விருதுநகர் அருகே கண்மாய்க்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் வருகை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி, வெம்பக்கோட்டை, சங்கரபாண்டியபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, கோல்லம்பட்டி, கோல்வார்பட்டி, செங்குன்றாபுரம், எலிங்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட நீர் வரத்துடன் காணப்படும் கண்மாய்களுக்கு
விருதுநகர் அருகே கண்மாய்க்கு 3 ஆண்டுகளுக்கு பின்பு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி, வெம்பக்கோட்டை, சங்கரபாண்டியபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, கோல்லம்பட்டி, கோல்வார்பட்டி, செங்குன்றாபுரம், எலிங்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட நீர் வரத்துடன் காணப்படும் கண்மாய்களுக்கு வெளிநாட்டு பறவைகளான கூழைக்கிடா, செங்கால்நாரை, கருப்பு கொக்கு உள்ளிட்டவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான தட்பவெப்ப நிலை இருப்பதாலும், கரையோரங்களில் வளர்ந்திருக்கும் மரங்களும் மற்றும் காட்டுப் பகுதியில் நெற்பயிர் விவசாயமும் செழிப்பாக இருப்பதாலும் இரையும் கிடைக்கும் என்பதால் இப்பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதுமான மழைப் பொழிவு இல்லாமல் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கண்மாய்களுக்கான நீர்வரத்தின்றி வெறிச்சோடி இருந்தது. தற்போது, புயல் அடித்ததன் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் கண்மாய்களில் போதுமான தண்ணீர் இன்றியே காணப்படுகிறது. ஆனால், விருதுநகர் அருகே உள்ள எலிங்கநாயக்கன்பட்டி கண்மாயில் தண்ணீர் தேங்கி சுற்றிலும் பசுமையாகவும், நெற்பயிர் விவசாயமும் நடைபெறுகிறது. இதையடுத்து, கடந்த வாரம் முதல் நூற்றுக்கணக்கான கூழைக்கிடா, செங்கால்நாரை மற்றும் கருப்பு கொக்குகள் ஆகியவை ஆஸ்திரேலியா, கனடா நாடுகளிலிருந்து வருகை அதிகரித்துள்ளது.
Advertisement
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சி.சந்திரன் கூறுகையில், இதுபோன்ற பறவைகள் மரங்கள் பசுமையாக அடர்த்தியாகவும், தண்ணீர் நிரம்பியும் இருந்தால் கண்மாய்களுக்கு வருவது வழக்கம். தற்போது, 3 ஆண்டுகளுக்கு பின் மழை பெய்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள கண்மாய்களில் தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், இங்கு மட்டுமே இருப்பதால் சில நாள்களாக இங்கு வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு தேவையான இரையான மீன் வகைகளும் அதிகமாக இருக்கிறது.
இப்பறவைகள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறித்த பின் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன் இருப்பிடங்களுக்கு பறந்து செல்லும். இதனால், இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, வேட்டையாட விடாமல் தடுத்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இப்பறவைகளை பார்ப்பதற்காக சுற்றுக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாகவும் வந்து செல்வதாகவும் தெரிவித்தார்.