எட்டாம் வகுப்பு படிக்கும் பாலு சற்று பருமனான பையன். முரட்டுக் குணம் உள்ளவன். அவனது வகுப்பில் படிக்கும் கோபு என்ற ஒல்லியான பையனைக் கிள்ளுவான், தள்ளிவிடுவான், சினமூட்டிப் பேசுவான்.
கோபு சாந்தமான பையன். பாலுவை எதிர்த்துச் சண்டை போடமாட்டான். ஒதுங்கிப் போய்விடுவான்.
பாலுவின் வீட்டில் 'சிம்மி' என்னும் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. அந்த நாய் வீட்டின் முன்னால் படுத்திருக்கும்போது அந்தத் தெருவின் வழியாகப் போகும் அடுத்த தெரு நாயாகிய மோகு, சிம்மியைப் பார்த்து குரைக்கும். கடித்திடப் பாய்ந்திடும்.
ஆனால் சிம்மி கோபப்பட்டு எதிர்த்துக் குரைக்காது. அமைதியாகப் படுத்திருக்கும்!
சிம்மி எதிர்த்து சண்டைக்கு வராததால், மோகு சற்றி நேரம் குரைத்துப் பார்த்துவிட்டுப் போய்விடும்.
அதைப் பார்க்கும்போது பாலுவிற்குக் கோபம் வரும். "மோகு உன்னை வம்புக்கு இழுக்கிறான்...,அவனைக் கடிக்காமல் படுத்திருக்கிறாயே..,உனக்குக் கோபம் வராதா?....அல்லது அவனது உடம்பு உன்னை விடவும் பெரியதாக இருப்பதால் பயப்படுகிறாயா?'' என்று சிம்மியைத் திட்டுவான்.
ஒரு நாள் காலை...
சிம்மி வீட்டு வாசலில் படுத்திருந்தது. அப்போது தெருவில் சென்ற மோகு, சிம்மியைப் பார்த்துக் குரைத்தது.
சிம்மி அமைதியாகப் படுத்திருந்தது.
அது பயப்படுவதாக நினைத்த மோகு, பாய்ந்து சென்று சிம்மியின் காலைக் கடித்தது.
சிம்மியின் காலில் குருதி வழிந்தது! கடிபட்ட இடம் வலித்தது!
பொறுமை இழந்த சிம்மி, எழுந்து மோகுவின் கழுத்தைக் கவ்வித் தூக்கித் தரையில் போட்டுக் கடித்துக் குதறியது.
மோகு அலறியது! "நான் செய்தது தப்புதான்...,என்னை மன்னித்து விட்டுவிடு'' என்று சொல்லிக் கண்ணீர் விட்டது.
மோகு சிம்மியை வம்புக்கு இழுத்தபோதெல்லாம் சிம்மி கோபப்படாமல் ஒதுங்கிப் போனது, பயத்தினால் அல்ல! பொறுமையாக இருந்துள்ளது. மோகுவின் செயல் அளவு கடந்து போனதால் சிம்மிக்குக் கோபம் வந்துவிட்டது! பொறுமை இழந்து தன் பலத்தைக் காட்டிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட பாலு சிம்மியை அமைதிப் படுத்தி அழைத்து வந்தான்.
சாது மிரண்டால் என்ன ஆகும் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது!
அன்று பள்ளிக்குச் சென்ற பாலு முற்றிலும் மாறியவனாக இருந்தான். அவனது முகத்தில் சாந்தம் இருந்தது. கோபுவிடம் சென்று, "கோபு, நான் உன்னை வீண் வம்புக்கு இழுக்கும்போதெல்லாம் நீ ஒதுங்கிப் போனது பயத்தினால் அல்ல..., சண்டை வேண்டாம் என்பதற்காகத்தான்...,என்பதை உணராமல் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, நண்பனாக ஏற்றுக்கொள்'' என்றான்.
இருவரும் கை கோர்த்து வகுப்பை நோக்கி நடந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.