தேரோட்டத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பச்சையப்பன் அறக்கட்டளையினரின் அலட்சியம்தான் காரணம்: தீட்சிதர்கள்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பச்சையப்பன் அறக்கட்டளையினரின் அலட்சியம்தான் காரணம் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பச்சையப்பன் அறக்கட்டளையினரின் அலட்சியம்தான் காரணம் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேசதீட்சிதர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
உலக புகழ்பெற்ற பாரம்பரியமிக்க சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் தேர் திருவிழா பக்தர்கள் மண் நோகும்படி நடந்துள்ளது. இதற்கு பச்சையப்பன் அறக்கட்டளையினரின் அலட்சியமும், அறக்கட்டளைக்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர்தான் காரணம்.
நடராஜர் கோயில் தேர் உற்சவம் பச்சையப்பன் அறக்கட்டளை மூலம் நடைபெறும். மேலும் தேர்கள் பராமரிப்பது, சீரமைப்பது பச்சையப்பன் அறக்கட்டளைதான். ஆனால் அவர்கள் தேர்களை திருவிழாவிற்கு முன்னதாக செப்பணியிடவில்லை. இருப்பினும் தற்போது பொதுப்பணித்துறையினர் தெரிவித்த மாற்றங்கள், சீரமைப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டும், தேர்களை முட்டுக்கட்டை போடாமலும், நிறுத்தாமலும் வீதிவலம் வர வேண்டும் என தெரிவித்தது வேதனையளிக்கிறது. பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
தேரோட்டத்தின் போது மக்கள் வீதிகளில் தங்களது வீட்டிற்கு முன்பு தேர்களை நிறுத்தி ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பட்டு, மாலை சாற்றி, நிவேத்தியம் செய்து மண்டகப்படி பூஜை செய்வது தொன்று, தொட்டு நடைபெற்றும் வரும் பாரம்பரியமாகும். அதிகாரிகளின் வற்பறுத்தலினால் இம்முறை தேர்கள் மண்டகப்படிக்கு நிறுத்தாமல் சென்றதால் மக்கள் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர். எனவே பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் உடனடியாக வருகிற ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்திற்குள் தேர்களை செப்பணியிட்டு சீரமைத்து தரவேண்டும் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.