முகப்பு
தற்போதைய செய்திகள்

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர்

Updated On : 10 ஜூலை, 2013 at 5:55 PM
பகிர்:

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சரோஜா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.செல்லசாமி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேங்கடபதி, ஆர்.வைரமணி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஐ.ஞானசௌந்தரி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.சி.கோபிகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடிப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர், உதவியாளருக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளையும், மே மாதம் முழுவதையும் விடுமுறைக் காலமாக அறிவிக்க வேண்டும், வேலைப் பளுவைத் திணிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.ரஹமத்பீ, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரேமா உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி நூற்றுக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.