ஒடிசி பார்க்கப் போகிறீர்களா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!
தி ஒடிசி திரைப்படம் குறித்து...
இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவான தி ஒடிசி திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய இரண்டு பெரும் புனைவுகள் இலியட், ஒடிசி. இரண்டுமே கிரேக்கப் பேரரசுகளை உள்ளடக்கிய மாய எதார்த்த பாணி கதைகளாக உருவாகின.
இதில், தி ஒடிசியை இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் அதே பெயரில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்துள்ளார். பலருக்கும் ஒடிசியின் கதை என்பது, யாரோ ஒரு மன்னர் சண்டையிடச் சென்ற இடத்தில் சிக்கிக்கொண்டு பின் எப்படி சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தார் என்கிற அளவே தெரியும். அதனால், ஒடிசியின் கதை குறித்து சில விஷயங்களையும் அறிந்துகொள்வோம்.
Advertisement
Advertisement
டிராய் (troy) நகருக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்துகொண்டிருந்த காலம். அப்படியான நேரத்தில் ட்ராய் நாட்டின் ராஜ பரம்பரையினர் கிரேக்க நாட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். தடபுடலான விருந்தில் கிடைத்த உணவுகளைவிட அங்கிருந்த அழகான ராஜ வம்சத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண், ட்ராய் இளவரசனின் மனதை நொறுக்குகிறாள். எப்படியொரு அழகியா? என அவன் அப்பெண்ணை அடைய நினைக்கிறான். ஆனால், அவளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
இதெல்லாம் ஒரு பிரச்னையா பாஸ்? என அந்த இளவரசன் ஒரு பரிசுப்பெட்டியில் வைத்து அப்பெண்ணை ட்ராய் நாட்டிற்குக் கடத்திச் செல்கிறான். இதனை அறிந்த கிரேக்க நாட்டினர் ட்ராய் மீது போர் தொடுக்கின்றனர். போருக்கு கிரேக்கத்திலிருக்கும் குறுநில மன்னர்களும் இணைகின்றனர். இதில், இத்தாகா எனும் குறுநில நாட்டின் மன்னன்தான் ஒடிசியஸ். தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கிரேக்கத்திற்கு ஆதரவாக ஒடிசி, ட்ராய் நகரை முற்றுகையிடுகிறான். பத்து ஆண்டுகள் வரை நடக்கும் இந்தக் கடுமையான போரில் இறுதியாக ட்ராய் கோட்டைக்குள் செல்ல, ட்ரோஜன் ஹார்ஸ் (trojen horse) ஒன்றை வடிவமைத்து தன் வீரர்களுடன் ஒடிசி அதில் ஒளிந்துகொள்கிறான். கடற்கரையில் கிடக்கும் அந்த ராட்சத குதிரை பொம்மை வடிவத்தைக் காணும் ட்ராய் வீரர்கள், கிரேக்கத்தினர் விட்டுச் சென்றுவிட்டனர் என நினைத்து ஆடல் பாடலுடன் அதனைக் கோட்டைக்குள் தூக்கிச் செல்கின்றனர். நள்ளிரவில் ட்ராய் வீரர்கள் அசந்த நேரம் பார்த்து, குதிரையிலிருந்து வெளியேறும் ஒடிசியும் அவனது வீரர்களும் ட்ராய் கோட்டையையே சூறையாடி போரில் வெல்கிறார்கள். பத்தாண்டுகால சோதனை முடிஞ்சுதுடா சாமி... இனியாவது சொந்த ஊருக்குச் செல்லலாம் என தன் வீரர்களுடன் ஒடிசி படகுகளில் கிளம்புகிறான்.
