முகப்பு
தற்போதைய செய்திகள்

குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை: விஜயகாந்த் கேள்வி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு ஒன்றுக்காக நேரில் ஆஜரானார். அப்போது இந்தக் கேள்வியை எழுப்பினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

குட்கா பான்மசாலாவை தடை செய்த அரசு டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு ஒன்றுக்காக நேரில் ஆஜரானார். அப்போது இந்தக் கேள்வியை எழுப்பினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை.

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை.

திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வருக்கு வர வேண்டும் என்றார். 

அப்போது செய்தியாளர்கள், அவையில் இருந்து பேரவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் விவகாரத்தில் நீதிமன்றமே சரியான நடவடிக்கைதான் என்று குறிப்பிட்டதே என்று கேட்டபோது, நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார் விஜயகாந்த்.

மேலும், குட்கா பான்மசாலா போன்றவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது நல்ல நடவடிக்கைதானே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அப்படியெனில் டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று பதில் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2012ம் ஆண்டு ஆக.28ம் தேதி திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்த நாள் பொதுக்கூட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விஜயகாந்த் பேசியபோது, தமிழக அரசையும் முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக, இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார் விஜயகாந்த். இந்த வழக்கு பின்னர் வரும் ஆக.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தான் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.