பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!
மனிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.
மனிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது. பொதுவாக பரிசுப் பொருள்களின் மதிப்பு பரிசளிப்பவரின் மன உணர்வின் பிரதிபலிப்பாகவே கருதப்படுவதால் நம் சமூகத்தில் பரிசுகளை அளிப்பதிலும், பெறுவதிலும் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
ஒருவரை ஊக்குவித்து அவரின் திறமையை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் பரிசுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பணியிடங்களில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு நிர்வாகத்தால் பாராட்டி அளிக்கப்படும் பரிசுகள், பரிசு பெறுவோர் தமது வேலைத் திறனை மேலும் அதிக அளவில் வெளிப்படுத்த உதவுகிறது.
பள்ளி இறுதித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் பரிசுகள் தருவதாக பெற்றோர், ஆசிரியர்களால் அளிக்கப்படும் உறுதிமொழிகள் தேர்வில் மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சமீப ஆண்டுகளில் வியாபார நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பொருள்களை வாங்குபவருக்கு பரிசுகள் அளிப்பது வாடிக்கையாகி வருகிறது.
Advertisement
Advertisement
அரசுப் பணியில் உள்ள உயரதிகாரிகளுக்கு உள்ளார்ந்த அன்புடன் பரிசளிப்பவர்களைவிட அவர்களிடம் தங்களுக்கான சலுகைகள் எதிர்பார்த்து பரிசளிப்பவர்களே அதிகம். பரிசுகளைப் பெறுவதற்காக தங்கள் அதிகாரத்தை அரசுப் பணியில் உள்ள சில உயரதிகாரிகளும் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்பதால், உயரதிகாரிகள் அவரவர் வகிக்கும் பதவிகளுக்கு ஏற்ப பெறக்கூடிய பரிசுகளின் மதிப்பு குறித்தான வரையறைகள் அரசுப் பணியாளர்களுக்கான நன்னடத்தை விதிகளில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருக்கும் நிலையில், அது குறித்து அரசுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. எனினும், இது முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.
பெரும்பாலான மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் புத்தாண்டு தினம் மற்றும் பண்டிகை தினத்தன்று, உயரதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன் பரிசுகள் தருவது மிகச் சாதாரணமான ஒன்றாகி விட்டது. இச்செயல், லஞ்சம் வாங்குவதற்கு ஒப்பானது. ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 8 மற்றும் 9, லஞ்சம் தருபவர்கள், வணிக நிறுவனங்கள் அதைப் பெறும் அதிகாரிகள் குற்றச் செயல் புரிந்தவர்கள் ஆவர் என வரையறுக்கிறது. அரசு உயரதிகாரிகளுக்கு அன்பளிப்பு, பரிசுகள், நன்கொடை என்ற போர்வையில் லஞ்சம் அளித்து அரசு அலுவலகங்களில் முறைகேடாக காரியங்களை சாதித்துக் கொள்வோர் தற்போதும் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
நம் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி வகித்த மரியாதைக்குரிய அப்துல் கலாம் தமது பதவிக்கால முடிந்த நிலையில், தம் பதவிக்காலத்தின்போது தமக்கு அளிக்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருள்களையும் தன்னுடன் எடுத்துச் செல்லாது, அரசின் காப்பகத்தில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுகள் என்றாலே ஆர்வத்துடன் அவற்றை அடைய நினைக்கும் மனநிலை பெரும்பாலான மனிதர்களிடம் உண்டு. பல போர்களை தாம் நிறுத்தியதாகவும், அதற்காக சமாதானத்துக்கான நோபல் பரிசு தமக்குத் தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தமது பேராசையை வெளிப்படுத்தினார். இதற்கு நேர்மாறாக கடந்த காலங்களில் நோபல் பரிசு வேண்டாம் என மறுத்த பிரபலங்களும் இருந்தனர்.
பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்ரே,1964-ஆம் ஆண்டு தமக்கு அளிக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசை வேண்டாம் என மறுத்தார். எந்த ஓர் அங்கீகாரத்தையும், விருதையும் தான் பெறுவது இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் நோபல் பரிசை தாம் மறுப்பதாக ழான் பால் சார்த்ரே தெரிவித்தார்.
இதே போன்று சமாதானத்துக்கான நோபல் பரிசை முன்னாள் அமெரிக்க அதிபர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் பகிர்ந்துகொள்ள வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவை சேர்ந்த லே டக் தோ, 1973-ஆம் ஆண்டு கேட்டுக்கொள்ளப்பட்டபோது, "தமது நாட்டில் இன்னமும் அமைதி நிலவவில்லை', எனக் கூறி அந்தப் பரிசை ஏற்க மறுத்தார் லே டக் தோ.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது குழுவினருடன் அண்மையில் சீனாவுக்கு சென்று திரும்பினார். அவ்வாறு திரும்ப முற்படுகையில் சீன அதிகாரிகள் அமெரிக்க அதிபருடன் வந்திருந்த குழுவினருக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினர். அமெரிக்கக் குழுவினர் பெற்றுக்கொண்ட பரிசுப் பொருள்களை அவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை அமெரிக்க அரசு தடுத்து விட்டது. இதற்குக் காரணம் சீனர்கள், அமெரிக்க அரசை உளவு பார்க்கும் விதத்தில் பரிசுப் பொருள்களில் அதற்கான தொழில்நுட்பத்தை இணைத்திருக்கலாம் என டொனால்ட் டிரம்ப் நினைத்ததே.
பரிசுப் பொருள்கள் அவற்றை பெறுவோருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிக்கலை ஏற்படுத்துவதும் உண்டு. பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்தார். அந்த நாடுகளில் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அவற்றை பாகிஸ்தான் நாட்டின் சட்ட விதிகளின்படி அந்நாட்டு அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல், அவற்றை விற்று பணம் பெற்றுக் கொண்டதற்காக அவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
எவ்வித உள்நோக்கமும், கைம்மாறும் கருதாது அன்புடன், திறமையை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதே சமயத்தில், தன்னலத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பரிசு பெறுபவரை தன்வசப்படுத்தி, அவரின் நேர்மையை தடம்புரள வைக்கும் சூழலை, தரப்படும் பரிசு உருவாக்கும் எனில், அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ள மறுப்பதே உன்னதமான செயலாகும்.