தருமபுரி பகுதியில் 3 இடங்களில் விரைவில் ரயில்வே மேம்பாலம்: ஏ.கே.மிட்டல்
தருமபுரி பகுதியில் ரயில் நிலையங்கள் மற்றும் இடங்களை தென்மேற்கு மண்டல ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே. மிட்டல் இன்று ஆய்வு நடத்தினார்.
தருமபுரி பகுதியில் ரயில் நிலையங்கள் மற்றும் இடங்களை தென்மேற்கு மண்டல ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே. மிட்டல் இன்று ஆய்வு நடத்தினார். தலைமைப் பொறியாளர், பெங்களூரு பகுதியில் உள்ள உயரதிகாரிகள் குழுவுடன் தருமபுரி பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தனி ரயில் மூலம் வந்த அவர், சேலம் ஓமலூரில் இருந்து கிருஷ்ணகிரி - பெங்களூர் வழித்தடத்தில் உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரையுள்ள 10க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள், சரக்கு முன்பதிவு மையங்கள், பயணச்சீட்டு பதிவு செய்யும் இடங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், பயணிகளிடமும், பயணிகள் சங்கங்களிடமும் அவர்களின் கோரிக்கைகள், புகார்களைப் பெற்றுக் கொண்டார். தருமபுரி பெண்ணாகரம், அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி ஆகிய 3 ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்று கூறிய அவர், இந்த திட்டத்துக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களில் இடம் மற்றும் பகுதி மாநில அரசிடம் உள்ளதால், தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார் அவர்.