு என்னும் இருப்புக்கு, ஏற்கெனவே இருந்து இல்லாமல் போனதில் இருக்கின்ற தொடர்பை, தங்களது இதயத்தில் - அதாவது தங்களது தூய சிந்தனையின் மூலம் கவிகளும் (வேத வாக்கியங்களைக் கூறிய ஆதி கவிகளாகிய மகான்களும்), ரிஷிகளும் (தவசீலர்களும்) அறிந்துகொண்டனர் என்கிறது நாஸதீய சூக்தம்.

வெறும் பொருள்கள், அணுக்கள் மாத்திரமே படைப்பின் பல்வேறு பரிணாமங்களுக்கும், பல்வேறு பரிமாணங்களுக்கும் காரணமாக அமைந்துவிடாது. அதற்கு எண்ணமும் (கருத்தும்) அவசியம். இதனை வானவியல் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி மனது (காஸ்மிக் மைண்ட்) என்கிறார்கள். இதனை நாஸதீய சூக்தம் ஆதி மனஸ் என்கிறது. வேதத்தின் பிற சூத்திரங்களில் இந்த ஆதி மனம் அல்லது காஸ்மிக் மைண்ட் - பிரஜாபதி அல்லது பிரும்மாவாக வர்ணிக்கப்படுகிறார். இந்த ஆதி மனத்தின் மூலமே மனிதர்கள் மட்டுமின்றி, விதவிதமான உயிரினங்களும், உயிரற்றவைகளும் உருவாகியுள்ளன. இந்தப் புதிய படைப்புகளுக்குக் காரணமான ஆதி மனத்துக்கும் மேலாக ஏதேனும் ஆற்றல் இருக்கிறதா?

அதுபற்றி நாஸதீய சூக்தம் என்ன சொல்கிறது என்பதை அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT