முகப்பு
தற்போதைய செய்திகள்

தலித் மாணவரின் உடலை பெற மறுத்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்ட தலித் வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவரின் சடலத்தை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சியினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

சிதம்பரம் அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்ட தலித் வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவரின் சடலத்தை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சியினர் தொடர் முழக்க ஆர்பாட்டம் காமராஜர் அரசு மருத்துவமனை முன்பு இன்று நடைபெற்றது.

போராட்டத்தினை முன்னிட்டு சிதம்பரத்தில் பதற்றம் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல  ஐஜி கண்ணப்பன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஈஸ்வரன் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன்(18). ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த இவர் ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பரதூர்சாவடி ரவி மகள் துர்காதேவி(19) படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த துர்காவின் பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். மாணவர் கோபாலகிருஷ்ணன் கடந்த டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.

தனது மகனை காணவில்லை என தந்தை மாயகிருஷ்ணன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கழுத்து அறுபட்டு அழுகிய நிலையில் உடல் சாத்தமங்கலம் கன்னிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.  சம்பவத்தை தொடர்ந்து அருகே வெள்ளியக்குடி கிராமத்தில் மாணவி துர்காவின் பெரியதந்தை ராமமூர்த்தி வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி வீடு முற்றிலும் எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் இருந்த இருவீடுகளும் எரிந்து சேதமுற்றன. பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்களை போலீஸார் சமரசப்படுத்தி மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று மாணவர் சடலத்தை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்ட போராட்டத்தை காமராஜர் அரசு மருத்துவமனை முன்பு இன்று நடத்தி வருகின்றனர்.  கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவருமான பி.சம்பத் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருமாறன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன்,  நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன்,  பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, காங்கிரஸ் கட்சி மாநில சேவைதள கூடுதல் தலைமை அமைப்பாளர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உடலை பெற மறுத்து தொடர் முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சிதம்பரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன்,  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட்  ராதிகா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஈஸ்வரன் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில்  உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  பேச்சுவார்த்தையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, வட்டாட்சியர் க.தனசிங், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொள்கை பரப்புச் செயலாளர் திருமாறன், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.