நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதால் மனமுடைந்த மத்திய பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் கொசவம்பட்டி ரோஜாநகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் பாலுச்சாமி(28) மத்திய பாதுகாப்புப் படை காவலராக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் செய்து கொள்ள ஒரு மாத விடுமுறையில் கடந்த 15ஆம் தேதி நாமக்கல் வந்த அவர், வீட்டிலுள்ள ஒரு அறையில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது சகோதரி மணி, இன்று காலை விழித்தபார்த்தபோது பாலுச்சாமி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்லமுத்து தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பாலுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பாலுச்சாமிக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாலுச்சாமிக்கு அளிக்கப்படும் அடுத்த விடுமுறை நாட்களில் திருமணம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில் பாலுச்சாமியும், மணப்பெண்ணும் அலைபேசி மூலமாக பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அலைபேசியில் மணப்பெண்ணிடம் பேசிய பாலுசாமி, தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனராம். இதனால், மனமுடைந்து காணப்பட்ட பாலுச்சாமி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.