முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்தியில் புதிய அரசு அமைய தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்:தா.பாண்டியன்

மக்களைவை தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசு அமைய தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி

Updated On : 28 மார்ச், 2013 at 2:16 PM
பகிர்:

மக்களைவை தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசு அமைய தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார்.

 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கடலூர் தேரடித்தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டசெயலர் எம்.சேகர் தலைமை வகித்தார்.

 கூட்டத்தில் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளெல்லாம் பதவிக்கு வந்திருக்கிறார்களே, ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி இன்னும் ஆட்சியை பிடிக்கவில்லையே என்று சொல்கிறார்கள்.

Advertisement

கம்யூனிஸ்டு கட்சி வளரவில்லையென்றால் அதற்கு கவலைப்படுவது உழைக்கும் மக்கள் தானே தவிர கம்யூனிஸ்டு கட்சி தோழர்கள் அல்ல.  உங்கள் காவலாளி பலமாக இல்லாமல் பலவீனமாகிக்கொண்டே இருக்கிறான் என்றால் உங்களுக்குத்தான் பாதுகாப்பில்லை. 

ஒவ்வொரு குடிசையிலும் செங்கொடி பறந்தால் இந்த நாட்டில் அநியாயங்கள் நடக்காது. நீங்கள் செங்கொடியை ஏற்றாமல் எந்தெந்த கொடியையெல்லாமோ ஏற்றுவதால் தான் அநியாயங்கள் நடக்கிறது.

என்எல்சி தொழிலாளர்கள் நிரந்தரமாக நிரந்தரமற்ற தொழிலாளர்களாக உள்ளனர், அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தன் ஜாதிக்காரர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்தி, தேர்தலில் போட்டியிடாமலேயே மகனை அமைச்சராக்கிய மருத்துவர் ராமதாஸ் காதல் திருமணங்களை நாடக காதல் என்கிறார். இந்த உலகமே காதலில் பிறந்தது தானே. தமிழ் கடவுளான முருகன் மலை ஜாதிப்பெண்ணைத்தானே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வருகிற மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது. தமிழகத்தில் உள்ள காங்கிரசார் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை தவிர்த்து வேறு மாநிலத்தில் போட்டியிட வேண்டும், இது ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும். திமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். குஜராத்தில் 21 தொகுதிகளில் மோடிக்கு அதிகபட்சம் 15 தொகுதிகள் கிடைக்கும், 15 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மோடி பிரதமராக வர முடியுமா? முடியாது.

 எனவே வருகிற மக்களவை தேர்தலுக்குப்பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. அதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி முக்கிய பங்காற்றும் என்றார்.

 முன்னதாக தேசிய செயலர் டி.ராஜா,  தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச்செயலர்கள் சி.மகேந்திரன், ஜி.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், வட்ட செயலர் ஜெகரட்சகன், நகர செயலர் குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.