ஆனால், வேறு ஒரு பிரச்னை முளைக்கிறது. கிரேக்கர்களின் சரித்திரம் என்பது பல்வேறு இயற்கை கடவுள்களுடன் தொடர்புடையதுதான் . அப்படி, ஒடிசியஸ் கடந்து வந்த கடலின் கடவுள் பொசைடான். ட்ராய் நகர்த்திற்குள் செல்ல பொசைடான் உதவியிருப்பார். போரில் வென்றதும் ஒடிசி தனக்கு நன்றி செலுத்தவில்லை என்கிற கோபத்தில் பொசைடான், இப்போது நீ என்னை எப்படி கடந்து செல்கிறாய்? எனப் பார்க்கிறேன் என அசரிரீ மூலம் சபிக்கிறார். இதையெல்லாம் கேட்கிற நிலையில் ஒடிசி கிடையாது. காரணம், ட்ராய் போருக்குக் கிளம்பும்போதுதான் அவனுக்கு மகன் பிறந்திருப்பான். மனைவியும் கைக்குழந்தையையும் இத்தாகாவில் விட்டு வந்திருப்பான். முக்கியமாக, தன் மகன் டெலிமக்கஸுக்கு மீசை முளைக்கிற காலம் வரை நான் திரும்பி வரவில்லை என்றால் நீ வேறு திருமணம் செய்துகொள் என மனைவியான பெனிலோப்பியிடம் கூறியிருப்பான். இதையெல்லாம் நினைக்கும் ஒடிசியஸ் ஊர் போய்ச்சேர வேண்டுமென தன் வீரர்களுடன் படகுகளில் ஏறுகிறான்.
கடலில் துடுப்பு போட்டப்படி பல படகுகள் தாயகம் நோக்கிச் செல்கின்றன. ஆனால், சாபம் பலிக்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு படகாகத் திசை மாறுகின்றன. எண்ணற்ற வீரர்கள் காணாமல் போகின்றனர். பதற்றம் ஒருபக்கம் என்றால் பசியொரு பக்கம். அந்தத் தடுமாற்றத்தில் ஒடிசி தீவு ஒன்றைக் காண்கிறான். பசியைப் போக்க ஏதாவது கிடைக்கலாம் என அங்கு செல்கிறார்கள். அங்கிருந்த பெரிய குகை வாயிலுக்குள் நுழைந்ததும் ஆடுகளை அடைக்கும் பட்டிகளும் நிறைய பாலாடைக் கட்டிகளும் (chees) தெரிகின்றன. அதனை உட்கொண்டு பசியாறுகின்றனர். மேய்ப்பவர் வந்தால் அவரிடம் ஆடுகளை வாங்கிச்செல்லலாம் என ஒடிசி நினைக்கிறான். ஆனால், குகைக்குள் வருவது ஒற்றைக் கண் கொண்ட ராட்சத அரக்கன். அப்பெரிய உருவம் சாதாரணமாக ஒரு வீரனை முழுங்குவதைக் கண்டு ஒடிசியுடன் அனைத்து வீரர்களும் பதறுகிறார்கள். பின், அங்கிருந்து தப்பிக்கின்றனர்.
அரக்கனிடமிருந்து தப்பும் குழு மீண்டும் அலைகளின் தொல்லைக்கு ஆளாக, படகு இன்னொரு தீவுக்கு நகர்கிறது. அங்கு ஒடிசியஸ் மிகப்பெரிய அருவியொன்றைப் பார்க்கிறான். அதன் அருகே சென்றதும் ஒடிசிக்கு ஒரு குரல் கேட்கிறது. கொட்டும் அருவி பேசுதா? என பிரமையுடன் இருப்பவனுக்கு, ஆம் உள்ளே வா என்கிற குரல் மீண்டும் கேட்கும். அதற்குள் செல்வான். உள்ளே இருப்பது காற்றின் கடவுள். ஒடிசியசின் நிலையை அறிந்தவர், ஒரு குடுவையில் காற்றை ஊதிக்கொடுப்பார். ‘இதோ பார் ஒடிசி... உள்ளே காற்றடைத்து வைத்திருக்கிறேன். இதைப் படகில் வைத்திரு. இது சரியான திசைக்கு உன்னை அழைத்துச் செல்லும். மறந்தும்கூட இதை திறந்து விடாதே பிறகு கதை முடிந்தது’ என அக்கடவுள் எச்சரித்து அனுப்புவார். பொசைடானின் ராட்சச கடல் அலைகளுக்கு நடுவிலும் சரியான திசை நோக்கி படகு சீறாராக சென்றுகொண்டிருக்கும். கிட்டத்தட்ட ஒடிசி தன் நாட்டிற்கு அருகே சென்றுவிடுவான். ஆனால், ஒரு வீரன் அந்தப் குடுவைக்குள் புதையல் ஏதாவது இருக்கிறதா? எனத் திறந்து பார்த்துவிடுகிறான். அப்போதே புயலே உருவாக, படகு ஒவ்வொரு அலைகளுக்குமாகத் தூக்கிவீசப்பட எங்கோ தொடர்பில்லாத இடம் நோக்கி படகு நகர்ந்துவிடும்.
