அகல் சுடரும் அறப்பயணமும்...
வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந்தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந்தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர். இவரது வாழ்வு சராசரி வாழ்க்கையல்ல; அறத்தின் வழியே நன்மைகளை விதைத்துக் கொண்டிருக்கும் ஒரு நெடும் பயணம். இயற்கையுடன் இயைந்த வாழ்வும், சக மனிதர்கள் மீதான எல்லையற்ற கருணையும், ஓர் எளிய மனுஷியை எவ்வாறு சமூகப் புரட்சியாளராக மாற்றியது என்பதற்கு வாழும் சாட்சி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
மகாத்மா காந்தி, ஜே.சி.குமரப்பா, வினோபா பாவே ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்ட கிருஷ்ணம்மாள், அன்றாடப்பாட்டுக்கே அல்லல்படும் அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டு, தன் வாழ்வையே காந்தியத்தில் கரைத்துக்கொண்டவர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் அய்யன்கோட்டை கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்வுப் பயணத்தின் ஆதிப்புள்ளி ஆன்மிகம். அது அவரது தாயின் அதிகாலை வழிபாட்டிலிருந்தே தொடங்கியுள்ளது. ஆதவனின் கதிர்கள் நிலத்தைத் தீண்டிச் சிலிர்க்க வரும் வேளையில், இயற்கையையே இறைவனாகக் கண்டு உருகிய தாயின் பிம்பம், சிறு வயது கிருஷ்ணம்மாளின் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
Advertisement
Advertisement
பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்த அவரை, மேலும் படிக்கும் வேட்கை துரத்தியது. தன் அண்ணனின் ஆலோசனைப்படி பெற்றோருக்கும் சொல்லாமல் நடைப்பயணமாய் தன் கிராமத்தை விட்டு வெளியேறினார் கிருஷ்ணம்மாள். அவரது அந்த பதின் பருவத்தில் கல்விக்காகத் துவங்கிய நடை, பின்பு சேவை நடையாய் மாறி இன்று வரை ஓயவில்லை.
மதுரைக்குக் கல்வி பயிலச் சென்றபோது, காந்தி கிராமத்தின் நிறுவனர் டாக்டர் செüந்தரம் ராமச்சந்திரனின் தாயுள்ளம், கிருஷ்ணம்மாளை எவ்வித பேதமுமின்றி பூரிப்பாய் அரவணைத்துக் கொண்டது. டி.வி.எஸ். நிறுவன அதிபர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் தவப்புதல்வியான டாக்டர் செüந்தரத்தின் கலப்புத் திருமணம், பிரிட்டிஷ் இந்தியாவில் பேசுபொருளானது மட்டுமல்ல, மிகப் பெரிய சமூக விழிப்புணர்வுக்கு வித்திட்டது.
1946-ஆம் ஆண்டு கல்வி பயிலும் காலத்தில் மகாத்மா காந்தியைச் சந்தித்து, அவருக்கு அருகிருந்து சில நாள்கள் பணிவிடை செய்யும் வாய்ப்பு கிருஷ்ணம்மாளுக்குக் கிடைத்தது. இந்நிகழ்வு அவரது வாழ்வில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது. கல்லூரிக் கல்விக்குப் பிறகு, புகழ்பெற்ற காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா தலைமையில், சுதந்திரப் போராட்ட வீரரும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜெகந்நாதனை ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். சமூக உயர்வே இருவரின் சிந்தனையாக இருந்ததால், தம்பதியினர் இணைந்து ஆச்சார்ய வினோபா பாவேவின் "பூமிதான இயக்கத்தில்' பங்கேற்றனர். தனது 26 வயதில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியவர் அம்மா. இந்தச் சூழலில்தான் ஜெயப்பிரகாஷ் நாராயண் மாணவர் இயக்கத்தையும், பின்னர் முழுப் புரட்சி இயக்கத்தையும் தொடங்கினார். ஜே.பி.யின் அழைப்பை ஏற்று பாட்னா வந்த கிருஷ்ணம்மாள் அந்த முழுப் புரட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஊர்வலம் சென்றபோது கிருஷ்ணம்மாளும் கைது செய்யப்பட்டார். சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், காவலர்களிடமிருந்து தப்பித்த கிருஷ்ணம்மாள், கயாவிலிருந்து வாராணசி வழியே தமிழகம் வந்துசேர்கிறார்.
பிகாரின் கரடுமுரடான பாதைகளில் தொடங்கிய அந்த நெடும் பயணம், இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்த பின்னர், தமிழகத்தின் கிராமங்களை நோக்கி நகர்ந்தது. தன் பச்சிளம் குழந்தை பூமிக்குமாரைக் கைகளில் ஏந்தியபடி, நிலமற்ற ஏழைகளுக்காக நிலப்பிரபுக்களின் வாசல்களில் நிலதர்மம் கேட்டு நின்ற அந்தத் தாயின் உள்ளம், சிந்துதாய் சப்கல், கமலாதேவி சட்டோபாத்யாய், இலா பட் ஆகியோரது சேவைகளையெல்லாம் நினைவூட்டுகிறது.
