உச்சநீதிமன்ற கைவிரிப்புக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்
9-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழகத்திற்கு உடனடியாக நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்திரவிட உச்சநீதிமன்றம்
காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கைவிரிப்புக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜன.29-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழகத்திற்கு உடனடியாக நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்திரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. காவிரி சிக்கலில் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய இந்நாட்டின் உயரிய நீதிமன்றம் காவிரியில் தமிழகத்தின் சட்ட உரிமையை நிலை நாட்டாமல் கைவிரித்துள்ளதற்கு ஜன.30-ம் தேதி கூடிய தமிழக உழவர் முன்னணி செயற்குழுக்கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடக அணைகளில் உள்ள 16 டி.எம்.சி நீரில் பெங்களூரின் நான்கு மாத குடிநீர் தேவைக்காக 4 டி.எம்.சி நீரை வைத்துக் கொண்டு மீதி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட கருகும் பயிர்களில் பாதியையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக வழக்குரைஞர் வாதிட்டபோது கர்நாடக வழக்குரைஞர் ஃபாலிநார்மன் ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என உச்சநீதிமன்றத்திலேயே தெரிவித்தார். கர்நாடக அணைகளில் எவ்வுளவு நீர் இருந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம் என தொடர்ந்து கர்நாடகம் கூறுவதை உச்சநீதிமன்றம் கண்டிக்காமல், காவிரி ஆணையத்திடம் முறையிடுங்கள் என தமிழகஅரசை அறிவுறுத்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே தமிழகஅரசு இனி உச்சநீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்தி தமிழக அரசியல் கட்சிகளையும், விவசாயிகளை ஒன்று திரட்டி மத்தியஅரசு நரிமணம் பெட்ரோல் உள்ளிட்ட தமிழக கனி வளங்களை எடுப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். மத்தியஅரசுக்கு செலுத்தும் கம்பெணி வரிகள் போன்றவற்றை தமிழகஅரசு செலுத்தாமல் நிறுத்த வேண்டும். கர்நாடகத்திற்கு செல்லும் பாதைகளை மூடி பொருளாதார தடை விதிக்க வேண்டும். நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.