முகப்பு
தலையங்கம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க...

சமூக வலைதளங்களில் பரவியதால் பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தன.

Updated On : 16 ஜூன் 2026, 4:15 am IST
மாணவர் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. - படம்: ஏபி
பகிர்:

சமூக வலைதளங்களில் பரவியதால் பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தன. சௌதாம்ப்டனில் ஹென்றி நோவக்கின் மரணமும், வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஸ்டீபன் மீதான தாக்குதலும் பிரிட்டனில் குடியேறியவர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தன.

ஹென்றி நோவக் (18) சௌதாம்ப்டனில் கடந்த ஆண்டு டிச. 3-ஆம் தேதி இரவு தனது நண்பர்களைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தை அடுத்து பிரிட்டிஷ் சீக்கியரான விக்ரம் திக்வா (23) தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் சிறிய கத்தியால் தாக்கியதில் நோவக் இறந்துவிட்டார். நோவக் தன்னை இனரீதியாக அவதூறாகப் பேசினார் என்பது திக்வாவின் தன்னிலை விளக்கம். நீதிமன்றம் அதை ஏற்காமல், திக்வாவுக்கு 21 ஆண்டுகளுடன் ஆயுள்தண்டனை விதித்தது.

இந்தச் சம்பவத்தின்போது, காவல் துறையினரின் உடலில் பொருத்தி இருந்த கேமராவில், தான் தாக்கப்பட்டதாகவும் மூச்சுவிட முடியவில்லை எனவும் நோவக் கூறியதை சட்டை செய்யாமல் காவல் துறையினர் அவரது கைகளைக் கட்டி இழுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் பரவியதால், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது.

Advertisement

Advertisement

வெளிநாட்டினரின் குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்கும் யுகே சீர்திருத்த கட்சித் தலைவர் நைஜெல் ஃபாரஜ், சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் காவல் துறையினரின் இரட்டை அணுகுமுறையை விமர்சித்தார்.

"பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து குடியேறிகள் வந்து சேர்வதற்கு எதிராக ஐரோப்பிய அறிவுஜீவிகள் இருந்திருந்தால் நோவக் உயிருடன் இருந்திருப்பார்' என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதிவிட்டார். பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், "புயல்போல வெளிநாட்டவர் ஐரோப்பாவுக்குள் நுழைகின்றனர். இந்தப் படையெடுப்புக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் பின்னணியில், நோவக் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு எதிராக செüதாம்ப்டனில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குடியேறிகளுக்கு எதிராக மாறியதுடன் வன்முறையாகவும் உருவெடுத்தது. பிரிட்டனில் அதிக அளவில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் குடியேறுவதையும், முக்கியப் பதவிகளை வகிப்பதையும் உள்ளூர் பிரிட்டிஷார் விரும்பவில்லை.

இந்தச் சம்பவத்தின் சுவடு ஆறுவதற்குள், பிரிட்டனின் மற்றொரு பகுதியான வடக்குஅயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரிலும் கலவரம் வெடித்தது. உள்ளூர்வாசியான ஸ்டீபனை சூடானில் இருந்து வந்து குடியேறிய ஹாடி அலோடிட் (30) கத்தியால் குத்தியதில் அவரது கண் குருடாகிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து முகமூடி அணிந்த நபர்கள் கடந்த ஜூன் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

குடியேறிகள் என்று அறியப்பட்ட சிலரின் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல் துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

பிரிட்டனில் இதுபோன்று நடப்பது புதிதல்ல. சௌத்போர்ட் என்ற இடத்தில் கடந்த 2024 ஜூலையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது 17 வயது இளைஞன் பலரையும் கத்தியால் குத்தியதில் மூன்று சிறுமிகள் இறந்தனர். குத்தியவர் புலம்பெயர்ந்த இஸ்லாமியர் என வதந்தி பரப்பப்பட்டதை அடுத்து பெரும் கலவரம் வெடித்து பல நாள்கள் நீடித்தது. 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டதால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

குடியேறிகளுக்கு எதிரான மனநிலை பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் 2020-இல் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரால் கொல்லப்பட்டது, கடந்த 2023-இல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானவி (23) சாலை விபத்தில் உயிரிழந்தபோது காவல் துறை அதிகாரி எள்ளி நகையாடியது போன்றவை சில உதாரணங்கள்.

பிரிட்டனைப் பொருத்தவரை, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்க்கும் யுகே சீர்திருத்த கட்சி யாரும் எதிர்பாராத வகையில் 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் குடியேறிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் அவ்வப்போது நடைபெறுகின்றன. டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபரானவுடன் இந்தப் போக்கு வலுப் பெற்றிருக்கிறது.

நமது நாட்டிலும் மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் புலம்பெயர்வது அதிகரித்துள்ளது. பிகார் மாநிலத்தவர்கள் மும்பையில் தாக்குதலுக்கு உள்ளாவதும், வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தில்லியிலும் பெங்களூரிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலேயேகூட வட மாநிலத்தவருக்கு எதிரான விமர்சனங்கள் எழாமல் இல்லை.

மாறிவரும் உலகச் சூழ்நிலையில், புலம்பெயர்வது என்பது தவிர்க்க முடியாதது. புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பால்தான் உலகில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முயற்சிப்பது பின்னடைவை ஏற்படுத்துமே தவிர, முன்னேற்றத்துக்கு வழிகோலாது.

summary

Two recent incidents in Britain sparked riots after spreading across social media. The death of Henry Novak in Southampton and the attack on Stephen in Belfast, Northern Ireland, triggered protests against immigrants in Britain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.