பலத்த காற்றுடன் மழை: சிதம்பரம் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புயல் காரணமாக சிதம்பரத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சிதம்பரத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் கடலூர்-நாகப்பட்டினம் இடையே சனிக்கிழை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஏற்றப்பட்டுள்ளது. சனிக்கிழமை மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்த வானமாக காட்சியளிக்கிறது. கனமழையினால் நகரில் அனைத்து சாலைகளில் நீர் பிரண்டு ஓடுவதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காட்சியளிக்கிறது. காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீட்டை, விட்டு வெளியேறாததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த சூரைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வருவாய்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே வல்லம்படுகை, புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பெரியகுப்பம், ஜெயங்கொண்டப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த் மேற்பார்வையில் வட்டாட்சியர்கள் எம்.விஜயா (சிதம்பரம்), வெங்கடாசலம் (காட்டுமன்னார்கோயில்) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுகுப்பம், சின்னூர், சி.புத்துப்பேட்டை, கிள்ளை, சாமியார்பேட்டை பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வெள்ளிக்கிழமை காலை முதல் கடல் கடும்சீற்றத்துடன் காட்சியளிக்கிறது.