ஓடும் ரயிலில் 13 கிலோ நகை திருடு போன சம்பவம் தொடர்பாக மகராஷ்டிரத்தை சேர்ந்த 6 பேரை ஈரோடு போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தமிழக ரயில்வே ஐஜி ஆறுமுகம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை சௌகார்பேட்டை என்.எஸ். வீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் வினோத்குமார் ஜெயின். இவரது கடையில் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் வரதாராம், மதன்சிங், ஜிதேந்தர் சிங். தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு செல்லும் இவர்கள் மாடல் நகைகளை காட்டி ஆர்டர்களை பெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த செப்.21-ம் தேதி சென்னையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 3 கிலோ நகைகளுடன் கிளம்பிய இவர்கள் மூவரும், சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் பெற்றனர். பின்னர் கோவைக்கு சென்ற இவர்கள் அங்குள்ள நகைக்கடைகளில் ஆர்டர் பெற்றுவிட்டு செப்.23-ம் தேதி கோவை ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தங்களிடம் இருந்த நகைகளை 2 பைகளில் வைத்து சங்கிலியால் ரயிலில் கட்டிவைத்திருந்தனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது 2 பைகளையும் காணவில்லை. இது குறித்து ஈரோடு ரயில் நிலையத்தில் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ரயில்வே டிஐஜி தினகரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பலுக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் நிம்புரா பகுதியை சேர்ந்த சுனில் யஸ்வத் ஜாதவ் (24), சாடிசத்ரா நெலியை சேர்ந்த காகாசாகிப் (19), மாடா பகுதியை சேர்ந்த ராஜாராஜம் திகம்பர் டிக்கோலா (44), சாம்ராவ் திகம்பர் டிக்கோலா (54), இவரது மகன் சிவராஜ் சாம்ராவ் டிக்கோலா (23), தேவ்ராம குஞ்சால் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 3 பொலிரோ கார்கள், டிராக்டர், 25 சவரன் நகைகள், நிலம் உள்பட ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.