அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
விருதுநகர் அருகே இடையூராக இருந்து வரும் அரசு மதுக்கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்
விருதுநகர் அருகே இடையூராக இருந்து வரும் அரசு மதுக்கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்
இப்பிரச்னை தொடர்பாக கிராம மக்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், சமதானம் செய்தும் முக்கிய நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மூளிப்பட்டி ஊராட்சியில் ராமசாமியபுரத்தில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையால் இப்பகுதியில் உள்ள பள்ளி சென்று வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு இடையூராக இருக்கிறது. அதோடு, எந்த நேரமும் மதுக்குடித்த குடிமகன்கள் கண்டபடியும் பேசிச் செல்கின்றனர்.
அதோடு, இக்கடையுடன் இணைந்த பாரும் 24 மணிநேரமும் செயல்படுகிறது. இங்கு எந்த நேரமும் சென்றாலும் மது வாங்கும் அளவுக்கு இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் கல்லூரி மாணவிகள், பெண்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதேபோல், சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளின் போது மதுவாங்குவதற்காக இரவு நேரங்களில் வருகின்றனர்.
அப்போது, சில பிடிக்காத அசம்பாவிதங்களும் நடந்து விடுகிறது. இதேபோல், கடந்த வாரம் இரவு மது வாங்க வந்தவர்கள் கோடைக்காலம் என்பதால் வெளியில் படுத்திருந்த பெண்ணை மானபங்கம் செய்வதற்கு முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே இக்குறிப்பிட்ட இடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனே மூட வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.