சிதம்பரத்தில் இரு போலி மருத்துவர்கள் கைது: டிஎஸ்பி ஆர்.ராஜாராம் அதிரடி நடவடிக்கை
சிதம்பரம் நகரில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டார்.
சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் இன்று கைது செய்தனர்.
சிதம்பரம் நகரில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவம் படித்த சான்றிதழ் இல்லாமல் சிதம்பரம் வேங்கான்தெருவில் கிளினிக் மற்றும் மருந்துக்கடை வைத்து சிகிச்சை அளித்து வந்த சங்கர் (38), பொன்னம்பலநகரில் மருந்துகடை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவர் போல் சிகிச்சையளித்து வந்த சரவணன் (38) ஆகிய இருவரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
போலீஸார் விசாரணையில் போலி மருத்துவர் சங்கர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும், மற்றொருவரான சரவணன் டி.ஃபார்ம் படித்துள்ளார். இவர் தனது தந்தை பாலு ஹோமியோபதி மருத்துவராக இருந்ததால் அவரிடம் பெற்ற அனுபவத்தினால், தந்தை இறந்த பின்பு சரவணன் மருத்துவர் போல் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.