கீழடி ஸ்பெஷல்!

கீழடி ஸ்பெஷல்: வியக்க வைக்கும் கட்டுமானப் பொருட்கள், கட்டட தொழில்நுட்பம்!

சி.பி.சரவணன்

பழங்காலத்திலேயே செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர் தமிழ் மக்கள். இன்று நாம் கட்டும் கட்டடங்கள் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காத நிலையில்,  2600 வருடங்கள் கழிந்து தன் நிலைத் தன்மையை பறைசாற்றுகின்றன.

கட்டுமானப் பொருட்களின் பகுப்பாய்வு (analysis of the structural remains)
கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றின் கலவை மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது.

செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிகளவு (7%) சுண்ணாம்பும் கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்து, 97 சதவீதம் சுண்ணாம்பு கொண்டிருந்ததையும் உற்று நோக்கும் பொழுது அக்காலக்கட்ட மக்கள் மிகத் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேற்படி சுண்ணாம்பு சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதால் மிகவும் வலிமையாக இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே சான்றாகும்.

கட்டட தொழில்நுட்பம் (structural engineering )
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இரண்டு கட்ட அகழாய்வுகளில் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழாய்வில் 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38x23x6 அளவு மற்றும் 38x26x6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செங்கல்லின் அகலம் மட்டுமே சிறிது மாறுபட்டு இருக்கிறதே தவிர நீளம் மற்றும் தடிமன் ஆகியவை ஒரே அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவை, தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல்1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுவதால் அக்காலகட்டத்தில் கட்டுமானத்தில் காணப்படும் தொழில்நுட்பத்தை உய்த்து உணரலாம். 

சில பகுதிகளில் தரைத்தளம் கண்டறியப்பட்டுள்ளது.  நன்கு சன்னமான களிமண்ணைக் கொண்டு தரைத்தளம் அமைத்து, செங்கற்களைக் கொண்ட பக்கச்சுவர்களை எழுப்பியுள்ளனர். தூண்கள் நட்டு மேற்கூரை அமைக்க ஏற்படுத்தப்பட்ட துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தூண்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான சான்றுகள் அகழாய்வில் கிடைக்கப் பெறவில்லை. எனினும், அகழாய்வில் இரும்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை வைத்து மரச்சட்டங்களை இரும்பு ஆணிகள் கொண்டு பொருத்தியிருக்க வேண்டும் என்று கருதலாம். 

அகழாய்வின் ஒரு பகுதியில் ஏராளமான கூரை ஒடுகள் சரிந்து விழுந்து பரந்து கிடைத்ததற்கான அடையாளங்கள் ஆவணப்படுத்துப்பட்டுள்ளன. இக்கூரை ஓடுகளின் தலைப் பகுதியில் இரண்டு துளைகள் காணப்படுகின்றன. மரச்சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையின் மீது கீழிலிருந்து மேலாக சுடுமண்ணாலான கூரை ஓடுகள் வேயப்பட்டிருப்பதுடன், அவை கீழே விழாமல் இருக்க அத்துளைகளில் நார் அல்லது கயிறு கொண்டு கட்டியிருக்க வாய்ப்புள்ளது.

மேற்கூரை மீது விழும் மழை நீர் எளிதில் கீழே வரும் வகையில், கூரை ஓடுகளில் விரல்களால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட நீர் வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன.

இந்த கட்டுமான அமைப்புகளை சங்க காலத்தில் நிலவிய, வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக பார்க்கலாம். தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT