முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் பெண் குழந்தை கடத்தி ரூ.4 லட்சத்துக்கு விற்பனை : மூன்று பேர் கைது

ஈரோட்டில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

ஈரோட்டில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கிம் (34). அவரது மனைவி மும்தாஜ் (29), இந்த தம்பதியினருக்கு அப்துல் ரகீம் என்ற 6 வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்ததால், குழந்தை தனியாக சிறப்புப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.  நேற்று மாலை குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்த குழந்தையை மருத்துவர்கள் கொண்டு வரும்படி கேட்டதாகக் கூறி கொண்டு சென்றார். பிறகு தான் குழந்தை கடத்திச் செல்லப்பட்ட விவரம் பெற்றோருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ஈரோடு நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஈரோடு அருகே கே.கே.நகரில் உள்ள மருத்துவமனை பணியாளர் ஜெகதாம்பாளின் வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியபோது, அந்த சிசுவை கடத்திச்சென்று கவுந்தப்பாடியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ராமசாமி (63), அவரது மனைவியும், ஓய்வுப்பெற்றத் தலைமை  ஆசிரியையுமான சந்திரா (60) ஆகியோரிடம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கவுந்தப்பாடிக்குச் சென்ற போலீஸார் சம்பந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது தனது மகனுக்கு குழந்தை இல்லாததால் சிசுவை வாங்கியதாக கூறினர். அவர்கள் வீட்டில் இருந்த  அந்த பெண் சிசுவை போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ராமசாமி, சந்திரா, ஜெகதாம்பாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிசுவை மருத்துவமனை நிர்வாகிகள் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.