அண்ணாமலைப் பல்கலையில் கனரா வங்கி கல்விக்கடன் சிறப்பு முகாம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கனராவங்கியின் இரண்டு நாள் கல்விக்கடன் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. இன்று பொறியியல் புல மாணவர்களுக்கு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கனராவங்கியின் இரண்டு நாள் கல்விக்கடன் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. இன்று பொறியியல் புல மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மருத்துவப்புல மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொடக்கவிழாவிற்கு கனராவங்கி திருச்சி மண்டல பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் முகாமை தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்கினார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்நதம், பொறியியல் புல முதல்வர் டி.வேலுசாமி, திருச்சி மண்டல துணைப் பொதுமேலாளர் எஸ்.சேகரன், உதவிப் பொதுமேலாளர் எஸ்.கலைச்செல்வன், மண்டல மேலாளர் எஸ்.கருணாகரன், கிளை மேலாளர் எம்.ராமலிங்கம், பல்கலைக்கழக எஸ்சி., எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்குமாறு கனரா வங்கி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தேன். அதனடிப்படையில் இங்கு சிறப்பு முகாமை அமைத்துள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து கல்விக்கடனை பெற்று பயனடைய வேண்டும் என்றார். பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவிக்கையில் 'கனரா வங்கி 12 மாவட்டங்களில் 10 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 10 நாட்களில் விசாரணை முடிவுற்று கல்விக்கடன் வழங்கப்படும். சிறப்பு முகாமில் மாணவர்களிடம் பெறும் விண்ணப்பங்களில் அவரது பெற்றோர் மற்றும் மாணவரது செல்போன் எண்ணை பெறுகிறோம். அதன் மூலம் அவர்கள் அருகாமையில் உள் கனராவங்கியில் கடன்பெற வழிவகை செய்துள்ளோம். மாணவியர்களுக்கு கல்விக்கடன் வட்டியில் 0.5 சதவீதம் குறைத்து சலுகை வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.