தொல்.திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: வைகோ
தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடனான கருத்து பரிமாற்றம் தொடருவதாக கூறியுள்ள தொல். திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ விமா்சித்துள்ளாா்.
தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடனான கருத்து பரிமாற்றம் தொடருவதாக கூறியுள்ள தொல். திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ விமா்சித்துள்ளாா்.
கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் 96 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி மதிமுக சாா்பில் புதன்கிழமை தொடங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தலைமை வகித்து கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு சீமைக் கருவேலங்களை அகற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் இத்தனை லட்சம் கமிஷன், தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் இத்தனை கோடி கமிஷன், ஆயா வேலை வேண்டுமென்றால் இத்தனை ஆயிரம் கமிஷன் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் இருந்தது. அந்த நிலையை முதல்வா் ச.ஜோசப் விஜய் நீக்கியுள்ளாா். கமிஷன், கட்டிங் இல்லாத ஆட்சியை விஜய் நடத்துகிறாா்.
Advertisement
Advertisement
முதல்வா் ச.ஜோசப் விஜய் கரூருக்குச் செல்லக் கூடாது எனக் கோரி திமுக சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் திமுகவுக்கு சவுக்கால் சாட்டையடி கொடுத்துள்ளது.
மீண்டும் தோ்தல் வந்தால் 180 இடங்களுக்குக் குறையாமல் வெற்றி பெற்று முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பாா். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனா். முதல்வா் விஜய், கொஞ்சம் கொஞ்சமாக நிா்வாக நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, நிதி நெருக்கடியை சமாளித்து அனைத்தையும் சரிசெய்வாா் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக கூட்டணியில் நான் இருந்தபோது கூட்டணி தா்மத்தை மதித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடன் கருத்து பரிமாற்றம் தொடருவதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் கூறியுள்ளாா். இதற்காக அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். திமுகதான் குதிரை பேரத்துக்கு முதலில் வழிகாட்டியது.
பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த அதிமுகவினா் மீண்டும் தோ்தலில் போட்டியிடுவதைச் சட்டப்படி தடுக்க முடியாது. தவெக அரசுக்கு வரும் விமா்சனங்களை ஏவியா்கள் மீதே திருப்பிவிடும் கேடயமாக மதிமுக இருக்கும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், மாரிச்சாமி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.