சிதம்பரம் : நூதனமான முறையில் மோசடி செய்த இருவர்
ிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக பிரமுகர் எனக் கூறிக் கொண்டு பொது மக்களிடம் நூதன முறையில் பணம் வசூலித்த டிப்-டாப் ஆசாமி
சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக பிரமுகர் எனக் கூறிக் கொண்டு பொது மக்களிடம் நூதன முறையில் பணம் வசூலித்த டிப்-டாப் ஆசாமி இருவரை பொதுமக்கள் பிடித்து போவீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள வி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர் யாசின் (32). இவரிடம் கடந்த நவ.11-ம் தேதி வந்த இரு டிப்-டாப் ஆசாமிகள் திருவக்கரை ஊராட்சி தலைவர் என்றும், கோயிலுக்கு அன்னதானம் போட வேண்டும் எனக்கூறி ரூ.3 ஆயிரம் பணத்தை வசூலித்து சென்றுள்ளனர். பின்னர் கடந்த இரு தினங்கள் முன்பு சிதம்பரம் முத்தையாநகர் திருவள்ளுவர் சாலையில் புது வீடு கட்டி வரும் நாகப்பன் (69) வீட்டிற்கு சென்று ஊராட்சி மன்றத் தலைவர் அனுப்பினார் எனக்கூறி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டி ரூ.7 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர். இதுபோன்று பலரிடம் ரூ.2 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.ஆயிரம் என புதிதாக வீடு கட்டுபவர்களிடம் பணம் வசூலித்துவிட்டு இருவரும் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபாலிடம் தெரிவித்த போது, அதுபோன்று நான் யாரையும் அனுப்பவில்லை. பணம் கேட்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை முத்தையாநகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் கார்த்திக் என்பவரது வீட்டிற்க்கு மேற்கண்ட நபர்கள் சென்று பணம் கேட்டுள்ளனர். உடனே அவர் ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று மர்ம நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் மேற்கண்ட மூவரும் கடலூர் அருகே உள்ள வன்னியர்பளையம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (53), குத்புதீன் (63), என தெரியவந்தது. மேற்கண்ட இருவரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக பிரமுகர், அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் எனக்கூறி புதிதாக வீடு கட்டுபவர்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது.
பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால் மேற்கண்ட மூவரையும், அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், அவர்கள் பயன்படுத்திய இரு செல்போன்கள் ஆகியவற்றுடன் அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். வி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த யாசின் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப் பதிந்து மேற்கண்ட ஆறுமுகம், குத்புதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.