மீண்டும் மீண்டுமா? வேதனைப்பட்டாலும் தைரியமாக இதையும் எதிர்கொள்வோம் என ஒடிசி வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறான். சரி, ஊக்கம் பசியை நிரப்பாது இல்லையா? சாப்பிட கிடைக்கிறதா பாருங்கள் என வீரர்களை அருகே இருக்கும் தீவுக்கு அனுப்பி வைக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து காட்டுப்பன்றி ஒன்று ஒடிசியை நோக்கி வருகிறது. வீரர்கள் அதை கொல்ல வாளை எடுக்கும்போது தூரத்திலிருந்து, வேண்டாம் அது நம்ம ஆள்தான் என்கிறான். குழம்பும் ஒடிசியிடம், “உள்ளே ஒரு சூனியக்காரி இருக்கிறாள். அவள் ஒயின் கொடுத்து நம் வீரர்களை விலங்குகளாக மாற்றிவிட்டாள். இவனும் நம் வீரன்தான் எனப் பன்றியைப் பார்த்துச் சொல்ல, ஒடிசி அவனே அத்தீவுக்குள் நுழைகிறான். ஆனால், செல்லும்போது அவன் வணங்கும் தெய்வத்தின் தூதுவன் வருகிறான். அவன் ஒரு புல்லை உண்ணச் சொல்வான். அதை சாப்பிட்டு சூனியக்காரி கொடுப்பதை உண்டால் விலங்காக மாறமாட்டாய் என்பான். மேலும், என்ன நடந்தாலும் சூனியக்காரியின் விருந்தோம்பலுக்கு மயங்கிவிடாதே என எச்சரிக்கிறான்.
அவன் பேச்சைக் கேட்கும் ஒடிசி, அருகே இருந்த புல்லை மென்றபடி சூனியக்காரியைச் சந்திக்கிறான். அதேபோல், சூனியக்காரியால் ஒடிசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், சூனியக்காரி ஒடிசியிடம் என்னுடன் உறவுகொண்டு என்னை திருப்தியடைவைத்தால் உனக்கு உதவுகிறேன் என்கிறாள். ஒடிசி அதில் வெல்கிறான். அதற்கான பரிசாக தினமும் அவனது வீரர்களுக்கு விருந்தும் பெண்களும் கிடைக்கின்றனர். ஒடிசியும் அதை ஏற்றுக்கொண்டு களைப்படைந்த உடலையும் மனதையும் தயார் செய்தபின், ‘சரி நாங்க கிளம்பறோம். இங்க வந்து 5 நாள் ஆச்சு...” என்கிறான். சிரிக்கும் சூனியக்காரி, “5 நாளா? 5 வருசம் ஆச்சு. இங்க ஒருநாள்னா வெளில ஒரு வருசம்” என்பாள். திடுக்கிடும் ஒடிசி விருந்தில் மயங்கியதை நினைத்து வேதனையடைவான். ஏற்கனவே, 10 ஆண்டுகளைப் போரில் கழித்தாகிவிட்டது. தற்போது, மேலும் 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது நாட்டிற்குச் சென்று மனைவியையும் மகனையும் பார்ப்பது?
