முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல்

கர்நாடக தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Updated On : 1 மே, 2013 at 6:58 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

கர்நாடக தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 20 தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்த கர்நாடக தமிழர் கட்சி முடிவு செய்திருந்தது. இதற்காக விருப்பமனுக்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விருப்பமனுக்களின் அடிப்படையில் சர்வக்ஞநகர், சிக்பேட்டை, சர்.சி.வி.ராமன்நகர், சிவாஜிநகர், கே.ஆர்.புரம்,புலிகேசிநகர்,சாந்திநகர், சாமராஜ்பேட்டை, விஜயநகர்,கோவிந்த்ராஜ்நகர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் டி.சி.பிரகாஷ், எம்.இராவணன், ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், எஸ்.செல்வராஜ், இ.பிரபாகரன், க.இராஜசேகர், டி.கீதா, கே.மணி, ஜான்பாஸ்கோ பிரபு, அந்துராஜ் ஆகியோர் தேர்தலில் நிற்க தீர்மானிக்கப்பட்டது.வேட்பாளர் அறிமுகக்கூட்டமும் ஏப்.14-ஆம் தேதி திருவள்ளுவர் சிலை முன்பு நடந்தது. ஆனால், 10 பேரில் சர்.சி.வி.ராமன்நகர் தொகுதியில் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், சாமராஜ்பேட்டை தொகுதியில் கே.மணி இருவர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்து, தேர்தல்களத்தில் உள்ளனர்.

இது குறித்து கட்சித்தலைவர் டி.சி.பிரகாஷ் கூறியது: இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபட்சவுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக 20 வேட்பாளர்களை நிறுத்த முடிவு எடுத்தோம். முதல்கட்டமாக 10 வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டோம். ஆனால், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை காவல்துறையினரை ஏவிவிட்டு காங்கிரஸ் கட்சியினர் தொலைபேசிமூலம் மிரட்டினர்.தேர்தலில் போட்டியிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனால் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 7 பேர் பின்வாங்கினர். மிரட்டலுக்கு அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட ஐ.எம்.எஸ்.மணிவண்ணன் மற்றும் கே.மணி விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்கு தேர்தல்பணியாற்ற வேண்டியிருந்ததால் நானும் போட்டியிடவில்லை. வேட்புமனுதாக்கல் செய்த பிறகும் மணிவண்ணன், கே.மணியை காங்கிரஸ் கட்சியினர் மிரட்டினர். தோல்வி பயத்தில் இதுபோன்ற மிரட்டலில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபடுகிறார்கள். ஈழத்தமிழர்களின் அவலத்தை அறிந்த தமிழர்கள் யாரும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சிவேட்பாளர்களுக்கு தேர்தலில் தக்கப்பாடம் புகட்டுவோம் என்றார் அவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.