FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

வான் ஆராய்ச்சியில் சாதனை!

இயற்கையைப் புரிந்துகொள்ள அறிவியல் பயன்படுகிறது.

Updated On : 19 ஜூலை 2026, 4:09 am IST
பகிர்:

இயற்கையைப் புரிந்துகொள்ள அறிவியல் பயன்படுகிறது. இயற்கையில் பொதிந்துள்ள உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொண்டுவர அறிவியலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தளராது உழைக்கின்றனர். அப்படியொரு இந்திய அறிவியலாளரான சந்திரசேகர், நோபல் பரிசு பெறும் தகுதி வாய்ந்த கண்டுபிடிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆய்வின் மூலம் வெளிவந்ததுதான் 'சந்திரசேகர் எல்லை' என்கிற வரையறையாகும்.

சந்திரசேகர் எல்லை: 'சந்திரசேகர் எல்லை' என்பது வான் இயற்பியலில் ஓர் அடிப்படை கோட்பாடாகும். இது ஒரு நிலையான 'வெள்ளைக் குள்ளன்' நட்சத்திரம் கொண்டிருக்கக் கூடிய அதிகபட்ச நிறையை வரையறுக்கும் வரம்பாகும். 1931-ஆம் ஆண்டில் இந்தக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய இந்திய-அமெரிக்க வான் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில், குறிப்பாக, நட்சத்திரங்கள் தங்கள் அணுக்கரு எரிபொருளை முழுமையாகத் தீர்த்தவுடன் அவை அடையும் இறுதி நிலையைப் புரிந்துகொள்வதில் இந்த வரம்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

Advertisement

Advertisement

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு, குவாண்டம் இயற்பியலின் கொள்கைகளைப் பயன்படுத்தி, முற்றிலும் சிதைந்த எலக்ட்ரான் வாயுவால் ஆதரிக்கப்படும் ஒரு வெள்ளைக் குள்ள நட்சத்திரத்தின் நிறை, சூரியனின் நிறையைப் போல் 1.44 மடங்கு அதிகமாக இருந்தால், அது நிலையாக இருப்பது சாத்தியமற்றது என்று சந்திரசேகர் தனது ஆய்வு மூலமும் கணக்கீடுகள் மூலமும் காட்டினார்.

அத்தகைய நட்சத்திரம் அதன் அணுக்கரு எரிபொருளை முழுமையாகத் தீர்க்கவில்லை என்றால், இந்த வரம்பின் நிறை சற்றே அதிகமாக இருக்கலாம். உண்மையான வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் அனைத்து நேரடி நிறை நிர்ணயங்களும் சந்திரசேகர் வரம்பைவிடக் குறைவான நிறைகளையே அளித்துள்ளன.

சந்திரசேகர் வரம்பைவிட அதிக நிறையுடன் தனது அணுக்கரு எரிப்பு வாழ்நாளை முடிக்கும் ஒரு நட்சத்திரம், கண்டிப்பாக ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ மாற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

யார் இந்த சந்திரசேகர்?: 1910- ஆம் ஆண்டு அக்டோபர் 19-இல் லாகூரில் பிறந்தவர். லாகூரில் ஐந்து ஆண்டுகளும், லக்னோவில் இரண்டு ஆண்டுகளும் வாழ்ந்தவுடன் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வந்தடைந்தனர். அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் இருந்தே தொடங்கியது. பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் படிப்பும், இளங்கலை இயற்பியல் படிப்பையும் முடித்தார்.

1928-இல் இவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1930-இல் இந்திய அரசின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் பயணித்தார். 1937 முதல் 1995-ஆம் ஆண்டு வரையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

நட்சத்திரங்களின் கட்டமைப்பு, பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமான இயற்பியல் செயல்முறைகள், கோட்பாட்டு ஆய்வுகளுக்காக சந்திரசேகருக்கும் அமெரிக்க அணுக்கரு இயற்பியலாலரும் வானியற்பியலாளருமான வில்லியம் ஃபெளலருக்கும் 1983- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது.

பன்னாட்டு இதழ்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். இவர் இளங்கலை அறிவியல் படிக்கும்போதே ஆய்வுக்கட்டுரையை எழுதி, 1928-இல் வெளியிட்டவர்.

'விண்மீன் அமைப்பியல் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்', 'விண்மீன் இயக்கவியலின் கோட்பாடுகள்', 'அறிவியலாளர்: மனதின் செயல்பாடுகள்', 'கதிர்வீச்சுப் பரிமாற்றம்', 'பிளாஸ்மா இயற்பியல்', 'நீரியக்க, நீர்க்காந்தவியல் நிலைத்தன்மை', 'சமநிலை கொண்ட நீள்வட்ட வடிவங்கள்', 'கருந்துளைகளின் கணிதக் கோட்பாடு', 'அக்காலத்தின் மிகச் சிறந்த வானியற்பியல் அறிஞர்', 'உண்மையும் அழகும்: அறிவியலில் அழகியலும் உந்துதல்களும்', 'பொது வாசகருக்கான நியூட்டனின் தத்துவங்கள்' போன்ற நூல்கள் சந்திரசேகர் எழுதியவைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments