தற்போதைய செய்திகள்

மனிதர்களின் சுயநலத்துக்காக வேட்டையாடப்படும் தேசிய மரம்

மனிதர்களின் சுயநலத்துக்காக தேசிய மரமான ஆல மரம், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது.

ஜெபலின்ஜான்

மனிதர்களின் சுயநலத்துக்காக தேசிய மரமான ஆல மரம், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது.
இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கிராம சபை கூட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் என பல்வேறு வகையில் மனிதர்களுக்கு பயனுடையதாக ஆல மரம் இருந்து வருகிறது. ஆனால், நகரமயமாக்கலால் மனிதர்களின் சுயநலம் காரணமாக, பொதுநலம் தரும் ஆல மரங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன.
இம்மரங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள், இதை கண்டும்காணாமல் விட்டுவிடுவதால் ஆல மரங்களை வேட்டையாடுவோர் எளிதில் தப்பிவிடுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுபோல பல இடங்களில் ஆல மரங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகள் வளர்ந்த ஆல மரங்களை விழுதுகளை நறுக்கி பலவீனப்படுத்தி சாய்த்தல், வேர்களுக்கு அமிலம் (ஆசிட்) ஊற்றி காயவைத்து சாய்த்தல் என பல்வேறு உத்திகளை சிலர் கையாண்டு ஆல மரங்களை அழித்து வருகின்றனர்.
ஈரோடு மூலப்பாளையம் அருகே பெரியசெட்டிப்பாளையம் பகுதியில் 43 வயதான ஆல மரம் இதுபோல வேட்டையாடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள பனை மரத்தின் உச்சியில் மட்டைகளுக்கு இடையே வளர்ந்த சிறிய ஆல மரக் கன்றை பிடுங்கி, இப்பகுதியில் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.
குழந்தையை வளர்ப்பது போல வளர்க்கப்பட்ட இந்த ஆல மரம், 43 ஆண்டுகளில் செழித்து வளர்ந்து விழுதுகளை பரப்பி அசுர பலத்துடன் இருந்தது. இந்த மரத்தடியில் இளைஞர்கள் கேரம் விளையாடுவதும், பொழுதுபோக்குக்காக முதியவர்கள், பெண்கள் மரத்தடியில் அமர்ந்து பேசுவதும் என பல விஷயங்களுக்கு இம்மரம் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக இப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது சுயநலத்துக்காக இம்மரத்தின் விழுதுகளை வெட்டத் தொடங்கினர். பொதுமக்களின் எதிர்ப்பு இருந்தாலும் அரசியல் அதிகாரத்தால் அந்த எதிர்ப்புகள் காணாமல் போய்விட்டன. கடந்த வாரம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இம்மரத்தின் வேரை முழுவதும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இம்மரம் அசுர பலத்தை இழந்து தீபாவளி தினத்தன்று கீழே சாய்ந்துவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், இம்மரம் பலமான காற்றில் சாய்ந்துவிட்டது என ஈரோடு வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிவிட்டனர். இத்தனை ஆண்டுகள் பலமாக இருந்த இம்மரத்தை வேட்டையாட சிலர் பயன்படுத்திய உத்திகளை வெளியே சொல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.
இம்மரம் வீழ்ந்தப்பட்ட சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்.
இது குறித்து ஈரோடு வட்டாட்சியர் சாகுல் ஹமீதுவிடம் கேட்டபோது, தீபாவளி தினத்தில் பலத்த காற்று காரணமாக இந்த ஆல மரம் கீழே விழுந்துவிட்டது என வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் அறிக்கை அனுப்பியுள்ளனர். ரூ.1,000 அபராதம் விதித்து இம்மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
சாலையோரத்தில் மரங்கள் விழுந்தால் ஏன் விழுந்தது என முழுமையாக விசாரணை நடத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு. அப்படியே காற்றில் விழுந்தாலும் அதை பகிரங்கமாக ஏலம் விட்டுத்தான் அகற்ற வேண்டியது நடைமுறை.
அதற்காக ரூ.1,000 அபராதம் செலுத்தி யாரோ ஒருவர் எடுத்துப்போக செய்வது எப்படி நியாயமாகும் என்பது இப்பகுதி மக்களின் மனதில் எழும் கேள்வி.
ஆல மரத்துக்கு ஆபத்து என்றால் தொடர்புகொள்ளுங்க...
இது குறித்து கொங்கு மண்டலத்தில் ஆல மர பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வரும் கோவை "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசன் கூறியது:
தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் கலங்கரை விளக்கமாக ஆல மரங்கள் காட்சி அளித்து வருகின்றன. ஆல மரத்துக்கு எல்லா வகையான பறவைகளும் வந்து ஆலம்பழத்தை தின்று வெளியே சென்று விதைகளை விதைக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆல மரம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நகரங்களில்கூட ஆல மரத்தை நட வேண்டும் என "ஆல மரத்தை பாதுகாப்போம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தேசிய மரமான ஆல மரத்தை வெட்டுவது தேசிய அவமானம். ஆல மரங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் 94430-22655 என்ற செல்போனில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
தினமணியால் காப்பாற்றப்பட்ட ஆல மரம்
ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொடக்குறிச்சி அருகே தானத்தம்பாளையத்தில் 41 வயது ஆல மரத்தை வெட்டுவதற்காக கிளைகளை நறுக்கினர். மறுநாள் அமிலம் ஊற்றி மரத்தை காயவைக்க இருப்பதாக தகவல் கிடைத்ததால் இது குறித்து தினமணியில் 30.11.2012-இல் கட்டுரை வெளியானது. இதைத் தொடர்ந்து அந்த மரத்துக்கு அமிலம் ஊற்றப்படுவது தடுக்கப்பட்டது. இப்போது அம்மரத்தில் மீண்டும் கிளைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT