முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுநீரக விற்பனை விவகாரம்: சிபிசிஐடி காவல்துறையின் அடுத்த இலக்கு வருவாய்த்துறை

சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் சங்ககிரியைச் சேர்ந்த இடைத்தரகர் அய்யாவு (51), பெரிய மணலி சீனிவாசன் (35), குமாரபாளையம்

Updated On : 29 ஜூன், 2013 at 6:03 PM
பகிர்:

தருமபுரி சிறுநீரக விற்பனை வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்த கட்டமாக சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் அளித்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் சங்ககிரியைச் சேர்ந்த இடைத்தரகர் அய்யாவு (51), பெரிய மணலி சீனிவாசன் (35), குமாரபாளையம் ஷாஜகான் (45), சங்ககிரி வடிவேல் (45), சிறுநீரகத்தை விற்க முயன்ற பாப்பிரெட்டிப்பட்டி பாலசுப்பிரமணியம், ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 8 பேர்களை கைது செய்தனர்.இவர்களில் சேலத்தைச் சேர்ந்த பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் கணேசன் பண மோசடி செய்ததாக கைதாகி உள்ளார். இந்த நிலையில் சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த நாட்குறிப்பு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

அதன் அடிப்படையில் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சேலத்தில் கைதான தங்கவேலுவின் மகன், மருமகள் ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் சனிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட அவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தங்கவேல், வரும் ஜூலை 12-ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில இடைத்தரகர்கள், மருத்துவர்கள், சிறுநீரக தானம் பெற்றவர்களிடமும் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட உள்ளனர்.இதைத் தொடர்ந்து சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நெருங்கிய உறவுகளுக்கு இடையேயான உறுப்பு தானம் எளிமையான சட்ட நடைமுறைகளுடன் நிறைவடையும் அதே நேரத்தில் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடையே உறுப்பு தானம் பெறுவது கடுமையான சட்டங்கள், விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி சிறுநீரகம் வழங்கும் நபரின் ஆண்டு வருமான சான்று, இருப்பிடச் சான்று, உறுப்புதானத்தை கண்காணிக்கும்  குழுவின் ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இந்த கும்பலால் வழங்கப்பட்டுள்ள சிறுநீரகங்கள் அனைத்தும் உறவினர் அல்லாதவர்களிடையே நடைபெற்றுள்ளதால், இவர்களுக்கு எப்படி அரசு அதிகாரிகளின் சான்றிதழ்கள் கிடைத்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.