முதன்முதலாக வத்தலகுண்டு பகுதியில் பெண்களையும் குழந்தைகளையும் திரட்டி, "கிராமதான்" இயக்கத்தின் மூலம் கூட்டுறவு வாழ்க்கை முறையை உருவாக்கிய அவர், தன்னால் இயன்ற ஒரு புதிய சமூக விடியலுக்கான விதையை அங்கே ஊன்றினார். எவ்வித அநீதியையும் வன்முறையால் எதிர்கொள்வது மானுட அறமல்ல என்பதை மனதுக்குள் வரித்துக்கொண்டு செயல்பட்டவர் அம்மா.
1959-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் ஜாதிக் கலவரத்தின்போது, சுற்றியும் மரண ஓலங்கள் சூழ்ந்திருந்த நிலையிலும், காந்திகிராமத்துப் பெண்களைத் திரட்டி 'அமைதிப் படை'யாக அவர் களம் இறங்கியது ஒரு வீர வரலாறு. ரத்தம் தோய்ந்த நிலத்தில் நின்று அன்பு வழியில் அமைதியை மீட்டெடுத்தார்.
தன் சொந்தக் கிராமத்தில் நள்ளிரவில் கலவரச் சூழல் உருவானபோது, கையில் சின்னஞ்சிறு விளக்கொன்றுடன் மரங்களின் நடுவே நின்று, "கருணை ஒளியே எமை வழிநடத்துக' என்று அவர் கண்கள் தளும்ப உருகிப் பாடிய பிரார்த்தனை, வன்மத்தில் உறைந்திருந்த நெஞ்சங்களையும் கரைத்தது. விடியும் முன்பே அங்கே அமைதி உடன்படிக்கை உருவானது. ஆயுதங்களை விடவும் ஆன்ம பலமே வலிமையானது என்பதையே தன் செயல்களால் நிரூபித்தவர் அம்மா.
1968-ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் நாளில், கீழ்வெண்மணியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக வரலாற்றின் மாறாத வடு. சம்பவம் நிகழ்ந்த மறுநாளே, தன் கணவருடனும் குன்றக்குடி அடிகளாருடனும் அங்கு சென்று, நீதியை நிலைநாட்ட பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார் அம்மா. பேரதிர்ச்சியில் உறைந்திருந்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது எளிதாக இருக்கவில்லை. ஆனால், அவர்களுடன் அங்கேயே தங்கி, கிணறுகள் வெட்டி, பால்வாடிகள் அமைத்து, அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்.
கிருஷ்ணம்மாளின் மிகப் பெரிய சாதனை "லாஃப்டி' (லேண்ட் பார் தி டில்லர்ஸ் ஃப்ரீடம்) இயக்கத்தின் தோற்றம். இந்த நில உரிமை இயக்கத்தின் மூலம் நிலங்களை வாங்கி ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். அதற்காக வங்கிச் சட்டங்களையே ஏழைப் பெண்களுக்குச் சாதகமாக மாற்ற ஆலோசித்து, விவாதித்து, வெற்றியும் கண்டார். இன்றளவும் அதை நடைமுறைப்படுத்தி வருவது வியக்கத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக, லாஃப்டி மூலம் தொடர்ச்சியாக நிலப் பட்டாக்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. நிலம் என்பது வெறும் சொத்தல்ல; அது ஒரு பெண்ணின் தற்சார்பு, அவளது ஆளுமை, வாழ்வாதாரம் என்பதை லாஃப்டி நிரூபித்தது. வாராந்திரக் கூட்டுப் பிரார்த்தனைகளும், வழிபாடும் அந்தப் பெண்களின் ஆன்மாவைச் சுத்திகரித்து, அடிமைத்தனத்தின் வடுக்களை நீக்கின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்து வாழ்வு தந்த அந்தத் தாயை, மக்கள் நன்றியுடன் "அம்மா' என்று அழைப்பதில் வியப்பேதுமில்லை.
இறால் பண்ணைகளுக்கு எதிரான கிருஷ்ணம்மாள் தம்பதியின் போராட்டம், முதலாளித்துவத்தின் மக்கள் விரோத வியாபாரத்துக்கு எதிரானதாக இருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக அரசே முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றது. காவல் துறையின் தடியடியும், கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஆனாலும், அவர்கள் மனம் தளரவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். அந்தப் போராட்டக் காலத்திலேயே, தில்லியில் உண்ணாவிரதம் இருந்த ஜெகந்நாதனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர், முழுமையாகக் குணமடையாமலேயே, 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் மறைந்தார்.
இணை மறைந்தாலும், அம்மாவின் லட்சியங்களும் உறுதியும் மறையவில்லை. குமரப்பா, பண்டித நேரு, காமராஜர், ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் வந்து சென்ற அம்மாவின் ஊழியரகத்தில் இன்றும் பனைத் திருவிழாக்களும் இயற்கை எரிசக்தி விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசு வழங்கிய 'பத்ம பூஷண்' விருதும், திட்டக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் உயரிய பதவிகளும் கிருஷ்ணம்மாள் என்கிற ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் மட்டுமே. ஆனால், அவரது உண்மையான சிம்மாசனம் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் நெஞ்சங்களில் இருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்வு வெறும் மேடைப் பேச்சுகளால் ஆனதல்ல. அது அர்த்தம் நிறைந்த செயல்களால் எழுதப்பட்ட மானுடக் காவியம். நிலமற்றவர்களுக்கு நிலத்தையும், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையையும் வழங்கும் அறப்பயணம். அது, அவரது நூறாம் வயதிலும் அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டுகிற அகல் சுடராய் தொடர்கிறது.
இன்று (ஜூன் 16)
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்