அண்ணாமலைப் பல்கலையில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளின் அனுமதி சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு வருகிற ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும்,பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தலைமையில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கலந்தாய்வு (கவுன்சிலிங்) சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலக கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இருக்கைகள் மற்றும் கணினி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் வரும் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற பல்கலைக்கழக ஊழியர்களை வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.