விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாநில சுகாதார திட்ட இணை இயக்குநர் எஸ்.கே.திருநாவுக்கரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்வதற்கு மாநில சுகாதார திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உததரவின் பேரில் துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் தனித்தனியே ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து சுகாதார திட்ட இணை இயக்குநர் எஸ்.கே.திருநாவுக்கரசு தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இங்குள்ள மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகளான உள்கட்டமைப்பு வசதி, நோயாளிகளுக்கு ஏற்ப எண்ணிக்கையில் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் உள்ளனரா என்பது குறித்து மருத்துவமனை பணியாளர்கள் விவரங்கள், தற்போது உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துமனையின் பல்வேறு பிரிவுகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். ஒவ்வொரு நாளும் உணவுக் கூட அறையை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதையடுத்து, பணியாளர்கள் வருகைப் பதிவேடு, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பதிவேடு மற்றும் கையிருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்குள்ள மகப்பேறு பிரிவுக்கு சென்றார். அங்கு எந்த நேரமும் சுத்தமாக இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இங்கு பொதுமக்களின் வசதிக்காகவும், உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை, இலவச அமரர் வாகனச் சேவை சரியாக இயங்கவும், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளையும் தமிழ்நாடு சுகாதார திட்ட இணை இயக்குநர் கே.எஸ்.திருநாவுக்கரசு கேட்டறிந்தார். அப்போது உடன் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரகலாதன், நிலைய மருத்துவர் அன்புவேல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் மாவட்டத்தி்ல உள்ள 9 அரசு மருத்துவமனைகளில் தலா மூன்று மருத்துவமனைகள் வீதம், இக்குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் வித்யா, பரமசிவம், சுனில் ஆகியோர் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தகக்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.