உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி நத்தம் காலனி மக்கள் மனு
நவம்பர் 7-ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி நத்தம்காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
நவம்பர் 7-ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி நத்தம்காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் அருகே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையொட்டி கடந்த 2012 நவம்பர் 7-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்தவர்களது வீடுகளும், உடமைகளும் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தில் மறுவாழ்வு தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகள் இது வரை முழுமையாக நிறைவேற்றவில்லை. மேலும், எங்களுக்கு வழங்கப்பட்ட புதிய வீடுகளும் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் கொட்டைகளில் மிகவும் சிரமத்தோடு வசித்து வருகிறோம். மேலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய வங்கிக்கடன்களை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய கிராமங்களிலேயே பொதுமக்கள் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட பின்னர், ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், கோட்டாட்சியக் மேனகா, வட்டாட்சியர் செந்தில்அரசு ஆகியோர் மனு அளித்தவர்களிடம் பேச்சு நடத்தினர்.
இதில், கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். மேலும், மாவட்டத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளதால், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த வேண்டாம் என அதிகாரிகள் அவர்களிடம் வலியுறுத்தி போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாகக் தெரிவித்ததாக் கூறப்படுகிறது.