கடலில் ஒடிசிக்குத் தொல்லை என்றால் கரையில் அவனது மனைவிக்கு. போருக்குச் சென்று திரும்பிய பலரும் ஒடிசி இறந்துவிட்டதாக அவனது மனைவியிடம் சொல்லி தங்களைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஒடிசிக்கு சூனியக்காரியே, இறந்தவர்களின் பாதாள உலகம் வழியாக பயணி என வழி சொல்கிறாள். அவனுக்கு வேறு வழியும் இல்லை. ஒடிசி சில வீரர்களை அழைத்துக்கொண்டு அந்த கொடூரமான வழியில் செல்லும்போது மோசமான அரக்கனால் பெரும் மரணங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு வீரராக மடிகின்றனர். ஆச்சரியமாக, ஒடிசி இறந்துவிட்டதை நம்பி தற்கொலை செய்துகொண்ட அவனுடைய தாய் அங்கே இருப்பாள். அவள் தன் மகனுக்கு வழிகாட்டுகிறாள். மொத்த படகும் உடைய, ஒரே ஒரு கட்டையைப் பிடித்தபடி ஒடிசி கரை சேர்வான். ஆஹா... ஒருவழியாக ஒடிசி தப்பித்தான் என நினைத்தால்... அவன் கரை சேர்ந்த தீவு முழுவதும் அழகான பெண்கள் மட்டுமே இருக்கின்றனர்! ‘அப்படி... இப்படி’யென இரண்டு ஆண்டுகள் கழிகின்றன.
அப்பறம் என்ன ஆனது? கிறிஸ்டோபர் நோலன் பல கோடிகளை இறக்கி இதனைத் திரைப்படமாக எடுத்துள்ளதால் அடுத்தது என்ன? என்பதை திரையில் பார்க்கலாம்.
ஹோமர் எழுதிய இந்த ஒடிசி காவியம் கடவுள்கள், அரக்கர்கள், விதி எல்லாவற்றையும் "man is nothing without god’ (கடவுள் இல்லையென்றால் மனிதன் ஒன்றுமில்லை) என்கிற புள்ளியுடன் இணைப்பதாக இருந்தாலும் இன்னொரு புறம் ஒடிசி என்கிற போர்வீரன் உடலால் மட்டுமல்ல மனதளவிலும் எவ்வளவு தூரம் போராடி தன் நாட்டை வந்தடைகிறான் என்பதையும் கவனிக்க வேண்டும். கிறிஸ்டோஃபர் நோலன் தன்னுடைய intersteller திரைப்படத்தில் நாயகன் வீடு திரும்பதை மிக உணர்வுப்பூர்வமாகவும் அதற்காக இழந்த விஷயங்களை அபாரமாகவும் கையாண்டிருப்பார்.
ஹோமரின் ஒடிசியை நோலனின் பார்வையில் நாளை (ஜூலை 17) காணப்போகிறோம். அதே வீடு திரும்புதல் கதைதான். ஆனால், உடல் பலத்தைவிட உளவியலாக நோலன் என்ன சொல்லப் போகிறார் என்பதில்தான் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கான வலிமையான காரணங்களில் ஒன்று, கிறிஸ்டோஃபர் நோலனும் ஐமேக்ஸ் (IMAX) நிறுவனமும் இணைந்து இப்படத்திற்கென்றே புதிய ஐமேக்ஸ் கேமராவை உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த திரைப்படமும் இந்த கேமராவில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதால் உலக சினிமா வரலாற்றில் ஒரு முழுத்திரைப்படமும் ஐமேக்ஸில் படமாக்கப்பட்ட பெருமை ஒடிசியையே சேரும்.
வாய்ப்பு கிடைத்தால் ஐமேக்ஸின் அகண்ட திரையில் பாருங்கள். ஆனால், இந்தியாவிலுள்ள ஐமேக்ஸ் ஒடிசியின் தரத்திற்கு ஏற்றது அல்ல. அமெரிக்க உள்பட சில நாடுகளில் மட்டுமே ஒரிஜினல் ஐமேக்ஸ் திரைகள் உண்டு என்பதால் ஹாலிவுட் ரசிகர்களே நோலனின் ஒடிசி அனுபவத்தை அனுபவிக்க முடியும்.
The film The Odyssey, directed by Christopher Nolan, is being released on a grand scale worldwide.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.