ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த சூதாட்ட கும்பல் தலைவர் பிரசாந்த் திங்கள்கிழமை சரணடைந்தார்.
இது குறித்த விவரம் வருமாறு:
ஐ.பி.ல். கிரிக்கெட் போட்டி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையிóல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் சந்தேகம்படும்படியான நபர்கள் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களின் செல்போனை ஓட்டு கேட்டனர். இதன் அடிப்படையில் அப் பிரிவு போலீஸார் 13 பிரிவுகளாக சென்று சென்னையில் 13 இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஸ் பஜாஜ், ராஜாஅண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேதச்சாலம் என்ற விருதாச்சலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சௌகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்துó ரூ. 15 லட்சம் ரொக்கம், 10 லேப்டாப், 4 கம்ப்யூட்டர், 5 வயர்லஸ்போன், 24 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் சூதாட்ட தரகர்கள் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறப்படுகிறது. விசாரணையில் இந்தக் கும்பல் தங்களுக்கு தொடர்பை வைத்துக் கொள்ள ஒரு சங்கத்தை நடத்தி வந்ததும், அந்த சங்கத்தின் தலைவராக அயனாவரம் மேடவாக்கம் கூட் சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும் இந்த கும்பலுக்கு பிரசாந்துதான் தலைவராக இருந்ததும் விசாரணையில் தெரிந்தது. ஆனால் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டதும் பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். இதில் பிரசாந்த் கார் சென்னை விமான நிலையத்தில் நின்றதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது. இதனால் அவரை கைது செய்வதற்குரிய தீவிர நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.
சூதாட்டத் தலைவர் சரண்:
மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட தரகர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் சூதாட்ட கும்பலின் தலைவராக போலீஸாரால் கருதப்பட்ட பிரசாந்த், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திங்கள்கிழமை நண்பகல் சரணடைந்தார். சரணடைந்த அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிரசாந்தை அழைத்துக் கொண்டு அவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் செய்தனர். இதில் அங்கிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர்,செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல வேப்பேரி,கெல்லீஸ் உள்ளிட்ட 3 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே பிரசாந்த் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் பெயரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணையின் தீவிரம் கருதி மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் மனு தாக்கல்:
இதற்கிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேர்களில் ஹரிஸ் பஜாஜ், பிரவீண்குமார் என்ற பப்பு, லக்கி என்ற நர்பத், வேதாச்சலம் ஆகிய 4 பேரிடம் 10 நாள்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சைதாப்பேட்டை 11வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனு மீதான விசாரணையை இம் மாதம் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சூதாட்ட கும்பலில் பிரசாந்துக்கு அடுத்தப்படியாக முக்கிய தரகர்களாக இருந்த இவர்கள் 4 பேரிடம் விசாரணை செய்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் விசாரிக்க அனுமதிக் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இதுவரை கீழ்நிலை தரகர்களை மட்டுமே கைது செய்த போலீஸார், இப்போது கும்பலின் தலைவரான பிரசாந்த் சரணடைந்து இருப்பது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. பிரசாந்த் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிடலாம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நினைக்கின்றனர். இதில் சென்னையில் உள்ள பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.